வெற்றியின் இரகசியம்
உலகில் எத்தனையோ பேர் தோன்றி மறைகிறார்கள். ஆனால் அதில் சிலர் மட்டுமே வெற்றி பெற்று பிறந்ததன் பெருமையை அடைகிறார்கள்.
நம்மில் பலருக்கு வெற்றியை அடைய வேண்டும் என்று ஆசை கொள்கிறோம். ஆனால் ஏன் நம்மால் மட்டும் அடைய முடியவில்லை? பலமுறை முயன்றும் கூட !
காரணம் நம்மிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, எப்பொழுது இந்தத் தாழ்வு மனப்பான்மையை தாழ்த்துகிறோமோ ! அப்போது தான் நாம் வெற்றி வாகையைச் சூட முடியும்.
தன்னம்பிக்கை என்பது வெற்றி தோல்வி கருதாது தன் மீதும் தான் செய்து கொண்டிருக்கும் செயல்பாட்டின் மீதும் முழுமையாக நம்பிக்கை கொண்டு, தொடங்கிய காரியத்தை முழுமையாக நிறை வேற்றுவது ஆகும்.
தோல்வியைக் கண்டு அச்சம் கொள்ளாது தான் செய்த செயலைத் தொடர்ந்து செய்து தன்னம்பிக்கையின் மூலம் வெற்றி கண்டவர்களுள் ஒருவர் மாபெரும் தலைவரான ஆப்ரகாம் லிங்கன்.
இவர் அடையாத தோல்விகளே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்குத் தோல்வி அடைந்தவர். ஆப்ரகாம் லிங்கன் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சாதனையின் உச்சியை அடைந்தவர் ஆவார்.
1831 – வியாபாரத்தில் தோல்வி
1832 – சட்டமன்றத் தேர்தலில் தோல்வி
1833 – மறுபடியும் வியாபாரத்தில் தோல்வி
1835 – காதலியின் மறைவு
1836 – நரம்பு கோளாறு காரணமாக உடல்நலம் பாதிப்பு
1838 – சட்ட மன்றத் தலைவர் தேர்தலில் தோல்வி
1840 – எலக்டர் தேர்தலில் தோல்வி
1843 – காங்கிரஸ் தேர்தலில் தோல்வி
1855 – செனட் தேர்தலில் தோல்வி
1856 – துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தோல்வி
1858 – மறுபடியும் சென்ட் தேர்தலில் தோல்வி
இத்தனை தோல்விகளையும் கண்டு அஞ்சாமல் அடுத்ததாக நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 1860 – ஆம் ஆண்டு அவரின் தன்னம்பிக்கைக்கு பரிசாக அமெரிக்க அதிபர் பதவி கிடைத்தது.
விடா முயற்சியுடன் கூடிய கடின உழைப்பு
நாமெல்லாம் அறிந்த மிகப்பெரிய அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன். தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கிறார்.
அவர் மின்விளக்கை கண்டுபிடிக்கும் போது பலமுறை முயன்றும் தோல்வியைத் தழுவினார். சுமார் ஆயிரம் முறை ஆயிரம் இழைகளை (மின்) பொருத்தினார். ஆனால் அத்துனை முறையிலும் தோல்வியைத் தழுவி இறுதியாக சரியான டங்ஸ்டன் என்னும் இழையைப் பொருத்தி 40 மணி நேரம் எரியும் விளக்கை கண்டறிந்து சாதனை படைத்தார். அந்த நேரத்தில் ஒரு பத்திரிகையாளர் அவரிடம், ’நீங்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட இழைகளை பொருத்தி தோல்வி அடைந்த பிறகு இறுதியாக தானே வெற்றி அடைந்தீர்கள்’ என்றார்.
அதற்கு எடிசன், ’அப்படியல்ல நண்பரே ! நான் ஆயிரம் பொருள்கள் அதாவது ஆயிரம் இழைகள் இதற்கு பொருந்தாது என்று கண்டு பிடித்தேன்’ என்று கூறித் தன் தோல்வியையும் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் காரணத்தினால் வெற்றிக் கொண்டார்.
ஆகவே, நண்பர்களே ! இவ்வாறாகத் தான் தன்னம்பிக்கை விடாமுயற்சியுடன் கூடிய உழைப்பு, கனவு காணும் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். சரி, இந்த திறன்களை வளர்த்துக் கொண்டால் வெற்றியைப் பெற முடியுமா? என்று நீங்கள் கேட்டால்.. வளர்த்துப் பாருங்கள், தெரியும் உங்களுக்கு நண்பர்களே !
-சு . சாஜாத் ஜுல்கிப்ளி
நன்றி : சமவுரிமை ( டிசம்பர் 2009 )