கத்தாரில் சுவனத்து பெண்களின் சுந்தரத் தலைவி அன்னை பாத்திமா நாயகியார் நினைவு தினம்

கத்தாரில் சுவனத்து பெண்களின் சுந்தரத் தலைவி அன்னை பாத்திமா நாயகியார் நினைவு தினம்.

தோஹா, கத்தார் :
புனித ரமலான் பிறை – 3, காத்தம் நபிகளார் – அன்னை கதிஜா பிராட்டியாரின் கண்ணிய மகளார் அறிவின் தலைவாயில் அலிப்புலியாரின் அருமை மனைவி, சுவனத்து பெண்களின் சுந்தரத் தலைவி, சுவனத்து இளைஞர்களின் தலைவர்கள் இமாம் ஹஸன் ஹூஸைனாரின் அன்பு அன்னை, உலக முஸ்லிம்கள்- முஃமின்கள்- தங்கள் உள்ளத்தில் உயிராய் வைத்துப்போற்றும் உன்னத உத்தமி பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் நினைவு தினத்தை *சங்கைமிகு ஷைகு நாயகம் ஜமாலியா அஸ்ஸெய்யித் யாஸீன் அலி மௌலானா அவர்களின் அறிவுறுத்தலின்படி, கத்தார் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை ஏற்பாட்டில் சங்கைமிகு செய்யிது அப்துல்ஹை மெளலானா, செய்யிது முஃபீல் மெளலானா மற்றும் செய்யிது மில்fபர் அலி மெளலானா அவர்களின் தலைமையில், தோஹா-ஸல்வா ரோட்டில் அமைந்திருக்கும் மலபார் பேலஸ் ரெஸ்டாரென்டில் 03 மார்ச் 2025 திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு நடை பெற்றது.
சகோதரர் இப்ராஹிம் அவர்கள் கிராஅத் ஓத, தொடர்ந்து சங்கைமிகு குத்புஸ்ஸமான் ஷம்ஸுல் வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் வாப்பா நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அழீம் அவர்களால் இயற்றப்பட்ட புனித பாத்திமா நாயகியார் மாலை ஓதப்பட்டது.
தொடர்ந்து சங்கைமிகு செய்யிது முஃபீல் மெளலானா, அன்னை பாத்திமா நாயகியாரின் சிறப்பை வர்ணித்தும், சங்கைமிகு ஜே.எஸ்.கே.ஏ.ஏ.ஹெச். மெளலானா கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அழீம் அவர்களின் சிறப்புகளை குறிப்பிட்டும் வரவேற்புரை ஆற்றினார். பின்பு கத்தார் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவர் முஹம்மது யூசுப் நன்றியுரை நிகழ்த்தினார். இறுதியாக அனைவரும் எழுந்து நின்று ஸலாம் பைத் ஓதப்பட்டது. மஃரிப் தொழுகையின் பின் அனைவருக்கும் இஃப்தார் உணவு வழங்கபட்டது.
இதில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை உறுப்பினர்களும், ஏனைய தரீக்காக்களை சேர்ந்த சகோதரர்களும், கத்தாரில் உள்ள பல மக்கள் நல தமிழர் அமைப்புகளை சார்ந்தவர்களும் மற்றும் சகோதர சமயத்தவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
கத்தார் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் செயலாளர் சென்னை அப்துல் வஹாப் அவர்களின் தலைமையில் நிகழ்ச்சியை சபையினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் அல்லாஹ்வின் அருளும் கிருபையும் கண்மணி நாயகம் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப் பொருத்தமும் நிலவட்டும் என்றும், கத்தார் நாட்டின் வளம் மென்மேலும் பெருகவேண்டும் என்றும் கத்தார் நாட்டு அரச குடும்பமும் மற்றும் கத்தாரில் வாழும் ஏனைய மக்களும் நலமோடு வாழ்வதற்கும் பிரார்த்தனை செய்து இனிதே நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
