தேசிய தாத்தாக்கள் தினம்
தேசிய தாத்தாக்கள் தினம் – 22.01.2025
மகனாய்ப் பிறந்து
தகப்பனாய் வளர்ந்து
தாத்தாவாய் மாறி
முந்தைய தலைமுறைக்கும்
நாளைய தலைமுறைக்கும்
இன்றைய பாலமாக விளங்கும்
இனிய தாத்தாக்கள் தினம்.
பெயரன்,பெயர்த்திகளுக்கு
பழங்கதைகள் சொல்லுவதும்,
பள்ளிக்கழைத்துச் செல்வதும்
பூங்காக்களுக்கு கூட்டிச்சென்று
பாங்காக விளையாடுவதும்
தூங்க வைக்கச் செய்வதும்,
தேசபக்தி, தெய்வபக்தி,
பெற்றோர் பக்தி,பெரியோர் பக்தி
ஒழுக்கங்களை போதிப்பதும்
சொந்த ,பந்தங்களை உணர்த்தி
உறவுகளைப் பேணவைப்பதும்
அனுபவங்களைப் பகிர்ந்து
அறிவுரைகள் தருவதுவும்
பால் , காய்கறிகள், வாங்குதல்
பராமரிப்பு பணிகள் செய்வதும்
கட்டணங்கள் செலுத்துவதை
பட்டென நினைவுறுத்துவதும்,
காலைக் காப்பியொடு
செய்தித்தாள் படிப்பதுவும்
மாலையில் நண்பர்களுடன்
அன்றாட நடப்புகளைப் பற்றி
அளவளாவி மகிழ்வதுவும்
எடைகுறைக்க நடைபயிற்சி
இடையிடையே சிற்றுறக்கம்
தொலைக்காட்சியைப் பிறர்க்கு
தொல்லையின்றி பார்ப்பதுவும்
மகன் – மருமகளோடு நயமாய்
மனங்கோணாது நடப்பதுவும்
கேட்டால் மட்டுமே ஆலோசனை கூறி ,
கேட்காத பொழுது, காது கேட்காது இருப்பதுவும்,
தனிமையில் பழையநினைவுகளை
தானாகவே அசை போடுவதும்
இரண்டாவது குழந்தைப் பருவத்தில்,
இருப்பதைப் பாதுகாத்து ,
கிடைப்பதில் திருப்தி கொண்டு,
கட்டுப்பாடுகளோடு பிறர்க்கு
இடையூறின்றி இருப்பதுவும்,
ஓய்வு பெற்ற பின்னும்
ஓயாது கடமைகளை
ஓயும் நாள்வரை
ஒழுங்காக ஆற்றிவந்து
என்றிவர் மறைவார்
என்றெவரும் எண்ணாதவாறு
நன்று வாழ்தல்தானே
இன்று தாத்தாக்களின் பெருமை.
வாழும் வகை வாழும்
தாத்தாக்களுக்கு சமர்ப்பணம்
அன்புடன்,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.