பெருநாள் எனும் திரு நாள்…!
பெருநாள் எனும் திரு நாள்…!
ஒரு மாதம் முழுவதும் பகலெல்லாம் பசித்திருந்து
இரவுப் பொழுதுகளில் விழித்திருந்து
தனிமையில்
படைத்த இறைவனை நினைத்திருந்து
பொல்லாங்கு
புறம் பேசல்
கோள் மூட்டல்
பொய்யுரைத்தல்
தீயன பேசுதல்
தீயன பார்த்தல்
போன்ற
இழி செயல்களிலிருந்து விலகியிருந்து
ஏழைகள் நலனில்
தனிக்கவனம் செலுத்தி
அவர் முகம் மலர உதவி செய்து
இறையருளில் பெற்ற
பொருளாதாரத்தில்
இரண்டரை சத ஏழைகளுக்குரிய ஜகாத்தை முறைப்படி வழங்கி
மேலதிகமாக
தான தர்மங்களையும் வழங்கி
ரைய்யான் எனும் சிறப்பு நுழைவாயில் மூலம் சுவன மாளிகையில் நுழையப் பெறும் வாய்ப்பை
எதிர் நோக்கியவாறு
ஈகைத் திருநாள் எனும் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.
ஒரு மாதம் முழுவதும் கிடைத்த இந்த உயரிய பயிற்சியின் மூலம்
வீண் விரயம்
வீணான செயல்கள்
பிறர் மனம் நோகும் கேளிக்கை
அடுத்தவர் உரிமைகள் பறித்தல்.
வெற்று ஆரவாரம்
வான வேடிக்கை
பிறர் துன்பத்தில் இன்பம் காணல்.
சாலைகளை ஆக்கிரமித்தல்
பிறருக்கு அச்சமூட்டும் செயல்களில் ஈடுபடுதல்
இவையெல்லாம் தடுக்கப்பட்டதும்
வெறுக்கப்பட்டதும் ஆகும்.
சுவனப் பாதைக்கு இவைகளே பெரும் தடை கல்லும் ஆகும்.
இதனால்தான் ஈகைப் பெருநாளில்
இறைவனை வணங்கி வாழ்வதோடு
இல்லாதோருக்கு வழங்கி வாழவும்
எல்லோரோடும் இணங்கியும்
இன்புற்று வாழவும்
வழிகாட்டலை வழங்குகிறது.
பிறை கண்ட நேரம் முதல்
பசிப் பிணி கொண்டோரைத் தேடிப் பிடித்து
பெருநாள் அன்று அவர்களும் மகிழ்வுடன் உணவருந்தி பசியின்றி இருக்க
ஈதுல் ஃபித்ர் எனும் உணவிற்கானத் தேவைகளை தந்துவுவதில் தொடங்கி
இறைவனைப் போற்றிப் புகழும் வகையில்
தக்பீர் எனும்
இறை முழக்கத்தை கூறி
புத்தாடை அணிந்து குடும்ப சகிதம் இறைவனை வணங்கிட
அலையலையாக செல்கிறோம்.
தக்பீர் முழங்கியவாறு
ஒரு தெருவில் வழிபாட்டிற்குச் சென்று.
திரும்ப வரும்போது இன்னொரு தெரு வழியாக தக்பீர் முழங்கியவாறு இல்லம் திரும்பும்போது
இறைப் புகழை
அவனது திருநாமத்தை அகிலத்தில் நம்மால் இயன்ற அளவு
பரவச் செய்த பாக்கியம் பெறுகிறோம்.
மனிதப் படைப்பு
இறைவனின் படைப்பு
மனிதர்கள் அனைவரும்
ஒரு தாய் தந்தையிலிருந்து வந்தவர்களே
நிறத்தாலோ
மொழியாலோ
பணத்தாலோ
எவரும் சிறந்தவர்கள் அல்லர்.
நல்ல குணம் கொண்டோரே மனிதரில் சிறந்தவர்.
என்பதை
இந்தப் பெருநாள் நமக்கு நினைவூட்டுகிறது.
எந்த வித அனுமதிச் சீட்டும்
கட்டணமும்
இல்லாமல்
பாராளும் மன்னராக இருப்பினும்
வசிப்பிடமின்றி
தெருவில் வசிப்பவராக இருப்பினும்
யார் முதலில் நுழைகிறாரோ
அவர் முன் வரிசை முதல் வரிசை
என்பதை இறைவனை வழிபாடு செய்யும் இடத்திலேயே இதற்கான வழிமுறைகள் கிடைத்து விடுகின்றன.
இந்த ஒரு மாத நோன்புப் பயிற்சியும்
பெருநாள் வழிகாட்டலும்
நம்மை
மென்மேலும்
சிறந்த மனிதர்களாக மாற்றிடும் வகையில் நமது பணிகளைத் தொடர்வோம்…!