காதலர் தின வாழ்த்துக்கள்
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/kaadhal.jpg)
காதலர் தின வாழ்த்துக்கள் – 14.02.2025.
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/kaadhal.jpg)
காதல் என்ற சொல்லுக்கு
அன்பு என்னும் பொருளுண்டு.
பாசம் என்றும் பொருளுண்டு.
நேசம் என்றும் பொருளுண்டு.
பக்தி என்றும் பொருளுண்டு.
ஈர்ப்பு என்றும் பொருளுண்டு.
நட்பு என்றும் பொருளுண்டு.
மோகம் என்றும் பொருளுண்டு.
காதல் பல வகையாகும்.
மண்ணின் மேல் காதலுண்டு
பெண்ணின் மேல் காதலுண்டு
பொன்னின் மேல் காதலுண்டு
பொருட்கள் மேல் காதலுண்டு
பதவியின் மேல் காதலுண்டு
பணத்தின் மேல் காதலுண்டு.
உழைப்பின் மேல் காதலுண்டு
உயிரின் மேல் காதலுண்டு-தாய்
மொழியின் மீதும் காதலுண்டு .
எதன்மேல் காதல், எவர் மேல் காதல்
என்பதற்கேற்ப காதலும் மாறும்.
காதலாகிக் கசிந்துருகியது
கடவுள் மேல் உள்ள பக்தியாகும்
பெற்றோரின்மேல் கொள்ளும் பாசம்
பிறவி முழுவதும் தொடர்ந்திட வேண்டும்.
உற்றார், உறவினர் மேலுள்ள நேசம்
உறவுகளைப் பேண உதவிடுமே.
நண்பர்கள் மீது ஏற்படும் காதல்
நாளும் நமக்கு மகிழ்ச்சி தரும்.
பள்ளிப்பருவத்துக் காதல்
பருவத்தில் வரும் ஈர்ப்பாகும்.- உடல்
ஈர்ப்பினால் வரும் காதல்
இழப்பில் ஒருநாள் முடிந்துவிடும்.
பணிக்கு வந்ததும் வரும் காதல்
பக்குவப் பட்ட காதலாகும்.
திருமணத்திற்குப் பின் காதல்
தித்திக்கும் சுக அனுபவமாம்.
உறவுகளைப் பிரிக்கும் காதல்
உயர்வான காதலில்லை.
ஆற்றங்கரை ,ஆலயங்கள்,
கடற்கரைகள், பூங்காக்கள்,
திரையரங்குகள், நூலகங்கள்,
உணவகங்கள், மால்களென,
காதல் களங்கள் இங்கு
கணக்கற்று உண்டெனினும்
மணவறையில் இணைந்தால்தான்
மன விருப்பம் நிறைவேறும்.
சாதி, இனம், மதம்,அந்தஸ்தென
காதலுக்கு எதிரிகளாய்
கணக்கற்று இங்கு உண்டு.
ஆணவக் கொலைகள் கூட
அன்றாடம் நடப்பதுண்டு.
வாழ்ந்து சாதிப்பதே காதலின்
இலக்காகும்.
இறந்து சரித்திரம் படைப்பதில்
இம்மியளவும் பயனில்லை.
ஏமாற்றத்தை மறக்க
மனமாற்றம்தான் வேண்டும்.
தடுமாற்றம் இருந்தால் அது
தற்கொலையில்தான் முடியும்.
வாழ்க்கையில் காதல் ஓர் அங்கம்தான்.
காதலே வாழ்க்கையென எண்ணாதீர்.
காதல் போயின் சாதலென்று
கவி பாரதியார் பாடியது
ஐந்தறிவு உயிர்களுக்கே,
ஆறறிவு மனிதர்க்கில்லை.
பேராசைக் காதலெல்லாம்
பேரழிவில்தான் முடியும்.
மாறாக நற்காதல்
மனம் மகிழ வைத்துவிடும்.
பிறப்பு நம் கையிலில்லை
இறப்பைத் தவிர்த்தவரில்லை.
பொறுப்புடனே காதலித்து
சிறப்பாக வாழ்ந்திடுவோம்.
வாழ்கையைக் காதலிப்போம்
வாழ்ந்திடவே காதலிப்போம்.
வாழும்வரை காதலிப்போம்.
வாழ்க காதலென்றுரைப்போம்.
காதலர்தினம் வாழ்க.
காதலர் தினமும் வாழ்க.
காதலுடன்,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.