திருட்டை தடுக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்

கட்டுரைகள்

கோடை காலம் தொடங்கி விட்டதால், திருட்டை தடுக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, போலீசார் 20 யோசனைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.

பொதுமக்களுக்கு போலீசார் விநியோகிக்கும் துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள விவரம் வருமாறு:

1. வீடுகளில் இரவு நேரங்களில் முன் மற்றும் பின் பகுதியில் பல்புகளை எரிய விடவும். வீட்டின் அனைத்து கதவு, ஜன்னல்கள், தாழ்ப்பாள்கள், பூட்டுகள் உறுதியானவையாக இருக்க வேண்டும்.

2. வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கும்போது வந்திருப்பவரை ஜன்னல் வழியாகவோ, கதவில் பொருத்திய லென்ஸ் வழியாகவோ பார்த்து, அடையாளம் தெரிந்த பிறகு கதவை திறக்க வேண்டும்.

3. வாசல் மற்றும் முன், பின் கதவுகளுக்கு கூடுதலான தாழ்ப்பாள்கள், கதவுகளுடன் உள்ள சங்கிலி இணைப்புகள் வீட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும்.

4. குளியலறை மற்றும் ஏர்கண்டிஷன் ஜன்னல்களுக்கு கூடுதல் கிரில் கம்பி பாதுகாப்பு கொடுங்கள்.

5. உங்கள் மொட்டை மாடியில் இருந்து மாடிப்படி வழியாக வீட்டுக்குள் வர இயலாத வகையில் தடுப்புச் சுவர் மற்றும் கதவுகளை அமைத்து, அடைத்து வைக்கவும்.

6. வீட்டைப் பூட்டி விட்டு செல்பவர்கள், அருகில் உள்ளவர்களை பார்த்துக் கொள்ளச் சொல்லவும்.

7. வெளியே செல்லும்போது எல்லா அறைகளையும் பூட்டி சாவிகளை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

8. பகல் நேரங்களில் தண்ணீர் கேட்டோ, விசாரணை என்ற பெயரிலோ, விற்பனையாளர்களாகவும், மின்சாரம், தொலைபேசி ரிப்பேர் செய்பவர்களாகவும், பால் கவர், பழைய பேப்பர் வாங்குபவர்களாகவும், நகைக்கு பாலீஸ் போடுபவர்களாகவும், திருடர்கள் வரலாம். இரக்கம் காட்டி ஏமாற வேண்டாம்.

9. சந்தேகத்துக்கிடமாக யாரேனும் உங்கள் வீட்டையோ, தெருவிலோ, சுற்றித் திரிந்தால், நோட்டமிட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுங்கள். அவர்களை விசாரிக்கையில் ஒத்துழைப்பு கொடுங்கள். டிவி பார்க்கும்போதும், சமைக்கும்போதும் வீட்டின் கதவு உள்பக்கம் எப்போதும் பூட்டியபடியே இருக்கட்டும்.

10. வீட்டில் தனியாக இருப்பவர்கள் அறிமுகம் இல்லாத நபர்களை டி.வி., போன், கிரைண்டர், பிரிட்ஜ் ரிப்பேர் செய்ய அனுமதிக்கக் கூடாது. அத்தகையோர் வேலை செய்யும்போது உங்களையும், உங்கள் பொருட்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். அவர்களை வைத்துக் கொண்டு பணம் நகைகளை எடுக்கவோ, கழற்றி வைக்கவோ கூடாது.

11. வீட்டின் வேலைக்காரர்களை நியமிக்கும்போது அவர்களது இருப்பிட முகவரி மற்றும் புகைப்படம் அவருக்கு தெரிந்த நபர்களின் விலாசம் ஆகியவற்றை சேகரித்துக் கொள்வது அவசியம். வீட்டு வேலைக்காரர்களிடம் வீட்டைப் பார்த்துக் கொள்ளச் சொல்வதை தவிர்க்கவும். உங்கள் பணம் மற்றும் நகைகளை பாதுகாக்க வங்கி லாக்கர் மிகச் சிறந்தது.

12. அந்நியர்களுக்கு வீட்டை வாடகைக்கு விடும்போது, அவர்களுடைய உறவினர்களின் விவரங்கள், அலுவல், தொழில் விவரங்கள், லைசென்ஸ், பாஸ்போர்ட், காஸ், வங்கி கணக்கு விவரம் போன்றவற்றின் நகல் பெற்ற பின்பு அனுமதிக்கவும்.

13. உங்கள் தெரு, காலனி, அப்பார்ட்மென்ட்டுக்கு கூடுதல் பாதுகாப்புக்கு தனியார் பாதுகாவலர்களை நியமிக்கவும்.

14. பஸ்சில் பயணம் செய்யும்போது உங்கள் பர்ஸ், செல்போன் மற்றும் உடமைகளை கவனமாக வைத்துக் கொள்ளவும்.

15. உங்கள் பணம் கீழே கிடப்பதாகக் கூறி கவனத்தை திசை திருப்பி உங்கள் உடமைகளை அபகரிக்கலாம்.

16. மக்கள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் பெண்கள் தனியே செல்லும்போது செயின் பறிப்பு திருடர்களிடம் கவனமாக இருக்கவும்.

17. பொது இடங்களில் வைத்து உங்கள் பணத்தை எண்ணுவதை தவிர்க்கவும்.

18. வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றாலோ, கணவன்& மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு செல்பவராக இருந்தாலோ, காவல் நிலையத்துக்கு தகவல் தந்தால், நாங்கள் உங்கள் வீட்டை கண்காணிக்க வசதியாக இருக்கும். தொலைபேசியில் தகவல் சொன்னால் போதும்.

19. இரவு நேரங்களில் தூங்கும்போது கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து விட்டு தூங்குவது, ஜன்னல் அருகே விலை உயர்ந்த பொருட்களை வைப்பதை தவிர்க்கவும்.

20. இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது சைடுலாக் அவசியம் போட வேண்டும்.
இவ்வாறு அந்த துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.

THANKS : http://www.dinakaran.com/chennaidetail.aspx?id=2214&id1=9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *