அமைதி காப்போம்! அன்புமலர் பூக்கச் செய்வோம்! -கே.எம்.கே..

இலக்கியம் கட்டுரைகள்

பாபரி மஸ்ஜித் பிரச்சினை இன்று நேற்றல்ல, நூறாண்டுகளுக்கு மேலாகவே இருந்து வந்துள்ளது.

1992 டிசம்பர் 6-க்குப் பிறகு முந்தைய வழக்குகள் – வாதங்கள் – வரலாறுகள் யாவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பாபரி மஸ்ஜிது இடிப்பு விவகாரமே புதிய வரலாறாகவும், புதுப்புது பூகம்பங்கள் தோற்றுவிக்கும் பூதமாகவும் மாறி விட்டது. பாபரி மஸ்ஜித் – ராமஜென்ம பூமி விவகாரம் என்றாலே நாட்டு மக்கள் உள்ளுக்குள் வெறுப்படை கிறார்கள். இதைப் பற்றிப் பேசினாலே நகரப் புறத்தவர் மட்டுமல்ல, இன்றைக்கு நாட்டுப்புறத்து மக்களும் எரிச்சல்படுகிறார்கள்.

கோர்ட்டில் தீர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு வழக்கை ரோட்டுக்கு கொண்டு வந்து, மக்களை அவதிக்கு உள்ளாக்கும் சக்திகளை நாட்டு மக்கள் வெறுத்து ஒதுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பண்பட்ட இந்த பாரத நாட்டு மக்களில் பெரும்பாலான நல்லுள்ளங்கள், நீதிமன்ற வழக்குகள் நீதிமன்ற வளாகத்துக்குள் பேசப்படவும் விவாதிக்கப் படவும் வேண்டுமே தவிர, அவற்றைப் பற்றி பொது மக்கள் மத்தியில் விவாதிப்பது கூடத் தேவையற்ற ஒன்று என்றே கருதுகின்றன.

இத்தகைய உணர்வும், போக்கும், அணுகுமுறையும் எல்லா மதங்களிலும் உள்ள நன்மக்களிடம் தொடர்ந்து நிலவி வருகிறது. ஆனால், தங்களின் சுயநலத்துக்காக ஏதாவது ஒரு பிரச்சினை கிடைக்காதா? அதை ஊதிப் பெரிதாக்கி மக்கள் மத்தியில் விரோத குரோதங்களை உருவாக்க முடியாதா? என்று காத்துக் கொண்டிருக்கும் ஷைத்தானிய சக்திகள் எல்லா சமுதாயங்களிலும் இன்றைக்கு உருவாகியுள்ளன.

அவர்களின் அத்துமீறிய செயல்களுக்கு நாளை வரவிருக்கும் பாபரி மஸ்ஜிது தீர்ப்பு ஒரு காரணமாகி விடக் கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளன. முன்னெச்சரிக்கையாக அனைத்து வழிகளிலும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

நாட்டு மக்கள் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக் கும் முழு ஒத்துழைப்பு தருவது கட்டாயக் கடமையாகும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொறுத்தவரை யில் 1989-ம் ஆண்டு முதல் பாபரி மஸ்ஜிது பிரச்சினை குறித்துத் தெரிவித்து வரும் கருத்து இதுதான்.

பாபரி மஸ்ஜித் விவகாரம் சிவில் வழக்கு சம்பந்தப்பட்டது, சொத்துரிமை சம்பந்தப்பட்டது. இந்த வழக்குகளை சமுதாயங்களுக்கு இடையிலான வழக்கு என்றோ, சமயங்களுக்கு இடையிலான வழக்கு என்றோ கருதுவது மாபெரிய தவறாகும். வழக்குகள் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளன. நீதிமன்றத் தீர்ப்பு எதுவோ அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். தீர்ப்பை ஏற்க மறுப்பவர்கள் நீதிமன்றம் ஏன் சென்றார்கள்? ஆக, சிவில் வழக்கு சம்பந்தப்பட்ட கோர்ட்டு தீர்ப்பை அனைத்து தரப்பாரையும் கட்டுப் படுத்தும் தீர்ப்பாகும் என மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

தீர்ப்பை எதிர்த்தோ, ஆதரித்தோ ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டங்கள் எதுவும் பிரச்சினைனைத் தீர்க்காது. கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் ஏற்போம் – அமைதி காப்போம் – இவ்வாறுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து கூறி வந்துள்ளது. அதைத்தான் இப்பொழுதும் கூறுகிறோம்.

கோர்ட்டு தீர்ப்பை மதிப்போம், அனைவரும் அந்தத் தீர்ப்பை ஏற்க அரசுகளின் முயற்சிக்கு ஒத்துழைப்போம்.

தமிழகம் என்றும் அமைதிப் பூங்கா என்பதை ஒவ்வொரு தருணத்திலும் நிரூபிப்போம்.

செப்டம்பர் 24 – அருமையான தருணம். நாட்டுக்குப் பெருமை சேர்க்கக் கிடைத்துள்ள நல்ல தருணம்.

அமைதி காப்போம்! அன்புமலர் பூக்கச் செய்வோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *