மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்
அல்லாஹ்வின் பெயர்கொண்டு துவங்குகின்றேன். இன்று உலகில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்ற கோர சம்பவங்கள், பேரழிவுகள் அனைத்தையும் பார்க்கும் போது மறுமை நாளை நெருங்கி விட்டோமோ என்று தோன்றுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்துத் தந்த சில அடையாளங்களை காண்போம்.
1. (மறுமை நாளின் அடையாளமாக) ஒரு பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : உமர் (ரலி) நூல் முஸ்லிம்
2. மக்கள் தங்களுக்குள் பெருமையடித்துக் கொள்ளும் வகையில் பள்ளிவாசலை கட்டுவர். இது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். என்று நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல் நஸயீ
3. கல்வி அகற்றப்படும். பூகம்பங்கள் அதிகரிக்கும். காலம் சுருங்கும். குழப்பங்கள் தோன்றும். கொலை அதிகரிக்கும். செல்வம் கொழிக்கும். அதுவரை மறுமை நிகழாது என்று நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹூரைரா (ரலி) நூல் : புகாரி
4. மேலும் மக்கள் கட்டிடங்களை (போட்டிபோட்டுக் கொண்டு) உயரமாக கட்டாத வரை மறுமை நாள் வராது என்று நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி) நூல்: புகாரி
5. செருப்பணியாத நிர்வாணமாகத் திரிவோர் மக்களின் தலைவர்களாக ஆவதும் மறுமை நாளின் அடையாளமாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி) நூல் : புகாரி
6. இரு பெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளாதவரை மறுமை நாள் வராது. அந்த இரு குழுக்கள் முன்வைக்கும் வாதமும் ஒன்றாகவே இருக்கும். மேலும், ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களாக தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாத வரை மறுமை நாள் வராது.அவர்களின் ஒவ்வொருவனும் தன்னை நபி என்று வாதாடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி): நூல்: புகாரி
7. புகைமூட்டம், தஜ்ஜால் (அதிசயப்) பிராணி சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது. ஈஸா நபி (அலை) இறங்கி வருவது. யஃஜூஜ் – மஃஜூஜ் கூட்டத்தினர் வருவது. கிழக்கே ஒன்று. மேற்கே ஒன்று. அரபு தீபப் பகுதியில் ஒன்று என மூன்று நிலச்சரிவுகள் (பூகம்பங்கள்) நிகழ்வது. இவற்றில் தீப்பிழம்பு மக்களை விரட்டி ஒன்றினைக்குதல் ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும்வரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஹூதைபா (ரலி) நூல் : முஸ்லிம்
8. எனது சமுதாயத்தில் உள்ள சில கோத்திரத்தினர் இணை வைப்பவர்களுடன் சேராத வரை – அவர்களின் சிலைகளை வணங்காத வரை மறுமை நாள் ஏற்படாது. மேலும் எனது சமுதாயத்தில் முப்பது பெரும் பொய்யர்கள் தோன்றுவார்கள். அனைவரும் தம்மை அல்லாஹ்வின் தூதர்கள் என்று வாதிடுவார்கள். நான் நபிமார்களின் முத்திரையாவேன். நிச்சயமாக எனக்குப்பின் எந்த நபியும் கிடையாது என்று நபிகள் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் ஸப்வான் (ரலி) நூல் : திர்மிதீ : அபூதாவுத்
9. கல்வி உயர்த்தப்படுவதும் அறியாமை மேலோங்குவதும், மதுபானம் அருந்தப்படுவதும், விபச்சாரம் பெருகுவதும், ஐம்பது பெண்களுக்கு ஒரு ஆண் நிர்வகிக்கும் அளவுக்கு பெண்கள் அதிகமாகி ஆண்கள் குறைவதும் மறுமை நாளின் அடையாளங்களாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல் : புகாரி, முஸ்லிம்
10. (மறுமை நாள் வரும் முன்) காலம் சுருங்கிவிடும். செயல்பாடு குறைந்து போகும். மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்படும். குழப்பங்கள் தோன்றும். ஹர்ஜ் (கொலை) பெருகிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) நூல் : புகாரி
11. மயிர்களால் ஆன செருப்புகளை அணிந்துள்ள ஒரு சமுதாயத்தவருடன் நீங்கள் போர் செய்யாதவரை மறுமை நாள் வராது. உறுதியான கேடயம் போன்ற முக அமைப்புள்ள ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் செய்யாதவரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் அபூஹூரைரா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ
மேலே கூறப்பட்டவை சில உதாரணங்கள்தான் எல்லா இறைத் தூதர்களும் மக்களை மறுமையை நம்புமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். இறைத்தூதர்கள் மீண்டும் மீண்டும் எச்சரித்ததை மதிக்காமல் மறுமை நம்பிக்கையை ஒட்டு மொத்தமாக ஒரு சமூகம் புறக்கணிக்குமாயின் அச்சமூகம் முழுவதும் இறைவனால் இவ்வுலகிலேயே தண்டிக்கப்படும். அப்படி தண்டிக்கப்பட்ட எத்தனையோ வரலாறுகளை அல்லாஹ் தன் திருமறையில் சொல்லிக் காண்பித்திருக்கின்றான். எனவே மறுமை நாளை நம் மனதில் நினைத்து மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை உண்டு அதுதான் நிரந்தரமானது என்பதை நம்பியும் நாம் வாழ்வோமானால் அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் அடைய முடியும் அல்லாஹ் அப்பாக்கியத்தை நம் அனைவர்களுக்கும் வழங்குவானாக ஆமீன் : வஸ்ஸலாம்
J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி