இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம்

இலக்கியம் இஸ்லாமியக் கட்டுரைகள் கட்டுரைகள் பொற்கிழிக் கவிஞர் மு ஹிதாய‌த்துல்லா

அப்போதே … நிகழ்ந்த அதிசயம்

( இளையான்குடி கவிஞர் ஹிதாயத்துல்லாஹ் )

இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம் – 13

( நர்கிஸில் 2ம் பரிசு பெற்ற கட்டுரை )

கலீபாக்கள் ஆட்சியில் மட்டுமன்றி, அதனைத் தொடர்ந்து வந்த முஸ்லிம்களின் ஆட்சியின் போதும் முஸ்லிம் அல்லாத மக்கள் பயமின்றி சுதந்திரமாக நடந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.  இதற்கு சில சான்றுகள்.

சர் தாமஸ் ஆர்னால்ட் என்னும் ஆங்கிலேய வரலாற்றாசிரியர்    The spread of Islam in the world என்னும் நமது நூலில் செல்ஜிக் எனும் முஸ்லிம்களின் ஆட்சியை கிறிஸ்துவர்களே வரவேற்று மகிழ்ந்ததைக் குறிப்பிடுகின்றார்.

முஸ்லிம் ஆட்சியாளர்கள் அளித்த பாதுகாப்பு உணர்வின் காரணமாகத்தான், அன்றைய துருக்கியில் பெரும்பான்மை எண்ணிக்கையினராக வாழ்ந்த கிறிஸ்துவ இன மக்களை வரவேற்க வைத்தது. அனைத்து தரப்பு மக்களிடமும் முஸ்லிம்கள் காட்டிய கருணையும், பரிவும் மனிதநேயப் போக்கும்தான் எல்லோரையும் கவர்ந்ததென அறிகிறோம்.

ஓடொடியோகியோ எனும் கிறிஸ்துவப் பாதிரியார் இரண்டாவது சிலுவைப் போரிலும் பங்கு கொண்டவர். இவர், தமது டைரியில், முஸ்லிம் ஆட்சியாளர்கள் மத வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு பேணிய நீதி பரீபாலனத்தை வெகுவாகப் புகழ்ந்து எழுதியுள்ளார். சிலுவை யுத்தத்திற்கு பிறகு, உயிர் பிழைத்த கிறிஸ்துவர்களின் கதி, அன்றைய நிலையில் மிகப் பரிதாபமாக இருந்தது. அவர்களில் நோயுற்றவர் களுக்கு முஸ்லிம்கள் சிகிச்சையளித்தார்கள். ஏழை எளிய மக்களின் பசியறிந்து, உணவு வழங்கினார்கள் இன்னும் பல்வேறு வகையில் உதவினார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது, அறியும் போது மதம் கடந்த மனித நேயம் பன்னெடுங் காலத்திற்கு முன்பே, இந்த மண்ணில் முஸ்லிம்களால் விதைக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது !

இப்போது பாகிஸ்தான் வசமுள்ள சிந்துவை, முன்பு இந்து மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் முஸ்லிம்களுக்கு விரோதமாகச் செயல் பட்டு வந்தான். இவனை அடக்கவே, இவன் திமிரை ஒடுக்கவே, முகம்மது இப்னுகாசிம் என்பவர், ஆறாயிரம் குதிரைப் படைவீரர்கள், ஆறாயிரம் ஒட்டகைப் படைவீரர்கள் சூழ, சிந்து மன்னனோடு போரிட்டு அவனை வெற்றி கண்டார். போரில் தோல்விக்கண்ட சிந்து மன்னனும், அவனது குடி மக்களும், பயந்தவர்களாய் காணப்பட்டார்கள். முஸ்லிம்களால் தமக்குத் தீங்குகள் ஏதும் நேருமோ என்று கலங்கிக்கொண்டிருந்தார்கள். பழிக்குப் பழி வாங்குவார்களோ என நடுங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இவர்கள் பயந்ததற்கு நேர்மாறாய் முகம்மது இப்னு காசிம் எல்லோருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார். மேலும், முஸ்லிம் அல்லாத அந்த பிற மதத்தினர்கள், அவரவர் மத ஆச்சாரப்படி நடந்து கொள்ளவும் சுதந்திரம் அளித்தார். இது மட்டுமா? விழிகள் வியக்கத்தக்க ஒன்றையும் முகம்மது இப்னு காசிம் செய்தார். கராச்சி நிர்வாகத்தையே இந்து மக்களிடம் ஒப்படைத்தார். கி.பி. 712 –லேயே இத்தகைய அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. மனித நேயமென்னும் ஊற்று இன்னும் வற்றவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.

ஒரு சமயம், முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்த பொழுது, ஒரு இந்து அதிகாரி அவர்களை கண்ணியமாய் நடத்தியதை அறிந்த முகம்மது இப்னு காசிம் அவரை கராச்சி நகரின் பிரதம அதிகாரியாக நியமித்தார். மேலும் அவருக்கு ‘மெளலானா ஹிந்த்’  என்ற பட்டமும் வழங்கி உற்சாகப்படுத்தினார். மனித நேயத்தின் தடங்களைக் கண்டு கொண்டீர்களா…? இது அப்போதே நிகழ்ந்த அதிசயம் !

