தேசங்கள்…
தேசங்கள் மாறிப் போவதனாலே
மேகங்கள் சிவப்பாய் ஆவதில்லை,
தேகங்கள் மாறி இருப்பதனாலே
உதிரமும் பச்சை ஆவதில்லை
கடல்களும் பலவாய் இருந்திடும்போதும்
கற்கண்டாய் சில சுவைப்பதில்லை,
காடுகள் பலவாய் இருந்திட்ட போதும் கனிகளின் சுவையில் பேதம் இல்லை,
கண்களும் வேறொரு மதத்தினர் என்று காட்சிகள் இரண்டாய் தெரிவதில்லை,
இடி மழை மின்னல்
எல்லாம் இங்கே இயற்கையின் படைப்பில் ஒரு வகைதான்,
இரவும்,பகலும் சூரியன் சந்திரன் வருவதும்,மறைவதும் ஒரு வகைதான்,
நதிகளும்,அருவியும் விழுவதில்,நடப்பதில் நாட்டுக்கு நாடு மாற்றம் இல்லை
நாட்டுக்கு நாடு வாழ்வோர்க்
கெல்லாம் பசியிலும் ருசியிலும் மாற்றம் இல்லை..
பிறகிங்கு எதற்கு மதங்களின் பெயரிலும்,
கடவுள்கள் பெயரிலும் பிரிவினைகள்??
பிறந்தோம்,
வாழ்ந்தோம்,
இணைந்தோம் மகிழ்ந்தோம்
என்றிருந்தால் ஏன்
கலவரங்கள்??
இறைவனின் படைப்பில் ஏகமும் ஒன்றே என்றே நாமும் முடிவெடுப்போம்
இனம்,மொழி,
மதங்களின் பேரில் பிறந்திடும் இன்னல்கள் எல்லாம் உடன் அழிப்போம்.
பாரதி கல்யாண்,