ஜி.டி. நாயுடு

இலக்கியம் கட்டுரைகள்

ஜி.டி. நாயுடு என்ற கோபால்சாமி துரைசாமி நாயுடு அவர்களே
(மார்ச் 23, 1893 – 1974) தமிழகம் தந்த அறிவியல்மேதைகளுள் ஒருவர். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர்.

இவர் கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார். ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார் எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை அவருடன் இருந்தவர்கள் விநோதமாய் பார்த்தனர்.
ஒழுக்கமான வாழ்க்கையும், அறிவுத் தாகமும், அதற்கேற்ற உழைப்பும் இருந்தால் ஒருவருக்கு சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. இது அவர் அடுத்தவருக்குச் சொன்ன அறிவுரை மட்டுமல்ல. அவருடைய வாழ்க்கையிலும் அவர் முழுமையாகக் கடைபிடித்தார். செல்வந்தராக ஆன பிறகும் கட்டுப்பாடான சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்த அவர் காலத்தையும் வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்தினார். அதனால் தான் அவரால் நிறைய சாதிக்க முடிந்தது.வாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார்.

இளம் வயதில் ஜி.டி.நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார்.
சிறிது காலத்திலேயே அவருக்கு பிறரிடம் தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போனது. வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தித் தொழிற்சாலையை நிறுவினார்.அப்போது முதலாம் உலகப் போர் துவங்கிய காலமாயிருந்ததால் அவருடைய பருத்தி தொழில் சூடு பிடித்தது. அவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமை குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார்.பின்னர் பம்பாய் சென்று பருத்தி வியாபாரத்தை தொடர்ந்தார். பம்பாய் பருத்தித் தரகர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கையிருப்பை முழுவதும் இழந்து ஊர் திரும்பினார்.

ஆனால் மனந்தளராத நாயுடு அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார். அவர் நாயுடுவின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் ஒரு பேருந்தைக் கடனாக கொடுத்து தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளிக்க வேண்டும் என்றார்.
முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன்முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கினார் நாயுடு.தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். அந்நாளிலேயே பிரயாணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று வசதிகளை செய்து காட்டியவர் நாயுடு.முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்.
இத்தகைய கண்டுபிடிப்புகள் நாயுடுவிற்கு கைவந்த கலையாகும். பல்கலைக்கழகப்படிப்பில்லாதி

ருந்தும் அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் பல.மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு.அவர் செய்து வந்த மோட்டார் வாகனத் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறைகளிலும் அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.புகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.
நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் காப்புரிமத்தை ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத்தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து தருவிக்க பெரும் முயற்சியெடுத்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை. அதனால் நாயுடுவின் அரும்பெரும் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் செய்ய முடியாமலே போய்விட்டன.ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. “பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்து லட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்”.
அதற்கு அவர் கூரிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.’

தமது கண்டுபிடிப்பு-களுக்கு மத்திய அரசு ஆத-ரவு காட்டாததைக் கண்டித்-தும், அதிகமான அளவில் வரி போட்டதை ஏற்காமலும் இருந்த நிலையில், ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை சென்னை எஸ்.அய்.ஏ.ஏ. திடலில் ஏற்பாடு செய்தார் (13.1.1954).
வேலையில்லாத் திண்டாட்-டம் என்று கூட்டத்திற்குப் பொருள் கொடுக்கப்பட்டு இருந்தது.

உண்மையில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் பொருட்டு, தம்மால் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களை பொது மக்கள் மத்தியில் உடைப்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி அது.
தந்தை பெரியார், டாக்டர் வரதராசுலு நாயுடு, ஆர்.வி. சாமிநாதன், ஏ.கோவிந்தசாமி, முன்னாள் அமைச்சர் எஸ். இராமநாதன், சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. சின்ன-துரை, முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயன், மோகன் குமாரமங்கலம், வி.கே.கே. ஜான் எம்.எல்.சி., கே.டி. கோசல் ராம், அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி முதலியோர் பங்கு கொண்டனர்.
பேசியவர்கள் அனை-வரும் மத்திய அரசை எதிர்த்து அந்தப் பொருள்-களை உடைக்க வேண்டும் என்று பேசினார்கள்.தந்தை பெரியார் பேசு-வதற்கு முன்பே பொருள்-களை உடைக்குமாறு ஏற்பாடு செய்துவிட்டார் ஜி.டி. நாயுடு.