இந்தியாவில் மொகலாயர் ஆட்சி 800 ஆண்டுகள் நடைபெற்றது. அப்போதெல்லாம், பிறமத துவேஷம் கிடையாது. கட்டாய மத மாற்றம் கிடையாது. அவரவர்கள் அவர்களின் மத வழிகாட்டுதலின்படி வாழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றையிங்கே நினைவூட்ட விரும்புகிறேன். இந்து சமய ஆன்மீகவாதிகள், மக்கள் அனைவருமே இறைவன் முன்பு சமம் என்று போதித்தார்கள். ஆனால் இஸ்லாம் மட்டுமே, மனிதர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சமம் என்று சமத்துவத்தை போதிக்கிறது. சகோதரர்கள் என்றும் அறிவிக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டங்களை உருவாக்கிய டாக்டர். அம்பேத்கார் அவர்கள், தீண்டாமை, ஜாதிக் கொடுமை, மூடக் கொள்கைகள், மனு தர்மச் சட்டங்களால் மூச்சுத் திணறி பாதிக்கப்பட்டிருந்த இந்துக்களுக்கு, இஸ்லாம் வந்துதான், சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்தது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் சமம் மட்டுமல்ல. அவர்கள் சகோதரர்கள் என்று இஸ்லாம் அறிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிம் அல்லாதோர் மீது, காப்புவரியென்று ஒரு வரி வசூலிக்கப்பட்டது. இந்த வரியிலும் பெண்கள், சிறுவர்கள், உழைக்க இயலாதவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டோர்கள் ஆகியோர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. வரி விதிப்பில் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு, நீதமான முறை அனுஷ்டிக்கப்பட்டது.

முஸ்லிம்கள் என்றால் யாரோ எவரோ என்று எண்ணுவோர் மத்தியில், அவர்கள் நம் உறவினர்கள், நம் உயிருக்கும், உடமைக்கும் அவர்களே காப்பாளர்கள் என்று பிற மத மக்கள் புரிந்து கொள்ளும் விதமாக அவர்கள் மனித நேயம் விதைக்கும் மாண்பாளர்களாக வரலாற்றில் காணப்படுகின்றார்கள்.

இப்போது பாகிஸ்தானில் உள்ள சிந்துவில் அக்காலத்தில், உமையாக்கள், சுமையாக்கள், கலீபாக்கள் ஆகியோர்கள் ஆட்சி பன்னெடுங்காலமாக நடைபெற்ற போதிலும், இந்து முஸ்லிம் மக்களிடையே எந்தவித மனக்கசப்பும் இல்லை ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர். எந்த முஸ்லிம் கவர்னர்கள் மூலமாகவும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு அநீதம் எதுவும் நடக்கவில்லை. கவர்னர்களால் வழங்கப்பட்ட தொகைகளைக் கொண்டு பல கோவில்களும், புத்த பீடங்களும் ஏற்படுத்தப்பட்டு பரீபாலிக்கப்பட்டு வந்தன. இந்து மதக் கல்வியாளர்கள், பலர் பாக்தாத் நகர அரசவைகளில் கெளரவமான பதவிகளில் அங்கம் வகித்தனர்.

கலீபா ஹாருன் ரஷீத் கன்னோஜை ஆண்டு வந்த இந்து மன்னரோடு நெருக்கமான சுமூக உறவு வைத்திருந்தார். அந்த மன்னனுக்கு ‘மலிக்குள் ஹிந்த்’ இந்தியாவின் அதிபதியென்ற பட்டமும் வழங்கி கெளரவித்தார்.

ஒரு சமயம் கலீபா ஹாருன் ரஷீது அவர்கள், கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். அப்பொழுது கன்னோஜ் மன்னர் தமது ராஜாங்க வைத்தியரை கலீபாவுக்கு வைத்தியம் செய்ய அனுப்பி வைத்திருந்தார். இப்படி அந்தக் காலங்களிலேயே இந்து முஸ்லிம் உறவுகள் சுமூகமாகத் தான் இருந்திருக்கிறது ! இந்து முஸ்லிம் இருவர் வீடுகளில் தனித்தனியாக ரோஜா பூக்கிறதென்று வைத்துக் கொள்வோம். அதற்கு ரோஜா என்றுதானே பெயர். அதற்கு ஜாதிச்சாயம் இல்லையே ! உலகில் மனிதர்களாகப் பிறந்தவர்கள், மனிதர்கள்தான் ! இடையில் நாமே கட்டிக்கொண்ட சுவர்கள் தான் ஜாதியும் மதமும் ! ஆக, மனிதனாகப் பிறந்த நாம், மனிதனாகவே வாழ்வோம் !.

நன்றி :

நர்கிஸ்

நவம்பர் 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *