குவைத்தில் புகையால் மூச்சுத்திணறி தமிழர்கள் இருவர் உயிரிழந்த சோகம்!
குவைத்தில் புகையால் மூச்சுத்திணறி தமிழர்கள் இருவர் உயிரிழந்த சோகம்!
அயலகத் தமிழர் நலவாரியம் மூலம் தமிழக அரசு நிவாரண உதவி வழங்கிட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
குவைத் நாட்டில் டிரைவராக பணிபுரிந்து வந்த, கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை சேர்ந்த முகமது யாசின், முகமது ஜுனைத், திருவண்ணாமலையை சேர்ந்த கவுஸ் பாட்ஷா மற்றும் உ.பி.யை சேர்ந்த ஒரு நபர் ஆகியோர் பணி நிமித்தமாக அங்குள்ள பாலைவனப் பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் அங்கு தற்காலிக குடியிருப்பில் தங்கியிருந்த நிலையில், அதிக குளிர் காரணமாக அவர்கள் தங்கள் அறைக்குள்ளேயே தீமூட்டி குளிர் காய்ந்ததாக கூறப்படுகிறது. தீ மூட்டியவர்கள் அப்படியே தூங்கிவிட்டதால் அறை முழுவதும் புகை பரவி மூச்சு திணறியுள்ளனர். அவர்களில் மங்கலம்பேட்டையை சேர்ந்த முகமது யாசின், முகமது ஜுனைத் மற்றும் உ.பி. இளைஞர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை கவுஸ் பாட்ஷா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஏழ்மையான நிலையில் உள்ளதால், அதிக செலவு காரணமாக அவர்களின் உடலைக் கூட தாயகத்திற்கு கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினரின் அனுமதி பெற்று குவைத்திலேயே அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
வாழ்வாதாரத்திற்காக கடல்கடந்து வேலைக்கு சென்ற இடத்தில் நேர்ந்த இந்த துயரத்தால் அவர்களின் குடும்பத்தினர் பரிதவிக்கின்றனர். ஆகவே, தமிழக அரசு அயலகத் தமிழர் நலவாரியம் மூலமாக உயிரிழந்த மங்கலம்பேட்டையை சேர்ந்த இருவரின் குடும்பத்தினருக்கும் நிவாரண உதவி வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.