(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி. ஐ.பீ.எஸ்(ஓ)
சென்ற மார்ச் மாதம(2010); அனைத்துப் ஊடகங்களிலும், எலக்ட்ரானிக் மீடியாக்களிலும் ஒரே பரபரப்பான செய்தி வெளியிட்டன. அந்த செய்தி இந்திய குக்கிராமங்களில் வாழும் அரை வயிற்றுக் கஞ்சி, அரைகுறை ஆடை அணிந்த மக்களிலிருந்து சென்னை-மும்பை-கல்கத்தா போன்ற நகரங்களில் பாதையோரம் சுருண்டு ஓலைப்பாயாய் வாழும் பாதசாரி வரை ‘ஆகா உலக பொருளாதார மலேசியா பெட்ரனாஸ் இரட்டைக் கோபுரம் போன்று உயர்ந்த பொருளாதார நிலையினை அடைந்து விட்டோமே என்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர’; என்றால் உங்களுக்கு நான் ஏதோ ஏப்ரல் மாத முட்டாளாக்குகிறோனோ என்று தோனவில்லையா? நீங்கள் நினைப்பது உண்மைதான்;. ஏனென்றால் அந்தச் செய்தி உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்திய நாட்டினைச் சார்ந்த அம்பானி சகோதர்களில் மூத்தவர் முகேஷ் அம்பானியும் அவரது இளவல் அனில் அம்பானி ஐந்தாவது இடத்திலும் இடம் பிடித்துள்ளனர் என்பது தான். அது மட்டுமா? உலக பணக்காரர்கள் பட்டியலில் 100 பேர்களில் இந்திய நாட்டு வம்சா வழியினரான மற்றும் வெளிநாட்டில் வாழ்கின்ற இங்கிலாந்தினைச் சார்ந்த சுனில் மிட்டல், ஸ்வராஜ் பால், அயர்லாந்தில் வாழும் பல்லோன் ஜிமிஸ்திரி, இந்தியாவில் வாழும் சாராய சாம்ராஜ மன்னர் விஜய் மல்லையாவும் ஒருவர் எனக் கணக்கெடுப்பில் சொல்வது மகிழ்வு தரும் செய்தியாக உங்களுக்குத் தெரியவில்லையா? இன்னும் வெளியே பெயர் குறிப்பிடாத முஸ்லிம் செல்வந்தர்களும் உலக பணக்காரர்கள் பட்டியலில் போட்டி போடுகின்றனர்.
நான் குறிப்பிட்ட பணக்காரர்கள் எப்படி உலக பணக்காரர் பட்டியலில் இடம் பிடிக்கிறார்கள் என்பதினைச் சொல்கிறேன். அவர்கள் பல கம்பெனிகளை ஆரம்பிப்பது அந்தக் கம்பனிகளுக்கு சேர்களை சேர்ப்பது அதில் பல இன்சூரன்ஸ் கம்பெனி, மிய+ட்சுவல் பண்ட் கம்பெனிகள், ய+னிட் டிரஸ்ட் போன்று பொது நிறுவனங்களுக்கு அந்த பங்குகளை விற்பது, அதன் பின்பு அந்திய நிதி நிறுவனங்களுக்கு அந்த பங்குகளை விற்பது, கறுப்பு பண முதலைகளின் பணத்தினை வெள்ளைப்பணமாக்குவது, அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அரசு நிலங்களில் தொழில் தொடங்குவது, நிலக்கரி சுரங்கம், கிரேனெட் சுரங்கம், காவேரி பேசின் எண்ணெய் கிணறு போன்று ஆழ்கிணறு அமைப்பது, குதிரைச் சூதாட்டம் நடத்துவது, சாராய ஆலை அமைப்பது, ஐ.பி.எல் கிரிக்கெட் போன்ற சூதாட்ட விளையாட்டுக்களை மாணவர்கள் பரீட்சை நேரத்தில் நடத்துவது பேன்றவைகளால் தான் அவர்கள் பணம் வட்டிக்கு மேல் குட்டிப்போட்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
மேலே குறிப்பிட்ட பணக்காரர்கள் இந்திய நாட்டு மக்களின் வறுமையினை ஒழிப்பதிற்கும், தீரா தண்ணீர் தாகத்தினை தீர்ப்பதிற்கும், உயிர் கொல்லி நோய்களை போக்குவதிற்கும், அறியாமையினை ஒழிப்பதிற்கும், சுற்றுப்புற சூழல் காப்பதிற்கும், குடிசைப்பகுதியினை மேன்மைப்படுத்துவதிற்கும், மலேரியா, காச, புற்று, குஷ்டம் மற்றும் தொற்று நோய்கள் குணமாவதிற்கும் செய்த உதவிகள் அல்லது சுனாமி-பூகம்பம் போன்று இயற்கைச் சீற்றத்தால் பாதித்த மக்களுக்கு உடனடி உதவி என்ன என எண்ணி மதிப்பெண் போடுவோமேயானால் மதிப்பெண் போடும் கரும்பலகையில் எந்த வெள்ளை எழுத்துமில்லாது காலியாக இருக்காதா?
ஆனால் வெளிநாட்டு பணக்காரர்கள் நம் நாட்டு மக்கள் மேல் கரிசனம் கொண்டு பல்வேறு உதவிகளைச் செய்யவில்லையா? உதாரணத்திற்கு:
மைக்ரோ சாப்ட்ஸ் நிறுவனர் பில்கேட்ஸ் பெயரில் உள்ள நிறுவனம் உலகெங்கும் காசநோய், எச்.ஐ.வி என்ற உயிர் கொல்லி நோய், குஷ்டம், கல்லாமை ஒழிக்க வறுமானத்தில் பாதி செலவிடுகிறது. சமீபத்தில் பில்கேட்ஸ் துணைவியார் ப்பெலிண்டா இந்தியா வந்து உ.பி. மற்றும் பிகார் மாநிலங்களில் குழந்தைச்சாவுகள் அதிகமாக இருப்பதாகவும் அதனை தடுக்க ஒரு கொள்கை திட்டம் வகுத்துள்ளதாகச் சொல்கிறார்.
ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கட் கேப்டன் ஸ்டீவ் வாப் தான் சம்பாதித்த பணத்தில் கல்கத்தா நகரில் உள்ள பாதையோர மக்களுக்காக ஒரு அறக்கட்டளை அமைத்துப் பாடுபடுகிறார்.
ஸ்டெய்ன் என்ற ஆஸ்திரேலியா பாதிரியாரும் அவர் மறைவிற்கு பின்னர் அவர் மனைவியும் ஒரிஸ்ஸா பழங்குடி மக்களுக்காக ஆஸ்பத்திரி மற்றும் பள்ளிக்கூடம் அமைத்து பாடுபடுகிறார்.
விவேக் ஓபராய் என்ற மும்பை நடிகர் சுனாமி பாதிப்பு அறிந்து நாகைக்கும், காரைக்காலுக்கும் தனது காதலி ஐஸ்வர்யா ராய் தடுத்தும் கேளாது காதலி பறிபோனாலும், தனது சினிமா வாய்ப்பினை இழந்தாலும் அங்கே ஓடி வந்து பாதித்த மக்களுக்கு தனியே வீடு கட்டிக் கொடுத்து உதவி செய்யவில்லையா?
தைவான் நாட்டு மாஃபியா தலைவர் லீசா-சியுங் கல்லீரல் புற்று நோயால் இறந்தான். அவன் இறப்பதிற்கு முன்பு தனது சொத்தில் ரூபாய் 10 கோடியினை தெய்சங் நகரில் உள்ள ஊனமுற்ற மற்றும் வறுமையில் வாழும் மக்கள் மேம் பாட்டிற்காக உதவி செய்ய வேண்டும் என எழுதி வைத்து இறந்துள்ளான். அதனை அவனுடைய மகன் நிறைவேற்றியும் உள்ளான்.
பாக்கிஸ்தான் முன்னாள் கிரிக்கட் கேப்டன் இம்ரான் கான் தன் தாயார் பெயரில் புற்று நோய் மருத்துவ மனை நிறுவியுள்ளார்.
ஆனால் தன்னை எப்போதும் கவர்ச்சி மன்னனாக கருதும் 70 வயதைத் தாண்டிய பெண் சபலப்புத்தியுள்ள இத்தாலிய பிரதமர் பெர்க்லோனி தன் வழுக்கைத்தலையினை மறைக்க லட்சக்கணக்கில் செலவிட்டு சிகிச்சைப் பெற்றிருப்பதாகவும் ஆனால் சுற்றுப்புறச் சூழலைக் காப்பாற்ற செலவிட மறுக்கிறார் என்று நான் சொல்லவில்லை மாறாக மைக்ரோ சாப்ட்ஸ் நிறுவனர் பில் கேட்ஸ் ஒரு பேட்டியில் குறை சொல்லியுள்ளார்.
ஆகவே தான், ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என தமிழ் மறை கூறுகிறது.
அதற்கு உதாரணமாக புகழ் பெற்ற இளம் வயதில் உலக சக்கரவர்த்தியாக திகழ்ந்த மாவீரன் அலெக்ஸாண்டர் இறக்கும் போது தனது மந்திரிகளிடம் மூன்று வேண்டுகோள் விட்டார். அவை:
தான் இறக்கும் போது தனது சவப்பெட்டியினை டாக்டர்கள் தான் தூக்கிச் செல்லவேண்டும்,
தனது சவப்பெட்டியினை புதை குழியில் புதைக்கும் போது அதனுடன் தான் உபபோகித்த விலை மிக்க தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் பொன்ற ஆபரணங்களையும் சிம்மாசனம், கிரீடம் ஆகியவைகளையும் போட்டு மூடவேண்டும்,
எனது இரண்டு கைகளையும் புதை குழி வெளியே தெரியும் படி புதைக்க வேண்டும்.
அவருடைய மூன்று வேண்டுகோளையும் கேட்ட மந்திரிகளுக்கு அவருடைய வேண்டுகோள் விசித்திரமாக இருந்தது. சக்கரவர்த்தியிடம் அதற்கான விளக்கத்தினைக் கேட்டார்கள். அவரும் அதற்கான விளக்கத்தினைச் சொன்னார்.
டாக்டர்கள் சவப்பெட்டியினைத் தூக்கச் சொன்னது அந்த டாக்டர்களால் சாவினைத் தடுக்க முடியாது என்பதினை உலகத்திற்கு உணர்த்த வேண்டும்
விலை மதிப்பற்ற பொருள்களை புதைக்கச் சொன்னது ஏனென்றால் அவைகளால் உலகத்தில் பயனில்லை.
கைகளை வெளியே தெரியச்செய்தது ஏனென்றால் தான் பெரிய சக்கரவர்த்தியாக இருந்தாலும் இறக்கும் போது எதனையும் எடுத்துச் செல்லவில்லை என்ற தத்துவதத்தினைச் சொல்லவே அவ்வாறு சொன்னதாகவும் கூறினார் அலெக்ஸாண்டர்.
ரஸ_லல்லாவிடம் ஒரு முறை சகாபி ஒருவர் யார் ஈமான்தாரர் என்று கேட்டபோது அதற்து யார் பயனள்ள செயல்கள் செய்கின்றார்களோ அவர்களே ஈமான்தாரர் என்று கூறியதாக ஹதீஸ_கள் உள்ளன. அதனையே தமிழ் பழமொழியும், ‘தோன்றிற் புகழோடு தோன்றுக அக்தில்லார் தோன்றித்தோன்றாமல் நன்று’ என்கிறது.
ஒரு முறை அறிஞர் கலில் ஜிப்ரான் சொன்னார், ‘ ஒரே ஒரு முறை நான் ஊமையாகிவிட்டேன், நீ யார்?’ என்று என்னை ஒருவன் கேட்டபோது என்று. இதிலிருந்து அவருடைய படைப்புகள் மக்கள் பயன்பெறும் அளவு சென்றடையவில்லை என்பதினை சொல்லாமல் சொல்லிக் காட்டியுள்ளார்.
அதேபோன்று கீதாஞ்சலி என்ற நாவலுக்காக நோபல் பரிசினைத் தட்டிச்சென்ற ரவிந்தர நாத் தாகூர், ‘மரணம் உன் வாழ்க்கைக் கதவைத் தட்டி திறக்கிறபோது நீ என்ன செய்வாய்?’ ஏன்று கேட்பார். அதற்கு தாகூரே பதில் சொல்லும் போது, ‘வெறும் கையோடு மரணத்தினை நான் அனுப்ப மாட்டேன், மாறாக தட்டு நிறைய என் வாழ்க்கையினை(சாதனைகளை) பரிசாக கொடுப்பேன்’ என்றார். .ஆகவே நண்பர்களே ரஸ_லல்லா 1400 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன பயனுள்ள ஈமான்தாரர் என்றதினைத்தான் ரவீந்தரநாத் தாகூரும் கீதாஞ்சலியில் பயனுள்ள வாழ்க்கை பற்றி விளக்கியுள்ளார்.
ஆனால் இன்றைய இந்தியாவில் செல்வம் பங்குமார்க்கெட், சூதாட்டம், சாராய சாம்ராஜ்ய, சக்கரவர்த்திகளிடம் தான் உள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டுதான் வருகிறது. சமீபத்தில் நடந்து வருகிற கிரிக்கட் குதிரை பேரத்தில் ரூபாய் ஒரு லட்சம் கோடி பணபரிமாற்றம் நடைபெறுவதாக ஊடகங்கள் சொல்கின்றன. உதாரணத்திற்கு பந்து வீச்சில் மிகவும் மெதுவாக பந்து வீசியதிற்காக கல்கத்தா அணிக் கேப்டன் கங்குலிக்கு ரூபாய் 25லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றால் எந்த அளவு பணபரிமாற்றம் நடைபெற்று வருகிறது என்பதினைத் தெரிந்து கொள்ளலாம். விளையாட்டு வீரர்களை ஏலம் போடும் கீழ்தரமான வேலைகள் நடந்து கொண்டுள்ளன. நான் சின்ன வயதாக இருக்கும்போது கேட்ட, ‘மனிதனை மனிதன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே’ என்றது இன்று நடக்கிற மனித சூதாட்டத்தினை கருத்தில் கொண்டுதான் அன்று பாடப்பட்டதோ என்று எண்ணத்தோன்றவில்லையா? இந்திய அரசியல் குதிரை பேரத்தினைத்தான் சூதாட்டக்காரர்களும் கடைப்பிடிக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக நமக்கு தெரியவில்லைதான். அரேபியாவில் அய்யாமே ஜாலியா என்ற இருண்ட உலகத்தில் தான் அடிமைகள் ஏலத்தில் விடப்பட்டனர். அது ரஸ_லல்லாவினால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் அந்த வேலையினை இன்று லலித் மோடி, விஜய் மல்லையா, அம்பானி போன்ற பணமுதலைகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை மத்திய விளையாட்டுத்துறை அமெச்சர் மாண்புமிகு ஹில் அவர்களே குறை கூறியுள்ளார். ஏன் அரசால் அதனைத் தடுக்க முடியவில்லை? ஆப்பிரிக்கா நாட்டு கால்பந்தாட்டம் அங்கோலா நாட்டில் நடந்தது. அதில் விளையாட டோகா நாட்டு அணி பஸ்ஸில் பயணம் செய்தபோது டோகா நாட்டின் எதிரி நாட்டினர் துப்பாக்pயால் சுட்டு சில வீரர்கள் பலி ஆனார்கள்-சிலர் காயம் அடைந்தனர். இருந்தாலும் டோக நாட்டு விளையாட்டு வீரர்கள் கால்பந்து போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தனர். ஆனால் டோகா அரசு அந்த அணியை உடனே நாடு திரும்பச் செய்யவில்லையா? அது போன்ற அதிரடி நடவடிக்கை எடுத்து சூதாட்ட கிரிக்கெட்டினை நிறுத்த அரசால் முடியவில்லை? பின்பு மந்திரியின் புலம்பல் கேளிக்கூத்தாக உங்களுக்குத் தெரியவில்லையா?
இதுபோன்ற விளையாட்டு அசுரவேகத்தில் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டுள்ள சீனா நாட்டில் இருக்கிறதா? இல்லையே! ஆனால் அவர்களால் ஒலிம்பிக் போட்டிகூட நடத்தி வெற்றி பெற முடிகிறது, ஆனால் நாம் காமன் வெல்த் விளையாட்டு கட்டமைப்பு வேலை செய்வதிற்கே திணறிக் கொண்டுள்ளோம் என்பது எவ்வளவு பின் தங்கிய நிலையில் உள்ளோம் என அறிந்து கொள்ளலாம். மகாத்மா காந்தி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, இந்திய அரசியல் சுதந்திரம் அடைவதினை விட பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்றார். இந்திய பொருளாதாரம் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் கடலைப்போன்று பரந்து இருக்க வேண்டுமே தவிர அம்பானி சகோரர்கள், விஜய் மல்லையா போன்ற குதிரை-சாராய முதலாளிகள்-ஷில்பா செட்டி போன்ற நடிகைகள்-லலித் மோடி போன்ற கிரிக்கட் சூதாட்டக்காரர்கள் கையில் இமயமலைபோன்று குவியக்கூடாது. அவ்வாறு ஒரு சிலரிடமே பொருளாதாரம் போய் சேரும் போது அது பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அந்தச் செல்வம் ‘குஷ்ட்ட ரோகி கையில் இருக்கின்ற வெண்ணெய’; போல கருத வேண்டும். தேவைப்பட்ட மக்களுக்கு உதவாத செல்வம் உலோபி கையில் இருந்தென்ன லாபம் என் சகோதர-சகோதரிகளே!!