இறுதியாகப் பேசிய தந்தை பெரியார் நீங்கள் செய்த காரியம் பைத்தியக்-காரத்தனமான காரியம் _ முட்டாள்தனமானது என்று கடுமையாகப் பேசினார்.
முட்டாள்தனம் என்ற சொல்லை வாபஸ் வாங்குமாறு கூட்டத்தினர் கூச்சல் போட்-டனர். ஆனால், தந்தை பெரியார் அவர்களோ அதற்கு மேலும் சென்று மாபெரும் மடத்தனம் _ முட்டாள்தனம் என்று ஓங்கியடித்தார்.

எதை உடைக்கவேண்-டும்? இதற்குக் காரணமான டில்லி ஆட்சியையல்லவா உடைக்கவேண்டும் என்று கர்ச்சித்தார் தந்தை பெரியார்

நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது.எனவே, மனம் உடைந்துப் போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார்.
அவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார்.விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. அடுத்து, சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார்! சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன!அதன் பிறகு பருத்திச் செடி, துவரைச் செடி என அவருடைய ஆராய்ச்சி தொடர்ந்தது.அவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள அவருடைய அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்ற பெயர் சூட்டி கவுரவித்தனர். ஆயினும் இந்திய அரசாங்கம் அவரை கண்டுகொள்ளவேயில்லை.
1938 ஆம் ஆண்டு பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார்.
தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார். தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார். இவருடைய மகன் ஜி.டி. கோபாலையும் கலைக்கல்லூரிக்கு அனுப்பாமல் தொழிற் கல்வி படிக்கச் செய்தார். அவர் இப்போது தன் தந்தை உருவாக்கிய தொழில் ஸ்தாபனங்களைக் கவனித்துக் கொள்கிறார்..

கோவைக்கு முதன்முதலில் பாலிடெக்னிக்கை அறிமுகம் செய்த ஜி.டி. நாயுடுதான்.குறுகிய,திறமையான ம்ற்றும் துல்லியம்மானதுதான் ஜி.டி. ¿¡யுடுவின் பார்முலா.அவர் உருவாக்கிய சர்தார் ஷோப் பாலிடெக்னிக்கில் 45 நாட்களில் ஆட்டோ மொபைல் இன்ஜினியர்களையும், 42 நாட்களில் ரேடியோ இன்ஜினியர்களையும் உருவாக்கி காட்டினார். சென்னை கிண்டி பொறியியல் க்ல்லூரி பேராசிரியர்களும்,மாணவர்களும் இதனை ஆச்சர்யப்படுத்துடன் பார்த்துச்சென்றனர். இராணுவ அதிகாரிகளுக்கும் இதனை சொல்லிக்கொடுத்தார்.
வழக்கத்தைவிட நீண்ட இழைகள் தரும் பருத்தியை கண்டுப்பித்து அதன் விதைகளை 10 ரூபாய்க்கு விற்றார்.ஜெர்மானியர்கள் இதனை வாங்கி கலப்பினம் தயார் செய்து அத்ற்க்கு ” நாயுடு காட்டன் என பெயரிட்டனர். நாயுடு கண்டுபிடித்த பப்பாளி விதைகள் உலகம் முழுவதும் அனுப்பபட்டன. நாயுடு தயாரித்த நீரழிவு,ஆஸ்துமா,வெள்ளைபடுதல் போன்ற நோய்களுக்கான மருந்தை அமெரிக்க நிறுவனம்மான ஸ்பைசர் பெற்றுக்கொண்டது.
2,500 ரூபாய்க்கு சிறிய ரக கார் ஒன்றை தயாரிக்க முடிவு செய்து அதன் புளு பிரிண்டையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.இதற்க்கு மட்டும் மத்திய அரசு அனுமதியும்,ஆதரவும் கொடுத்திருந்தால் நானோ காருக்கு முன்பு நாயுடு கார் வந்திருக்கும். 7/11/1967 அன்று காலை9:30 க்கு அடிக்கல் நாட்டப்பட்டு மறுதினம் மாலை 3.45 க்கு முடிக்கப்பட்ட வீட்டின் திறப்புவிழா நடந்தது.டெக்னாலஜி என்பது சாமன்யனுக்கு எட்டாத உயரம் என்பதை மாற்றி எளிமைப்படுத்தியதுதான் உயர்திரு.ஜி.டி. நாயுடுவின் சாதனை. வழக்கம் போல் சுதந்திர இந்தியா நாயுடுவைக் கண்டு கொள்ளவில்லை.

