கவிதைகள் (All)

ஒரு தாயின் மன்னிப்புக் கடிதம் :

அன்பு மகளே…

‘ஒரு மௌன அழைப்பில்’
உன் ஆதங்கம் கண்டேன்
என் சொர்க்கத்துக் கனியே! என்னை மன்னித்து விடு.
உன்னை எனது வயிற்றிலேயே
கொலை செய்த பாவிதான் நான்
ஏன் இந்த முடிவு?
உனது அண்ணனை வயிற்றில் சுமந்த நாள் முதல்
வேதனை
அறியா வயதில் பிரசவ வலியின் வேதனை வேறு
அதனால் ஏற்பட்ட கோழைத்தனத்தால்
எடுத்த முடிவு அது.
“என்னால் தாங்க முடியாத பாரத்தை
என் இறைவன் என் மீது சுமத்தமாட்டான்”
என்ற மார்க்க ஞானம் அப்போது இல்லை என்
கண்ணே!
பெண்ணிற்குப் பிரசவத்தின் போது
ஏற்படும் வேதனைக்கு
இறைவன் புறத்தில் கொடுக்கப்படும் சன்மானம் பற்றி
அறியாத பாவியாக அன்று இருந்துவிட்டேன்.
அதனால் உன்னை இழந்தேன் என் கண்ணே!
சகிப்புத்தன்மையும், தைரியமும் இல்லாத
கோழைதான் உன் அன்னை அன்று
என் சுவனத்துக் கனியே!
இன்று நீ இருந்தால் உனக்கு வயது 21.
கருவிலேயே உன்னைக் கொன்ற
கயமைத்தனத்துக்குத் தண்டனையோ என்னவோ
இறைவன் புறத்திலிருந்து எனக்கு
வலியும் வேதனையும்
அதிகமாக வருகின்றன நோய்வடிவில்
எந்த வலிக்குப் பயந்தேனோ அதனை அடிக்கடி
அனுபவிக்கிறேன்
வலி வரக்கூடாது என முடிவு எடுக்க நான் யார்?
உன்னை இழந்த பாதிப்புகூட
இல்லாமல் இருந்தேன் 14 ஆண்டுகளாய்
கடந்த 7 ஆண்டுகளாய்த்தான்
உன் நினைவு என்னை வாட்டுகிறது
ஏன் தெரியுமா?
இந்தக் காலகட்டத்தில்தான்
மார்க்கத் தெளிவு பெற்றேன்.
உன்னை அழித்தபோது எந்த வலியால் துடித்தாயோ
அதனைவிட கொடிய மனவலியுடன்
தவிக்கிறேன் என் கண்ணே!
என் சொர்க்கத்துக் கனியே
என் பாவத்தை மன்னித்து விட
இறைவனிடத்தில் உன் தாய்க்காக துஆ செய்.
அறியாத வயதில்
கோழைத்தனமாக செய்த பாவத்திற்காக
மன்னிக்க வேண்டுகிறேன்.
என்றும் உன் நினைவில்
கண்ணீருடன் உன் தாய்
இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்
சுவனத்தில்.
– பஷீரா
நன்றி- சமரசம், 1-15 பிப்-  2012

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button