கவிதைகள் (All)

இன்னுமா கைக்கூலி?

 இன்னுமா கைக்கூலி?
******************************************************************************************************************
அல்லாஹ் ஒருவனென
        அவன்தூதர் முஹம்மதென
சொல்லும் உறுதியினர்@
        சுரண்ட நினைப்பதுவோ?       1
ஒப்புக்கோ மார்க்கம்?
      ஊருக்கோ உபதேசம்?
அப்பழுக்கை நீக்காமல்
      அளப்பளக்கும் பேச்செதற்கு?   2
சமுதாய நடுநிலையும்
       சன்மார்க்க நெறிமுறையும்
அமுதாகும்; அதற்குள்
       அழிக்கும் விஷக்கலப்பா?         3
“மார்க்கத்தில் பாதி”$யென
        மதிக்கும் திருமணத்தில்
பேர்த்துப் பணம்பறித்தல்
       பெருங்கயமை ஆகாதோ?         4
நபிவழியாம் திருமணத்தை
      நடத்துகையில் அதற்குரிய
அபிவிருத்தி%,கைக்கூலி
      யாலழுக்காய் ஆவதுவோ?         5
வேசிக்கும் பணம்கொடுப்பார்;
         வீட்டு விளக்கிடத்தில்
’காசுகொடு!’ எனக்கேட்டால்
         காறி உமிழாரோ?                       6
“இல்லாள் இலாதிருத்தல்
        ஏழைமையே”^ அதைமாற்றும்
நல்லாள் வருகைக்கா
        நாணமின்றிப் பணம்கேட்பார்?   7
“மணம்புரிந்து கொள்பவர்கள்
        மாநபியின் கூட்டத்தார்”
எனத்தெரிந்தும் பணம்கேட்போர்
       இழிதகைமை என்னசொல்ல?     8
பெற்று வளர்ப்பதற்கும்
       பெண்மகளைக் காப்பதற்கும்
உற்றதுயர் சுமந்தவரின்
       உள்ளம் சபிக்காதா?                     9
சன்மார்க்கச் சேயாகி
      சமுதாயத் தாயாகப்
பொன்வாசல் அமைப்பவளைப்
      பொருள்பெற்றா மணப்பார்கள்?   10
இருந்தால் கரைசேர்வர்;
       இல்லையெனில்,மூழ்கிடுவார்
வருந்தித் துடிதுடித்தல்
       வரலாறாய்த் தொடருவதா?          11
பிறர்துன்பம் அறியீரோ?
       பெண்மகவைப் பெறவிலையோ
உறவை வளர்ப்பதற்கே
       உதவிடுமோ கைக்கூலி?                12
கல்லும் கரைந்துருகும்
     கடும்பாம்பும் மனமிரங்கும்
சொல்லுமிந்தக் கைக்கூலி
     சுகம்கண்டார் இரங்குவரோ?            13
கள்ளத்தால் பிறர்செல்வம்
       கவருவதே  கைக்கூலி!
உள்ளம் அவர்க்கேது?
       உபதேசம் ஏறாது!                             14
வெள்ளமெனப் பெருகும்
        வேதனையின் கண்ணீரைக்
கொள்ளி நெருப்பென்று
        குறிப்பறிய அவர்மாட்டார்!             15
முதிர்கன்னி ஆனபின்னும்
       முடியாத திருமணத்தால்
கதிகலங்கி நிற்பவர்கள்
        கரைசேர வழியிலையே!                 16
கரைசேர வழியின்றிக்
        கதிகலங்கி நிற்பவர்க்கு
முறைசெய்தே ஆறுதலை
       முன்வைக்க மொழியிலையே!         17
‘கொள்கை இது’வென்று
        கொள்ளாமல் சமுகத்தின்
கொள்ளையராய்த் திரியும்கைக்
       கூலியரை அனுமதியோம்!               18
நல்லோர் மவுனத்தால்
       நடக்காத நற்செயலால்
எல்லார்க்கும் தானே
      இழிவுப் பழிசூழும்?                             19
இன்னும் இருப்பதுவோ
       எமக்குள்ளே கைக்கூலி?
என்னருமைச் சோதரரே,
       எழுவீர் ஒழிப்பதற்கே!                       20
               —-ஏம்பல் தஜம்முல் முகம்மது.
************************************************************************************************************************************
குறிப்புகள்:-@-உறுதியான மார்க்கப் பற்று இருந்தும் கைக்கூலி வாங்குபவர்,$-ஹதீஸ் கருத்து,%–அபிவிருத்தி-பரக்கத்-அருள் வளம்,^-ஹதீஸ் கருத்து,&-ஹதீஸ் கருத்து.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button