கட்டுரைகள்

உள்ளங்களை இணைக்கும் உணவு

வீட்டிற்கும், உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குடும்பமே ஒன்றாவதற்கு வீடு ஒரு கூடு போல் இருப்பது இன்றும் தொடர்கிறது. ஆனால் உணவை ஒன்று கூடி உண்ணும் விஷயத்தில் பழைய காலத்திற்கும் இப்போதைக்கும் நிறைய வேறுபாடு. முன்பெல்லாம் பசியை தாங்கிக்கொண்டு ஒருவருக்காக இன்னொருவர் காத்திருப்பதும், எல்லோரும் வந்த பின்பு ஒன்றாக அமர்ந்து உண்ணுவதும் பாசத்தின் மிகப்பெரிய வெளிப்பாடாக இருந்தது.

ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் குடும்பக்காட்சி ஒன்றை உங்கள் மனக்கண் முன்னே கொண்டு வந்து பாருங்கள்.
மனைவி, கணவருக்கு உணவைப் பரிமாறும்போது, ”இது உங்களுக்கு ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கிவந்து, லேசா வதக்கி டேஸ்டா பண்ணியிருக்கேன். சாப்பிட்டு பாருங்க…” என்பாள்.

எனக்காகவே சிரத்தை எடுத்து பண்ணியிருக்கே. உனக்கு கொஞ்சம் காரம் தூக்கலா இருக்கணுமே. உனக்காக இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்திருக்கலாமே..”’ என்று பதிலுக்கு கணவர் சொல்வார்.
அம்மா நீங்க சமைத்து ரொம்ப களைத்து போயிருப்பீங்க.. நீங்களும் உட்காருங்க நான் எல்லோருக்கும் பரிமாறுகிறேன்..” என்பான், மகன்.

இப்படி ஒருவருக்கொருவர் அன்பால் போட்டி போடும் போது, அங்கே அன்னியோன்யம் உருவாகும். அதற்கு முன்புவரை அவர்களுக்குள் ஏதாவது மனவிலகல் இருந்திருந்தாலும், ஒன்றாக இருந்து உணவருந்தும் போது அந்த நெருக்கடி மறைந்து நெருக்கம் தோன்றியிருக்கும்.

ஹோட்டலில் கூட இப்படி ஒன்றாகச் சாப்பிடலாமே! என்று நீங்கள் கேட்கலாம். நான்கு பேர்களைக் கொண்ட உங்கள் குடும்பம் ஹோட்டல் மேஜையைச் சுற்றி உட்காருகிறது. என்னென்ன பொருட்கள் கலந்தது, யார் தயாரித்தது, யாருக்காக தயாரித்தது, எப்படி தயாரித்தது… எதுவுமே தெரியாது. ஆனால் நீங்கள் கேட்ட பெயருள்ள உணவு உங்கள் முன்னால் இருக்கும். அங்கே சாப்பாட்டு போட்டி நடந்து கொண்டிருப்பது போல் பலரும் பலவிதத்தில் உண்டு கொண்டிருப்பார்கள். நீங்களும் அந்த வேகத்திற்கு தக்கபடி உண்டுவிட்டு, எழுந்து போவீர்கள். அங்கே உங்களுக்கு பேச நேரம் இருக்காது. உங்கள் உணர்வுகளை பங்கிட்டுக்கொள்ள வாய்ப்பும் இருக்காது. அங்கே பசி மட்டுமே ஆறும். அன்பு மேம்பாடென்று எதுவும் இருக்காது.
பிரச்சினைகள் நிறைந்த இரண்டு குடும்பத்தினரை ஒன்றாக்க விரும்பும் மூன்றாவது குடும்பத்தார், இரு குடும்பத்தினரையும் அழைத்து விருந்து வைப்பது கிராமத்து வழக்கம். உணவருந்திக் கொண்டே பேசும்போது முக்கியமான பிரச்சினைகள்கூட எளிதாகி, தீர்வை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்.
இப்போது எத்தனை குடும்பங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள்?

18.6 சதவீத குடும்பங்களில் மட்டுமே தினமும் ஒரு நேரம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.
வாரத்தில் ஒரு நாள் மட்டும் ஒரு நேரம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது 22.1 சதவீதம்பேர்.
மாதத்தில் ஒரு தடவை ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறவர்கள் 53 சதவீதம் பேர்.
நாளடைவில் இந்த சதவீதத்திலும் பெரும் சரிவு ஏற்பட்டுவிடும் போல் தெரிகிறது.
ஒன்றாக இருந்து உண்டால்தான் உறவுகளை மேம்படுத்த முடியும் என்பதை உலகமே புரிந்து கொண்டதால் இப்போது உலகநாடுகள் பலவற்றில் ”பேம்லி மீல்ஸ்” திட்டம் வலியுறுத்தப்பட்டுவருகிறது.

ஒரு குடும்பமே ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது உணவை மட்டுமல்ல, மனதையும் பங்கிடுகிறோம்.
பேசுவதற்கு நேரமில்லாமல் போய்விடுவதாலும், ஒருவரைப் பற்றி இன்னொருவர் தவறாகப் புரிந்து கொள்வதாலும்தான் பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது பல்வேறு விஷயங்கள் பற்றி பேசுகிறோம். ஒருவர் மீது இருக்கும் குறைபாட்டையும் எடுத்து வைப்போம். அதன் மூலம் பிரச்சினைகள் சுமூகமாக களையப்படும். மனபாரம் குறைந்து, மகிழ்ச்சி பெருகும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button