தண்ணீர் ! தண்ணீர் !!

இலக்கியம் இஸ்லாமியக் கட்டுரைகள்

தண்ணீர் ! தண்ணீர் !! 

– மவ்லவீ அ.சையது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தி, வி.கே. புரம், நெல்லை              

  ‘’மேலும் நீங்கள் குடிக்கும் தண்ணீரை கவனித்தீர்களா? அதனை மேகத்திலிருந்து நீங்கள் இறக்குகின்றீர்களா? அல்லது நாம் இறக்கி வைக்கின்றோமா? நாம் நாடினால் அதனை (குடிக்க முடியாதவாறு) உப்பாகவும் ஆக்கிவிடுவோம். எனவே இதற்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா ?’’ – அல்குர்ஆன் (56: 68,69,70)

  “தண்ணீர் வளம் அல்லாஹ்விடமிருந்தே கிடைத்ததாகும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ 5639)

  தண்ணீர் மனித சமுதாயத்துக்கு வழங்கப்பட்ட மாபெரும் நிஃமத்! அரபியில் “மாஃ”, ஆங்கிலத்தில் “வாட்டர்”, உருதுவில் “பானி”, பார்ஸியில் “ஆப்” என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு நிறமோ, சுவையோ கிடையாது. அது அதிகமாக இருந்தால் நீல நிறத்தில் காட்சி தரும்.

  தண்ணீர் மனித வாழ்க்கைக்காகவே மட்டுமின்றி அண்ட கோலங்கள் அனைத்துக்கும் சிறந்து விளங்கும் அழகியதோர் அருட்கொடை. அது தானும் சுத்தமாகவும் தெளிவாகவும் இருப்பதுடன் அசுத்தத்தை சலவை செய்யும் ஆற்றலை அதற்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். அதில் ஆக்ஸிஜன் உள்ளது. மேலும் அதில் ஒளி குறிப்பிட்ட அளவு வரை ஊடுருவிச் செல்லும். 24 மணி நேரத்தில் சராசரி 6 டம்ளரிலிருந்து 8 டம்ளர் வரை குடிப்பது அவசியத்திலும் அவசியம். அதன் குறைவால் இரத்தத்தில் அழுத்தம் ஏற்படும். தண்ணீர் தாவரங்களை உற்பத்தி செய்வதில் உதவி செய்வதோடு சுற்றுபுறச் சூழல் மாசு அடைவதை விட்டும் பாதுகாக்கிறது. அது மாசுபடும் இடத்தில் வசிக்கும் மக்களிடையே நோய் பரவுகிறது.

  நல்ல தண்ணீர் மனிதவள மேம்பாட்டிற்கும் ஆரோக்கியத்திற்கும் உதவியாக அமைகிறது. முற்காலத்தில் வாழ்ந்து சென்ற மன்னர்களின் கோட்டை, கொத்தளங்களும், ஆடம்பர பங்களாக்களும் நதிக்கரையோரம் அமைந்திருப்பதின் அடையாளங்களை இன்றும் நம்மால் காண முடிகிறது.

  பூமிக்குக் கீழ் நல்ல தண்ணீர் பொக்கிஷம் உள்ள இடத்தில் மரங்களும், செடிகொடிகளும் பசுமை நிறைந்த சோலைவனமாக அமையும். தண்ணீரை இறைவன் ஆறு, ஊற்று, கிணறு, கடல், குளம், வாய்க்கால், அருவி, மழைநீர் போன்ற பலபடிவங்களில் தாராளமாக அமைத்திருக்கின்றான்.

  நல்ல தண்ணீர் இதனால் ஆற்றல் உண்டாகி அறிவு வளர்ச்சி ஏற்படுகிறது. மூக்கிலிருந்து இரத்தம் வரும்போது குளிர்ந்த நீரை தலைமீது ஊற்றினால் இரத்தம் வருவது நின்றுவிடும். அது இரைப்பை மற்றும் நுரை ஈரல் ஆகியவற்றின் உஷ்ணத்திற்கும் கொளுந்து விட்டெரியும் நெருப்பை அணைக்கவும், மயக்கம் மற்றும் மஞ்சள் காமாலை ஆகியவற்றை நீக்குவதற்கும் வயிற்றுப்போக்கை தடுக்கவும் சிறந்த வைத்தியமாக அமைகிறது.

  அதிகமானோர் தண்ணீரை குறைவாக அருந்துவதால் ஆரோக்கிய வாழ்வுக்கு கெடுதியை ஏற்படுத்திவைக்கிறது. சாப்பிட்ட பிறகு தேனீர் அருந்துவதற்கு பகரகாக நீரைப் பருகி பத்து நிமிடம் வலப்பக்கமும் பத்து நிமிடம் இடப்பக்கமும் பத்து நிமிடம் நேராகவும் படுத்தால் உணவு செரித்து விடுவதோடு உடலும் ஆரோக்கியமாக அமைந்து விடும் இன்ஷா அல்லாஹ் ஒரு போதும் வயிற்றுப்போக்கு ஏற்படாது.

  உஷ்ணம் நிறைந்த பிரதேசத்தில் வசிப்பவர்கள் நீரை அதிகம் பருக வேண்டும். தண்ணீரை குடிப்பதிலும் குடிக்கக் கொடுப்பதிலும் கஞ்சத்தனம் செய்யக்கூடாது. அதிகம் குளிர்ந்த அல்லது சூடான நீரைப் பருகுவதால் இரைப்பை பழுது அடைவதோடு உணவு உண்பதற்கு உதவிடும் பற்கள் மற்றும் குடல்கள் பழுதடைந்து விடும். தண்ணீரின் நிஃமத்துகளை விளங்கியவர்கள் அதைப் படைத்தவனை அறியாமலும் மறந்தும் இருக்கவே மாட்டார்கள். எனவே தண்ணீரை மாசுபடுத்தாமல் உயிர்போல் காப்போம் !

  உயிர் உள்ளவரைக்கும் ஓரிறைவனை நினைப்போம் !

   நன்றி : குர்ஆனின் குரல் – ஜனவரி 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *