தமிழ்க் கவிதையில் புதிய பார்வை மலர்ந்திருக்கும் காலமிது

– நூல் வெளியீட்டு நிகழ்வில் கவிஞர் மு.முருகேஷ் நம்பிக்கை –
தமிழ்க் கவிதையில் புதிய பார்வை மலர்ந்திருக்கும் காலமிது

– நூல் வெளியீட்டு நிகழ்வில் கவிஞர் மு.முருகேஷ் நம்பிக்கை –
சென்னை.
லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரும் ஊடகவியலாளரும் கவிஞருமான
தென்னரசன் எழுதிய ‘பலூன் தரிசனம்’,‘பெண்ணாக வாழும் மரம்’ ஆகிய இரு
கவிதை நூல்களின் வெளியீட்டு விழா சென்னை லயோலா கல்லூரியின் காட்சித்
தகவலியல் துறையின் கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கவிஞர் மு.முருகேஷ் கவிதை நூலினை வெளியிட, காட்சித் தகவலியல்
துறைத் தலைவர் அருட்தந்தை ஜஸ்டின் பிரபு பெற்றுக்கொண்டார். நூல்களைத் திறனாய்வு
செய்து எழுத்தாளர் அதிஷா உரையாற்றினார்.
நூலினை வெளியிட்ட கவிஞர் மு.முருகேஷ் பேசும்போது,”தமிழில் பண்டிதர்களால் மட்டும்
எழுதப்பட்டு வந்த மரபுக்கவிதையை மடைமாற்றி, மகாகவி பாரதியார் அறிமுகப்படுத்திய
புதுக்கவிதை எனும் வடிவமே அனைத்து மக்களுக்குமானதாக கவிதையை மாற்றியது.
இன்றைக்குத் தமிழில் மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, கஸல், சென்ரியூ, ஹைபுன்
என பல புதுப்புது கவிதை வடிவங்களில் கவிதைகள் எழுதப்பட்டு வருகின்றன.
இன்றைய இளைய தலைமுறையினர் புத்தகம் வாசிப்பது குறைந்துவிட்டது, கவிதை நூல்கள்
விற்பனையாவதில்லை என பல குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், தமிழில் கவிதையெழுதும்
ஆர்வத்தோடு பல்லாயிரம் இளைய கவிஞர்கள் புதிதாக எழுத வருகிறார்கள் என்பதை
மிகுந்த நம்பிக்கையோடு வரவேற்கின்றேன். அத்தகைய நம்பிக்கை மிளிரும் கவிஞராக
இந்த இரு கவிதை நூல்களின் வழி என் பார்வைக்கு வரவாகியுள்ளார் கவிஞர் தென்னரசன்.
புதிய பார்வையோடு, தமிழ்க் கவிதை வெளியில் இதுவரை பேசப்படாத பாடுபொருள்களை
இளைய கவிஞர்கள் பலர் மிகச் சிறப்பாக எழுதி வருகிறார்கள். இது தமிழ்க் கவிதைக்குப்
புது இரத்தம் பாய்வதுபோல் அமைந்துள்ளது” என்றார்.
நிகழ்வில், கவிஞர் உமாஷக்தி, பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர்
கலந்துகொண்டனர். நிறைவாக, நூலாசிரியர் கவிஞர் தென்னரசன் ஏற்புரையாற்றினார்.
இந்நிகழ்வை, இதழியல்துறை மாணவர்கள் அருணா, ஆதித்யா இருவரும் தொகுத்து
வழங்கினர்.
படக்குறிப்பு:
சென்னை லயோலா கல்லூரியின் காட்சித் தகவலியல் துறையின் சார்பில் நடைபெற்ற
கவிஞர் தென்னரசன் எழுதிய ‘பலூன் தரிசனம்’ கவிதை நூலினைக் கவிஞர் மு.முருகேஷ்
வெளியிட, காட்சித் தகவலியல் துறைத் தலைவர் அருட்தந்தை ஜஸ்டின் பிரபு
பெற்றுக்கொண்டபோது எடுத்த படம். அருகில், எழுத்தாளர் அதிஷா, நூலாசிரியர் கவிஞர்
தென்னரசன் ஆகியோர் உள்ளனர்.