திருச்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீனுக்கு மகத்தான வரவேற்பு

திருச்சி :

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
திருச்சி மாவட்ட பிரஸ் & மீடியா கிளப் சார்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீனுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியாவுக்குச் சென்ற
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் திருச்சியில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
திருச்சி மாவட்ட பிரஸ் & மீடியா கிளப் தலைவர் விடுதலை செந்தமிழினியன்
தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன், தொழிலதிபர் இஹ்ஸான் வாஹித் ஆகியோருக்கு திருச்சி மாவட்ட பிரஸ் & மீடியா கிளப் சார்பில் திருச்சி கலையரங்கம் மாடியில் உள்ள கிளப் அலுவலகத்தில் வைத்து
சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிளப் செயலாளர் புதிய தலைமுறை திருச்சி மூத்த செய்தியாளர் வி. சார்லஸ், கிளப் பொருளாளர் மக்கள் குரல் நாளிதழின் மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீனின் ஊடகப் பணிகள் குறித்து விளக்கினர்.
இதன்போது பேசிய ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன், இலங்கையிலிருந்து வந்த எனக்கு திருச்சி மாவட்ட பிரஸ் & மீடியா கிளப் சார்பில் வரவேற்பு அளித்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இலங்கையில் கொரோனாத் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் இந்திய அரசு பெருமளவு உதவிகளைச் செய்து வந்துள்ளது. அந்த வகையில் இந்திய அரசுக்கு நாங்கள் என்றைக்கும் நன்றி உணர்வோடு இருப்போம்.
எங்களுக்கு முதலில் உதவி செய்வது எப்போதும் இந்தியாதான். அந்த வகையில் சமீபத்தில் கூட இந்திய அரசு வரவு-செலவுத் திட்டத்தில் இதுவரை இலங்கைக்கு ரூ. 300 கோடி வரை நிதியுதவி செய்துள்ளது. அந்த அளவுக்கு எங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவிகளைச் செய்துள்ளது.
இலங்கை மற்றும் தமிழகம் நட்புடன் எப்போதும் இருக்க வேண்டும். ஊடகவியலாளர் நட்புறவு மிகவும் அவசியம் வேண்டும்.
இலங்கைக்கு உங்கள் எல்லோரையும் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தருமாறு அழைப்பு விடுக்கின்றோம். எல்லா அமைப்புகளுடனும் கலந்துரையாடலைச் செய்வோம். உங்களுக்கு எமது இலங்கையில் இருக்கின்ற எல்லா ஊடகவியலாளர்களுடனும் இணைந்து தேவையான உதவிகளைச் செய்து தருவோம். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் எங்கள் நாட்டில் உள்ள விடயங்கள் குறித்து கேட்டறிந்து கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவித்ததோடு, இலங்கையில் உள்ள சூழ்நிலை, அங்குள்ள பத்திரிகையாளர்களுடைய தற்போதைய நிலை குறித்தும் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதித் தலைவர் ராஜேஷ் கண்ணா, இணைச் செயலாளர் தீட்சத், மற்றும் சங்க உறுப்பினர்கள் வைகுண்டவாசன், வெங்கடேஷ், சுபைருதீன், பிரபாகரன், அப்துல் கரீம், முகமது அலி ஜின்னா, தினகரன், தினேஷ், பாண்டி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.