கட்டுரைகள்

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: துல்கஅதா

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்:

துல்கஅதா

ஹுதைபிய்யா உடன்படிக்கை:

      நபி(ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களோடு கஃபத்துல்லா சென்று உம்ரா செய்வது போன்று கனவு கண்டார்கள். இதை நிறைவேற்றும் நோக்கில் தோழர்களிடம் உம்ரா செய்ய தயாராகும்படி அறிவிப்புச் செய்தார்கள்.  ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு, துல்கஅதா மாதத்தில் சுமார் 1400 அல்லது 1500 தோழர்களுடன் உம்ரா செய்ய புறப்பட்டார்கள். நபியவர்களின் வருகையை கேள்விப்பட்ட மக்கத்து குறைஷிகள், உம்ரா செய்ய அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா என்னும் இடத்தில் தங்கி தோழர்களுடன் ஆலோசித்து, இறுதியாக ஒரு மரத்தடியில் தோழர்களிடம் போர் செய்வதற்கு உறுதிமொழி வாங்கினார்கள். இந்த உறுதிமொழியைத்தான் “பைஅத்துர் ரிழ்வான்” என்று சொல்லப்படுகிறது. இது குறித்து இறைவன் திருமறையில்…..    

   (நபியே) நிச்சயமாக அல்லாஹ் விசுவாசிகளை, அவர்கள் மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்தபோது பொருந்திக்கொண்டான்; பின்னர் அவர்களின் இதயங்களிலிருந்ததை நன்கறிந்து, அவர்கள் மீது அமைதியை இறக்கிவைத்தான். அன்றியும், சமீபமான வெற்றியையும் அவர்களுக்கு (அருட்கொடையாக)க் கொடுத்தான். அல்குர்ஆன் (48;18)

         முஸ்லிகள் போர்செய்யவும் தயாராகிவிட்டார்கள் என்பதை அறிந்த மக்கத்து குரைஷிகள், நபியவர்களிடம் சமாதான ஒப்பந்தம் செய்ய முன் வந்தனர். அதன்படி அடுத்த வருடம் உம்ரா செய்து கொள்ள வேண்டும் என்றும், இருதரப்பிலும் பத்து வருடங்களுக்கு போருக்கான எவ்வித ஆயத்தமும் இருக்கக் கூடாது என்றும், மேலும் சில உறுதிமொழிகள் எழுதப்பட்டு இருதரப்பிலும் கையொப்பமிடப்பட்டது. இதைத்தான் இஸ்லாமிய வரலாற்றில் “ஹுதைபிய்யா உடன்படிக்கை” என்று கூறப்படுகிறது.

பனூகுரைளா யுத்தம்:

          ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ஆயுதங்களை கீழே வைத்து விட்டீர்களா? என்று கேட்டார்கள். நபியவர்கள் ‘ஆம்’ என்றனர். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள், மலக்குகள் இன்னும் தங்களது ஆயுதங்களை கீழே வைக்கவில்லை. பனூகுரைளாவினரிடம் செல்ல(போரிட) அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டுள்ளான் என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் ஒருவரை மக்களிடம் அனுப்பி அறிவிப்புச் செய்ய சொன்னார்கள்.

     “யார் செவிசாய்த்து, கட்டளைக்கு கட்டுப்படுகின்றார்களோ அவர்கள் தங்களது அஸ்ர் தொழுகையை பனூகுரைளாவினரிடம் சென்று தொழட்டும்”. அதாவது உடனே போருக்குத் தயாராகி சென்றுவிட வேண்டும் என்று அறிவிப்புச் செய்தார்கள். இப்போர் ஹிஜ்ரி 5-ஆம் ஆண்டு துல்கஅதா மாதத்தில் நடைபெற்றது. 

எகிப்து அரசருக்கு இஸ்லாமிய அழைப்பு:

       எகிப்து நாட்டு அரசர் “முகவ்கிஸ்” என்பவருக்கு, இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைப்பு விடுத்து நபி(ஸல்)அவர்கள் கடிதம் எழுதினார்கள். இக்கடிதம் ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு துல்கஅதா மாதத்தில் எழுதப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள் செய்த உம்ராக்கள்:

        நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாழ்நாளில் நான்கு உம்ராக்களை நிறைவேற்றியுள்ளார்கள். அவை அனைத்துமே “துல்கஅதா” மாதத்தில்தான் செய்துள்ளார்கள்.

1.       உம்ரத்துல் ஹுதைபிய்யா (ஹிஜ்ரி-6)

2.       உம்ரத்துல் கழா (ஹிஜ்ரி-7)

3.       ”ஜிஃரானா”  என்ற இடத்திலிருந்து இஹ்ராம் அணிந்து செய்த உம்ரா (ஹிஜ்ரி-8)

4.       இறுதி ஹஜ்ஜு செய்ய தயாராகிய போது செய்த உம்ரா (ஹிஜ்ரி-10)

முதல் அகபா ஒப்பந்தம்:

        நபித்துவத்தின் 11-வது வருடம், மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்த அன்சாரிகளில் ஆறு பேர்கள், நபி(ஸல்) அவர்களின் போதனையால் முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்று, மதீனா சென்று அவர்கள் இஸ்லாத்தை மற்ற மக்களுக்கும் எடுத்துக் கூறியதின் பலனாக மேலும் சிலர் இஸ்லாத்தை ஏற்றார்கள்.  புதிதாக இஸ்லாத்தை ஏற்ற அந்த சிலருடன், முதலாவதாக இஸ்லாத்தை ஏற்ற சிலரும் சேர்ந்து……..

         …….நபித்துவத்தின் 12-வது வருடம், மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்கு சுமார் 12 பேர் (9-பேர் கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்தவர்கள், 3-பேர் அவ்ஸ் கிளையைச் சேர்ந்தவர்கள்) வந்தார்கள். இவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் மினாவிலுள்ள ‘அகபா’ என்ற இடத்தில், இஸ்லாத்தின் அடிப்படையில் வாழ ஒப்பந்தம் செய்தார்கள். இதையே “முதல் அகபா”ஒப்பந்தம் என்று கூறப்படுகிறது.

தொகுப்பு: மவ்லவி அ.சீனி நைனார் முஹம்மது தாவூதி (துபாய் 0559764994)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button