ஆமைகள் அறிவோம்
ஆமைகள் அறிவோம்
ஆமை புகுந்த வீடும்
அமீனா புகுந்த வீடும்
உருப்படாது என்று அன்றே
உரைத்தனர் முன்னோர்.
திட்டமிடாமல் வாங்கிய கடனை
கட்டமுடியாமல் போனால் வரும்
சட்ட நடவடிக்கையே
அமீனாவின் வருகையாகும்.
புகக்கூடாத ஆமைகள்
எவையென்று அறிந்தால் – வீடு
சுகப்பட வாழும் வகை
அகப்படுமே நமக்கு.
கல்லாமை அகற்றி கல்விதனைக் கற்றால்
அறியாமை விலகும் ,-விவரம்
புரியாமை இருந்தால்
புத்தியது மங்கிவிடும் – விளைவு
தெரியாமை இன்னல் தரும் – எதிலும்
தெளிவில்லாமை நமக்கு
மனக்குழப்பம் ஏற்படுத்தும்.
பொறாமை உறவுகளை
புறந்தள்ள வைத்துவிடும்.- பிறரை
மதியாமை நம்மை
மதிப்பிழக்க வைத்து விடும் – எதிலும்
முனையாமை நமது மூளையை மழுங்கடிக்கும் –
முயலாமை இருந்தால் அது முன்னேற்றம் தடுத்து விடும்.
இயலாமை என்றும் இன்னல் புகுத்தி விடும் – உண்மை
உணராமை என்றும் மன உளைச்சல் தந்துவிடும்.
உழைக்காமையால் நமது
உயர்வு தடைபட்டு விடும் ,
உடல்நலமும் குன்றிவிடும் -தீது
விலக்காமையால் நமக்கு தீமை விளைந்து விடும் – நல்லதற்கு
துணியாமை நமக்கு துன்பம் விளைத்து விடும்- அறிவுரைகள்
கேளாமை நமக்கு பெருங்
கேடு விளைத்து விடும்.
திட்டமிடாமை செயலைத் திறனற்றதாக்கிவிடும்- சிக்கனம் இல்லாமை நமது
சேமிப்பைத் தடுத்து விடும்.
தன்னம்பிக்கை இல்லாமை
தளர்வைக் கொடுத்துவிடும்.
இவ்வாமைகள் அகற்ற
ஒவ்வாமை இல்லையெனில் -இன்பம்
இல்லாமை அகற்றிவிடும்
இல்லந்தனில் அமைதி வரும்.
தள்ளாமை வரும் முன்னர்
தக்கபடி செயல்படுவோம் ..
அன்புடன்
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.
28.2.2025
கோயம்புத்தூர்.
தொடர்பு எண்: 99401 93912.