நாயுடுவின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது பல ஸ்தாபனங்களும் நிறுவனங்களும் பயிற்சி அளிக்கும் சாதனங்களையும், கருவிகளையும் இவருடைய கல்லூரிக்கு இலவசமாக அளித்தன.

இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை அவரையே சாரும்.
ஜி.டி.நாயுடு போட்டோ கலையில் அதிக விருப்பம் உள்ளவர். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில், மேல் நாட்டு வகையைச் சேர்ந்த சிறிய காமிராவால், அவரே படம் எடுத்து விடுவார். இவரது பிரசிடெண்டு ஹாலில் பெரிய _ பெரிய போட்டோக்கள் நிரம்பி உள்ளன.

ஜி.டி.நாயுடுவுக்கு செல்லம்மாள், ரெங்கநாயகி என்று 2 மனைவிகள். முதல் மனைவிக்கு கிட்டம்மாள், சரோஜினி என்ற 2 மகள்களும், 2_வது மனைவிக்கு கோபால் என்ற ஒரே மகனும் பிறந்தார்கள். ஜனாதிபதி வி.வி.கிரியும், மறைந்த தலைவர் பெரியாரும் நண்பர்களாக இருந்தார்கள்.

1973_ம் ஆண்டு இறுதியில் 80 வயது ஆனபோது ஜி.டி.நாயுடுவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. ரத்தக்கொதிப்பி னாலும், வாத நோயினாலும் அவதிப்பட்டார்.

இதற்காக வேலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு கோவைக்கு திரும்பி வந்து வீட்டில் இருந்தவாரே சிகிச்சை பெற்றார்.

ஜி.டி.நாயுடு உடல் நலம் இல்லாமல் இருப்பதை அறிந்த ஜனாதிபதி வி.வி.கிரி, மனைவி சரசுவதி அம்மாளுடன் கோவைக்கு வந்து அவரை பார்த்து உடல் நலம் விசாரித்தார். அவருடன் ஜி.டி.நாயுடு பேசினார்.

4_1_1974 அன்று அதிகாலையில் ஜி.டி.நாயுடு உடல் நிலை மோசம் அடைந்தது. நினைவு இழந்தார். அவருக்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆயினும் சிகிச்சை பலன் இன்றி காலை 9_45 மணி அளவில் ஜி.டி.நாயுடு மரணம் அடைந்தார். உயிர் பிரிந்தபோது மனைவி ரெங்கநாயகி, மகன் கோபால், மகள்கள் கிட்டம்மாள், சரோஜினி, மருமகள் சந்திரலேகா ஆகியோர் அருகில் இருந்தார்கள்.
கோவையில் அவினாசி ரோட்டில் குடியிருந்த ஜி.டி.நாயுடு தனது வீட்டு எதிரிலேயே பெரிய வளாகம் ஒன்றை அமைத்தார். அங்கு மிகப்பெரிய காட்சிக்கூடம், கலை அரங்கம், திருமண மண்டபம் போன்றவை இடம் பெற்றுள்ளன. “பிரசிடெண்ட் ஹால்” என்று அது அழைக்கப்படுகிறது. இந்த காட்சி கூடத்தில் ஜி.டி.நாயுடு கண்டுபிடித்த அனைத்து கருவிகள், பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவருடைய சாதனைகளை சித்தரிக்கும் புகைப்படங்களுடன் அலங்கரிக்கப்படுகின்றன.

நுழைவு வாயிலில் அமைந்துள்ள இரு பெரிய கண்ணாடிகள் நம்மை திகைப்பில் ஆழ்த்திவிடும். (நம் உருவத்தை நாமே நம்ப முடியாத அளவுக்கு குட்டை நெட்டையாக காட்டும்)எந்த வசதிகளும் இல்லாத சாதாரண கிராமத்தில் பிறந்து, மூளையை மட்டுமே மூலதனமாக கொண்டு முன்னேறி, தொழிற்புரட்சியை எதிர்கொண்டு சாதனைகள் படைத்த ஒரு மாபெரும் மனிதரின் சாதனைகளுக்கு சாட்சியாக திகழ்கிறது இந்த அருட்காட்சியகம் இன்று வரை…….

தொகுப்பு
-பேகம் பானு
நன்றி : பேஸ்புக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *