கவிதைகள் (All)

தேசிய நாளிதழ்கள் தினம்

தேசிய நாளிதழ்கள் தினம்-29.01.2025.

(1780, ஜனவரி 29ல் “ஹிக்கிஸ் பெங்கால் கெசட் ” முதல் வார இதழ் கொல்கத்தாவில் வெளியிடப்பட்ட நாள்)

நாடு முழுவதும் மட்டுமினறி -உலக

நாடுகள் அனைத்திலுமே

நாளும் நடக்கின்ற நிகழ்வுகளை

நாட்டு மக்கள் அறிந்திடவே

நாளிதழ்கள் வழங்குவதால்

நான்காவது தூண் என்றே 

நாமெல்லாம் போற்றுகிறோம்.

அறிவியல், புவியியல், கணிணியியல், கல்வி,

அரசியல், ஆன்மீகம், சரித்திரம்,

சினிமா , பொழுதுபோக்கு ,

ஆரோக்கியம், வர்த்தகம், 

மகளிர், பாலர், சமையல்,

கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற 

அனைத்துத் தரப்பின்

அன்றாட நிகழ்வுகளை 

அள்ளித்தருபவை நாளிதழ்கள்.

அன்றாடம் காலை காபியுடன்

அன்றைய செய்தித்தாளோடு

ஒன்றிடுவார் பலருண்டு.

ஓசியில் படிப்போருமுண்டு. 

தேநீர்க் கடைகளைத்

தேடிச்சென்று படித்து 

வருவோர் பலருண்டு

வாதிடுவோரும் உண்டு. 

நாணயமாய் செய்திகளை

நடுநிலையோடு தரும் 

நாளிதழ்கள் சிலவுண்டு. 

நாணயம் பெற்றுக்கொண்டு

நாணயம் தவறுகின்ற 

நாழிதழ்களும் உண்டு. 

புலனாய்வு என்று சொல்லி

புரட்டுக்களை வெளியிட்டு

மிரட்டிப் பணம் பறிக்கும்

நாழிதழ்களும் உண்டு. 

விற்பனையை அதிகரிக்க 

கற்பனையைக் கலந்தளித்து

கலகத்தை விளைவிக்கும்

கள்ள நாளிதழ்களும் உண்டு. 

உண்மை, நேர்மை , மக்கள் 

நன்மை , முன்னேற்றம் என்று

தன்மையுடன் வெளிவரும்

நாளிதழ்கள் பலவுண்டு. 

நன்கொடைகளும் , சமந்தாவும்,

விளம்பரங்களும் , விற்பனையுமே,

நாளிதழ்கள் தொடர்ந்து வர 

நாடித்துடிப்பு ஆகிடுமே.

 வாசிக்கும் பழக்கத்தை 

நேசிக்கச் செய்வதும்

மொழி வளம் பெருக்கவும்

வழிவகுப்பது நாளிதழே. 

நல்ல நாளிதழ்களை 

நாமே இனம் கண்டு

நாளும் படித்து வந்தால்

நம் அறிவு வளர்ந்திடுமே. 

அன்புடன் ,

சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button