கட்டுரைகள்

ஆழிபேரலைக்கு அஞ்சாத அலையாத்தி காடுகள்…

ஆழிபேரலைக்கு அஞ்சாத அலையாத்தி காடுகள்…
காவேரி டெல்டா மற்றும் வங்காள விரிகுடாவின் கடைசி முகத்துவாரமாகவும், ஆசியாவின் மிகவும் பிரசித்தப்பெற்ற மீன்பிடிப்பகுதியாகவும் விளங்கும் முத்துப்பேட்டை கடல் சார்ந்த பகுதியில் அமைந்துள்ளது அலையாத்திகாடுகள் என்றெழைக்கப்படும் ”லகூன்”.

சிதம்பரம் – பிச்சாவரம் பகுதியில் உள்ள சதுப்பு நில அலையாத்தி காட்டினை போல் முத்துப்பேட்டை அலையாத்தி காடானது ஆசியாவின் உள்ள அலையாத்தி காடுகளில் இரண்டாவது இடத்தினை பெற்றுள்ளது. அத்துடன் 2004 டிசம்பர் 26ம்தேதி ஏற்பட்ட சுனாமியால் முத்துப்பேட்டைக்கு எந்தவிதமான பாதிப்பினை தராமல் இந்த அலையாத்தி காடுகள் காப்பாற்றியது என்பதினை இந்த ஊர் மக்கள் மறக்கமாட்டார்கள். கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையினை மறைக்கும் அளவிற்கு பேரலையானது ஏற்பட்டது, இருப்பினும் முத்துப்பேட்டைக்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

காடும் காடு சார்ந்த இடம், நிலம் நிலச்சார்ந்த இடம், கடல் கடல்சார்ந்த இடம், மலை மலைச்சார்ந்த இடம் என்று நம் படித்து இருக்கின்றோம். ஆனால் முத்துப்பேட்டையில் கடலும் ஆறும் சார்ந்த இடம் உண்டு என்றால் அது தான் எங்கள் ஊர் அலையாத்தி காடுகள். இந்த கடல் பகுதியில் பாமிணியாறு, கோரையாறு, கீழைத்தாங்கியாறு, மரக்கா கோரையாறு போன்ற ஆறுகள் இங்கு கடலில் கலக்கின்றன.

அலையாத்தி காட்டின் வடக்கு பக்கம் மற்றும் கிழக்கு பக்கமானது மணல் பிரதேசமாகவும் காட்சியளிக்கின்றன. தில்லை, நரிக்கத்தல், நீர்முள்ளி, திப்பரத்தை, சுப்புன்னை, வென்கடல், அலையாத்தி மற்றும் தண்டல் போன்ற உள்ள மரவகைகள் இங்கு உள்ளன. இவற்றில் அலையாத்தி மற்றும் தில்லை மரவகைகள் இங்கு அதிகம். இவைகளை தவிர 60 க்கும் அதிகமான மரவகைகள் இங்கு காணப்படுகின்றன. பிச்சாவரம் சதுப்பு நிலக்காட்டில் ரைசோஃபோரா இன வகை மரங்கள் அதிகம்; உள்ளன. முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில் இந்த வகையான மரங்கள் குறைந்த அளவில் உள்ளன.

சாதாரண நிலப்பரப்பில் உள்ள தாவரங்களின் வேர் அமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வகையில் இங்குள்ள தாவரங்கள் உள்ளன. நீரும், சேறுமாக எப்போதும் வேர்ப்பகுதி மூழ்கிய நிலையில் உபரியாக அந்த தாவரங்கள் வேர்களை வெளிச்செலுத்தி சுவாசிப்பதற்கெனவும், தேவையான சத்துக்களைபெறுவதற்கெனவும் அமைத்துக்கொள்கிறது. இது போன்ற வேர்கள் அந்த வனங்களின் தரைப்பரப்பு முழுவதிலும் வெளிக்கிளம்பி இருப்பதினை நாம் காணும் போது கண்ணுக்கு விருந்தாகவும மனதிற்கு எல்லையற்ற மகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் தருகிறது.

முத்துப்பேட்டை அலையாத்தி காடானது தற்போது அதிகமாக சுற்றுலாபயணிகளை கவர்கிறது. தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் அலையாத்தி காடானது உள்ளதால் வனத்துறையினரின் சோதனைச்சாவடிகளை கடந்து தான் அங்கு செல்ல வேண்டும். ஏனெனில் குளிர் காலங்களில் பலநாடுகளிலிருந்து பல பறவைகள் இந்த பகுதியில் தஞ்சம் அடைகின்றன. மாமிசப்பிரியர்கள் இந்த பறவைகளை வேட்டையாடி விடுவார்கள் என்பதால் வனத்துறை கட்டுப்பாட்டுகள் அதிகம் உள்ள இந்த பகுதியில் பாதுகாப்புகள் அதிகம்.

அலையாத்தி காட்டினை சுற்றிப்பார்க்க வேண்டுமென்றால் வனத்துறையினரின் அனுமதியுடன் செல்லவேண்டும். அங்கு செல்ல நமக்கு படகு அவசியமானதாக உள்ளது.படகினை குறைந்த வாடகை கிடைக்க வாய்ப்புண்டு. குடும்பத்தில் உள்ள அனைவரும் சென்று வர குறைந்த செலவுகள் தான் ஆகும். போகும் முன்பே நமக்கு தேவையான அனைத்து உணவுப்பொருட்களையும் வாங்கி செல்ல வேண்டும்.

இங்கு 73 வகையான மீன் வகைகளும், பல வகை நண்டினங்கள், மேலும் இங்கேயே தங்கி வாழும் கூலக்கூட, நீர்க்காகம், ஊசிவால் வாத்து, பூநாரை மற்றும் வழங்கமாக வெளிநாட்டிலிருந்து வந்து போகும் 160 வகை இனப்பறவைகள் என முத்துப்பேட்டை சதுப்பு நிலக்காடுகள் வண்ணமாய் வானில் காட்சி அளிக்கிறது. அவைகள் மட்டுமின்றி 13 வகையான பாலூட்டி இன விலங்குகளில் ஜக்கால் நரி, காட்டு முயல், கீரிப்பிள்ளை போன்ற விலங்குகளும் இங்கு உள்ளன.

சுற்றுலாத்தலங்களை பாதுகாத்து வரும் தமிழக சிறப்பு கவனம் செலுத்தி, சுனாமியாலும் வெள்ளப்பெருக்காலும், பேரலைகளாலும் பாதிப்பு இல்லாத அளவிற்கு மக்களை காப்பாற்றி வரும் முத்துப்பேட்டை அலையாத்தி காட்டினை பாதுகாத்து திருவாரூர் மாவட்டத்தில் பெயர் சொல்லக்கூடிய மிகப்பெரிய சுற்றுலாத்தளமாக மாற்ற வேண்டும். 

தொகுப்பு : அபு ஆஃப்ரின்

najiraf@gmail.com, najiraf@yahoo.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button