முதுகுளத்தூர் வட்டாரத்தில் சிறுதானிய பயிர்களில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி!!
முதுகுளத்தூர் வட்டாரத்தில் சிறுதானிய பயிர்களில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி!!
முதுகுளத்தூர் :
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாரத்தில் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஏறக்குறைய 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல்லும் 1500 ஏக்கர் பரப்பில் குதிரைவாலிப் பயிரும் 800 ஏக்கர் பரப்பில் உளுந்து பயிரும் சாகுபடி செய்யப்பட்டு பயிர்கள் அனைத்தும் தற்போது அறுவடை நிலையை எட்டி உள்ளன. இன்னும் ஒரு வாரங்களில் வட்டாரம் முழுவதிலும் உள்ள முழு அறுவடை நிலையை எட்டிவிடும் நிலையில் உள்ளது. இந்நிலையில் அதிக லாபம் தரவல்ல மற்றும் வேளாண்மை துறை மூலம் சொல்லப்பட்ட தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து நல்ல மகசூல் எடுக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டு தோறும் மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பயிர் விளைச்சல் போட்டியில் அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் முதுகுளத்தூர் வட்டாரம் வெங்கலக்குறிச்சி கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் கேழ்வரகு பயிர் சாகுபடி செய்த விவசாயி நாகநாதன் அவர்கள் வயலில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டது. மாநில அளவில் நடத்தப்படும் இப் போட்டிக்கு சென்னை வேளாண்மை இயக்குனர் சார்பாக விருதுநகர் மாவட்ட துணை வேளாண்மை இயக்குனர் திருமதி லதா அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இராமநாதபுரம் இணை இயக்குனர் சார்பாக வேளாண்மை துணை இயக்குனர் அமர்லால் கலந்து கொண்டார். இந்த பயிர் விளைச்சல் போட்டியின்போது 50 சென்ட் பரப்பில் உள்ள கேழ்வரகு பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு தானியங்கள் அடித்துத் தனியாக பிரிக்கப்பட்டு சுத்தம் செய்து அவற்றின் எடை மற்றும் செடிகளின் மொத்த எடையும் கணக்கீடு செய்யப்பட்டது.
அதேபோல் விளங்குளத்தூர் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்ட குதிரைவாலி பயிரில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டிக்கு பதிவு செய்திருந்த வேலுச்சாமி என்ற விவசாய யின் வயலிலும் இப்போட்டி நடத்தப்பட்டது.
போட்டியின் போது பதிவு செய்யப்பட்ட மகசூல் விவரங்கள் வேளாண்மை இணை இயக்குனர் இராமநாதபுரம் அவர்கள் மூலமாக சென்னை வேளாண்மை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். மாநில அளவில் இதேபோன்று பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படும் பயிர் விளைச்சல் போட்டியின் விவரங்கள் தொகுக்கப்பட்டு மகசூல் அடிப்படையில் அதிக விளைச்சல் எடுத்த விவசாயிக்கு முதல் பரிசாக ரூபாய் இரண்டரை லட்சம் இரண்டாம் பரிசாக ரூபாய் ஒன்றரை லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் ஒரு லட்சமும் வழங்கப்படும்.
மேலும் அரசு அலுவலர்களை தவிர இப்போட்டி செம்மையாக நடத்தப்படுவதை உறுதி செய்திடும் விதமாக விவசாயிகளின் பிரதிநிதியாக கமுதி வட்டாரம் கோரை பள்ளம் கிராமத்தைச் சார்ந்த இயற்கை விவசாயி திரு ராமர் அவர்களும் கலந்து கொண்டு பயிர் விளைச்சல் போட்டியில் மகசூல் கணிக்கப்படும் விவரங்களை பார்வையிட்டு பதிவு செய்தார்.
இந்த பயிர் விளைச்சல் போட்டியின் போது முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திரு கேசவராமன், வேளாண்மை அலுவலர் தமிழ் அகராதி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் மற்றும் முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.