ஜமாஅத் அமைப்புகளின் எதிர்காலம்..?

இலக்கியம் இஸ்லாமியக் கட்டுரைகள் கட்டுரைகள்

 
                                           திருவிடைச்சேரி பயங்கரம்
                                ஜமாஅத் அமைப்புகளின் எதிர்காலம்..?
 
புனித ரமலானின் இயல்பான ஒரு புனிதப்பயணத்தின் இறுதிக் கட்டத்தில் ஒரு முஸ்லிம் ஜமாத் பெரும் பூகம்பத்தைச் சந்தித்திருக்கிறது! ரத்தத்தால் எழுதப்பட்ட அந்தக் கொடிய வரலாறு தமிழகத்தின் சிறிதும் பெரிதுமான சுமார் 12 -15 ஆயிரம் ஜமாஅத் அமைப்புகளின் எதிர்காலத்தில் அடிப்படையான சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது!

இதற்கு முன்னால், ஜமாஅத்து அமைப்புகளில் அவ்வப்போது கருத்துவேறுபாடுகள்- மோதல்கள் -கைகலப்புகள் நிகழ்ந்துள்ளன. ஓரிரு இடங்களில் அவை காரணமாக ஜமாஅத்துகள் துண்டாடப்பட்டுள்ளன. நமக்குத் தெரிய சில சொத்துப் பஞ்சாயங்களின் அடிப்படையில் ஒரு சில கொலைகளும் கூட நிகழ்ந்துள்ளன. ஆனால், புனித ரமலானின் -மிகப்புனித லைலத்துல் கத்ரின் சுகந்தம் வீசிக்கொண்டிருந்த வேளையில், தொழுகையை முன்வைத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் துப்பாக்கித் தோட்டாக்கள் வெடித்து, அந்த ஜமாஅத்தின் தலைவரையும் , அவரது இன்னொரு சகாவையும் காவுகொண்டு, ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையில் நம்மைப்பற்றிய ஒரு தவறான – அசிங்கமான கருத்தைப் பதிவு செய்துள்ளமை இதுதான் முதன்முறை!

கடந்த சில வருடங்களாக புதிது புதிதாக முளைத்த சில சமுதாய அமைப்புக்களால் ஜமாஅத் அமைப்புக்களின் அன்றாடப் பணிகளில் சில இடைஞ்சல்கள் நிகழ்ந்து வந்தன. இஸ்லாத்தின் சில அடிப்படை அமல்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. பல மேடைகளில்- தளங்களில் விவாதங்கள் கூட நிகழ்ந்தன. ஆனால் அவையெல்லாம் இப்போது கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்து, ‘உங்கள் வழி உங்களுக்கு; எங்கள் வழி எங்களுக்கு’ என்ற இஸ்லாமிய அடிப்படையில் ஊருக்கு ஊர் ஒதுங்கியே வாழும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நேரத்தில் நிகழ்ந்துள்ளது திருவிடைச்சேரி கொலைபாதகம்!

யார் மீது குற்றம்?

யார் நிகழ்வுக்கு முன்காரணம்?

யார் தண்டனை பெறப்போவது?

இவற்றையெல்லாம் இனி நாட்டின் சட்டம்- குற்றவியல் நீதிமன்றம், அதனிடமுள்ள ரத்த ஆவணங்களை முன்வைத்து தீர்மானிக்கப் போகிறது!
அதில் தலையிட்டு -கருத்துரைத்து நாம் குட்டையைக் குழப்ப விரும்பவில்லை!
அது சட்ட விரோதமும் கூட!

ஆனால், நாம், நமது ஜமாஅத் அமைப்புக்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

தமிழகத்தின் ஜமாஅத் அமைப்புக்கள், காலங்காலமாக கிட்டத்தட்ட தங்களது ஜமாஅத் அமைப்புக்குக் கட்டுப்பட்ட மக்களின் ஒரே தலைமை அமைப்பாக செயல்பட்டு, அம்மக்களின் ‘நல்லது -கெட்டது’ அனைத்தையும் கண்ணும் கருத்துமாய்க் கவனித்துக் கொண்டு வந்துள்ளன. தங்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் கூட அரசு அமைப்புகளின் உதவிகளைக் கூட எதிர்பார்த்திராமல் பூர்த்தி செய்து வந்திருக்கின்றன. ஆரம்பப்பள்ளிகள், பொதுசுகாதார வசதிகள், குடிநீர் ஏற்பாடு, நீதிபரிபாலனம், சமூக நல்லுறவு … என்று அவற்றின் செயல்பாடுகள் நீண்ட பாரம்பரியப் பதிவுகள் ஆகும்! சில பல பகுதிகளில் முஸ்லிம் அல்லாத சகோதர சமயத்தவர்களின் பஞ்சாயங்கள் கூட முஸ்லிம் ஜமாஅத்துகளின் முன் வைக்கப்பட்டு தீர்ப்புகள் பெறப்பட்டன என்பது ஆரோக்கியமான வரலாறு!

ஆனால், சில வருடங்களாக ஜமாஅத் நிர்வாகத்தின் அடிப்படை செயல்பாடுகளின் மீது கடுமையான நெருக்குதல்கள் கொடுக்கப்படுகின்றன; பாரம்பரியமான -இயல்பான செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. விவாதங்களும்- வாக்குவாதங்களும் அதிகரித்துள்ளன. ஜமாஅத் நிர்வாக யந்திரத்தின் இயல்பான – சுமுகமான இயக்கம் தடுக்கப்பட்டு நிர்வாகிகள் கடுமையான மன உளைச்சல்களுக்கு ஆளாக்கப் படுகிறார்கள். அந்த பளுவின் கனம் தாங்காமல் கண்ணியமான பல பெரியவர்கள் ஜமாஅத் பொறுப்புகள் வகிக்கவே அஞ்சி ஒதுங்கும் சூழ்நிலைகளும் ஆங்காங்கே ஏற்பட்டுள்ளன.

இந்த நேரத்தில் திருவிடைச்சேரி படுகொலைகள் இந்தப் பிரச்சினையின் பரிமாணத்தை பல மடங்கு பெரிதுபடுத்தி பயங்காட்டுகின்றன!

நமது முன்னோர்கள் நமக்கு அளித்துவிட்டுப்போன மிகப் பெரிய -விலைமதிப்பற்ற – பாதுகாப்பான அரண்- சொத்து இந்த ஜமாஅத் அமைப்புக்கள்!
அதனை நாம் காப்பாற்றி நம் சமுதாயத்தின் பாதுகாப்பு அரணை வலுப்படுத்தப் போகிறோமா?

அல்லது நமது ஒற்றுமைக் குறைவுகளால் மேலும் சிதைத்து வலுவிழந்து நிற்கப் போகிறோமா?

இதுதான் நம்முன் இருக்கிற மிக மிக முக்கியமான கேள்வி !

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் சமூக ஒற்றுமையைக் காப்பாற்றுவானாக!

நம் ஜமாஅத் அமைப்புக்களின் உள்- வெளி நெருக்கடிகளை நீக்கி சமுதாயத்தினை நேர்வழியில் நடத்திச் செல்லும் வலிமையை அளித்து பரிபாலிப்பானாக, ஆமீன்!

நன்றி :

நர்கிஸ் பெண்கள் மாத இதழ்

தலையங்கம் -அக்டோபர்-2010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *