தொலைநோக்குப் பார்வை கொள்க
தொடராய் முன்னே செல்க
வேலைகளைப் பகிர்ந்து கொள்க
விகிதமும் சமமாய்க் கொள்க
அலைபோலக் குழப்பம் வந்தால்
அலசியே யாய்ந்து கொள்க
வலைபோலப் பின்னும் பேச்சால்
வம்புகள் வளர வேண்டா
யாப்பிலக்கணம்: காய்+மா+தேமா (அரையடிக்கு)
— விளம்+மா+தேமா(அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்
இவை நம்மால் முடியுமா? என்று ஐயமாக உள்ளதா? தேனீக் கூட்டத்தைப் பாருங்கள்; அவற்றிற்குக் கற்றுக் கொடுத்தவன் யாருங்க? (அவன் தான் படைத்தவன் !) (”உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான் “நீ மலைகளிலும் மரங்களிலும் உயர்ந்த கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்”(என்றும்)”பின் எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான். அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகின்றது; அதில் மனிதர்கட்கு(பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்கட்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது.( அல்-குர் ஆன் அத்யாயம் 16 (அல் நஹ்ல்); வசனம் 68-69)
1) தொலைநோக்குப் பார்வை அவசியம்:
ஒரு தேனீக் கூட்டம் பறந்துச் செல்லும் பாதையில் ஒரு பூந்தோட்டத்தைப் பார்த்தால் விரைவாக அபுபூந்தோட்டத்திற்குள் புகுந்து விடாது. அத்தோட்டம் பாதுகாப்பானது தானா அல்லது ஆபத்துகள் உள்ளனவா என்று தெரிந்து கொள்வதற்காகச் சிலரை மட்டும் உள்ளே அனுப்பி வைக்கும். எல்லாம் சரியென்று தெரிந்த பிறகு தான் மொத்தமாக உட்புகும்.
2) தொடர்ந்த் முன்னேற்றம் அவசியம்:
ஒவ்வொரு தேனீயும் எப்பொழுதும் ஒரு மாணவனாகவே இருக்கின்றது. தன்னை மேலும் மேம்படுத்திக் கொண்டு முன்னேறுகின்றது.
3) வேலைகளையும் அதிகாரங்களையும் பகிர்ந்து கொடுங்கள்:
ஒரு தேன் கூட்டில் ஒரே ஒரு ராணித்தேனீ தான் இருக்கின்றது. மற்ற எல்லா வகைத் தேனீக்கட்கும் அதுதான் தலைவி. ஆனாலும், ராணிதேனீ தனது அதிகாரங்களை அடுத்தடுத்த மட்டங்களில் உள்ளவர்கட்குப் பகிர்ந்து கொடுக்கின்றது.
4) எதிலும் சமநிலை இருக்கட்டும்:
ஒரு விடயத்திற்காக மற்றொன்றை இழக்காதீர்கள். ஒவ்வொரு தேன் கூட்டிலும் எந்த வகைத் தேனீ எத்துணை எண்ணிக்கையில் எவ்வளவு விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும் என்கின்ற கச்சிதமான கணக்குக் கூட உண்டு. இந்த எண்ணிக்கைகள் எப்பொழுதும் பிசகிவிடாதபடி தேனீக்கள் கவனமாகப் பார்த்துக் கொள்கின்றன.
5) எதையும் அலசி ஆராய்ந்து முடிவெடுந்ங்கள்:
ஒரு குழப்பம் என்றால் அதை ஏழெட்டுத் தேனீக்கள் நுணுக்கமாக அலசி ஆராயும். அப்புறம் அவைகள் எல்லாம் தங்களுக்குள் கலந்து பேசி அதன் பிறகுதான் ஒரு முடிவுக்கு வருகின்றன.
6) தேவையானதை மட்டும் பேசுங்கள்::
சுற்றி வளைத்துப் பேச வேண்டா.”நான் இந்தப் பக்கம்; நீ அந்தப் பக்கம்; இதுதான் வேலை” என்று வம்பு பேசாமல் தகவற் பறிமாறிக் கொள்ளும் தேனீக்களின் மொழிப் புலமை வியப்பிற்குரியது!!!
நாமும் இவ்வண்ணம் நடந்தால் பேச்சு குறையும்; செயற்திறன் நிறையும்
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
shaickkalam@yahoo.com
kalaamkathir7@gmail.com
அலை பேசி: 00971-50-8351499