கல்வியும் ஒழுக்கமும் ஏழு தலைமுறைக்கு வாழ்வில் உயர வழிகாட்டும்! – நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!!

கல்வியும் ஒழுக்கமும் ஏழு தலைமுறைக்கு வாழ்வில் உயர வழிகாட்டும்!
———————————————-
விஜயமங்கலம் பாரதி இன்டர்நேசனல் பள்ளி ஆண்டு விழாவில்
நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!!
————————————————

ஈரோடு :
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் உள்ள பாரதி இன்டர்நேஷனல் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் முழு நேர உறுப்பினரும் மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதியுமான அ. முகமது ஜியாவுதீன் பேசும் போது கல்வியும் ஒழுக்கமும் உள்ள மாணவர்கள் தான் வெற்றி பெற முடியும் என்றும் ஒழுக்கத்தோடு நல்ல கல்வியும் சேர்ந்தால் ஏழு தலைமுறைக்கு வழிகாட்டும் என்று பேசினார், மேலும் அவர் பேசியதாவது,:-
இந்த பள்ளியில் நடைபெறுகிற ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் உள்ள நேர்த்தி ஆசிரியர்கள் எவ்வளவு உன்னிப்பாக கவனம் செலுத்தி நிகழ்ச்சிகளை வடிவமைப்பதற்கு உழைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது, அதற்காக நான் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே நிறைய பரிசுகளை பெண் குழந்தைகள் வாங்கினார்கள், இது ஈரோடு மாவட்டம் தந்தை பெரியார் பிறந்த மாவட்டம் பெண்கள் கல்வியில் உயர்ந்து நிற்பது தந்தை பெரியாரின் வெற்றியைக் காட்டுகிறது.
இங்கு பெருந்திரளாக பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டிருக்கிறீர்கள், ஒரு நல்ல பள்ளியில் குழந்தைகளை சேர்த்ததோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று பெற்றோர்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது. தொடர்ந்து குழந்தைகள் மீது அன்பு செலுத்துவதும். கண்காணிப்பதும் பெற்றோர்களுக்கு அவசியமானது. தங்கள் குழந்தைகளின் நண்பர்கள் யார் குழந்தைகளுடைய புத்தகப் பையில் புத்தகங்களோடு எந்த எந்த பொருட்கள் இருக்கிறது என்பதை பெற்றோர்கள் தெரிந்திருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் நல்ல குழந்தைகளை வளர்க்க முடியும், அதே போல மாணவர்கள் கேள்வி கேட்கிற போது, கேள்வி கேட்கிற மாணவர்களை ஊக்கப்படுத்தி, பொறுமையாக பதில் சொல்பவர்கள் தான் உண்மையான நல்லாசிரியர்களாக இருக்க முடியும், அதே போல அனைத்து மாணவர்களும் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் , படிக்கிற போது மட்டும் அல்ல. படித்து முடித்து, பணிக்கு சென்ற பின்னரும் யார் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மரியாதை செலுத்துகிறார்களோ அவர்கள் மட்டும்தான் வாழ்க்கையில் உயர்வார்கள்.
கல்வியும் ஒழுக்கமும் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற வழிகாட்டும். அதனால்தான் திருவள்ளுவர் ஒழுக்கத்தை உயிரை விட மேலானது என்று எழுதியுள்ளார், படிக்கிற காலத்தில் மாணவர்கள் நல்லொழுக்கத்தையும் நல்ல சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
”ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்புடைத்து” என்று திருக்குறள் கூறுகிறது, அதற்கு பலர் உரை எழுதுகிற போது ஒருவன் கற்ற கல்வியானது அவனது ஏழு பிறவிக்கும் பயன் அளிக்கும் என்று உரை எழுதியிருந்தார்கள், எல்லா மனிதருக்கும் மறு பிறவியில் நம்பிக்கை இருக்க முடியாது , அதனால் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அந்த திருக்குறளுக்கு உரை எழுதுகிற போது, ஒருவன் கற்ற கல்வி ஏழு தலைமுறைக்கு வழிகாட்டும் என்று எழுதியிருந்தார், அதாவது ஏழ்மையான நிலையில் இருக்கிறவன் கல்வி கற்றால், கல்வி கற்றதன் வழியாக அவன் உயர்வான். மேலும் அவனது குழந்தைகளும், குழந்தைகள் வழியாக அவர்களுடைய குழந்தைகளும் கல்வி கற்று வாழ்வில் உயர்வடைய முடியும் என்பதாகும்.
ஏழு தலைமுறை மட்டுமல்ல. தன்னை சுற்றியுள்ளவர்களுக்கும் ஒருவர் கற்ற கல்வி உதவி செய்யும். அதாவது, முதலில் கல்வி கற்றவர் அவர் கற்றதனால் அறிவும் உயர்வும் பெற்று இந்த சமூகத்தில் மதிப்பு மிக்கவராக உயர முடியும். அவர் படித்ததன் மூலமாக அவர் பெற்றோர்களுக்கு நல்ல மகனாக இருந்து, உழைத்துப் பொருள் ஈட்டி பெற்றோர்களை மரியாதையாக நடத்த முடியும், மேலும், படித்து வளர்ந்தவர் அவருடைய சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்ய முடியும், கல்வி கற்று உயர்ந்த நிலையில் சென்றவர் அதன் மூலமாக உறவினர்களுக்கு உதவி செய்ய முடியும். அதுமட்டுமல்ல நல்ல நிலையில் ஒருவன் உயர்ந்தால் அவன் மூலமாக நண்பர்களுக்கும் நண்பரின் குழந்தைகளுக்கும் வழி காட்ட முடியும். எனவே கல்வி என்பது பல படிநிலைகளில் உதவி செய்யும்.
உங்கள் முன்னால் பேசிக்கொண்டிருக்கும் என்னையே உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். ஏழ்மையான நிலையிலும் கூட எனக்கு நல்ல கல்வி வழங்க வேண்டும் என்று எனது பெற்றோர்கள் சிரமப்பட்டு என்னைப் படிக்க வைத்தார்கள். நான் படித்ததால் முதலில் பட்டதாரியானேன். தொடர்ந்து சட்டம் படித்து வழக்கறிஞராக உயர்ந்தேன். அதன் பின்னர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நீதித்துறை நடுவராக பணியில் சேர்ந்து அதன் பிறகு உதவி அமர்வு நீதிபதியாகவும், தலைமை குற்றவியல் நீதிபதியாகவும், மாவட்ட நீதிபதியாகவும் உயர கல்வியே காரணமாக இருந்தது. விருப்ப ஓய்வு பெற்றதற்கு பிறகு கூட நான் கற்ற கல்வியும், தமிழின் மீது எனக்கு இருந்த பற்றும் மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் உறுப்பினராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பணியமர்த்துவதற்கு காரணமாக இருந்தது. அது மட்டுமல்ல நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட இன்றைக்கு உங்கள் முன்னிலையில் கோட் சூட் அணிந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி உரையாற்றுகிற வாய்ப்பை நான் கற்ற கல்விதான் எனக்கு வழங்கியிருக்கிறது.
மாணவர்களாக இருக்கும் போது ஒழுக்கத்துடன், ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை நன்றாகப் படித்தால் வாழ்வில் பல உயர்நிலைகளை அடைந்து முன்னேறலாம் என்பதை உணர்ந்து, நீங்களும் அனைவரும் நன்றாகப் படித்து உயர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன் என்று பேசினார்.
இந்த விழாவிற்கு பாரதி இன்டர்நேசனல் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் திருமதி கே. உமாதேவி தலைமை தாங்கினார். பாரதி கல்வி நிலையங்களின் நிறுவனர் திருமதி மோகனாம்பாள், கே. குமாரசாமி, பள்ளியின் துணை முதல்வர் சந்திரன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கே. கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
