சீருடை அணிந்திருந்தாலும் பஸ்களில் கறார் கட்டணம் இலவச பஸ் பாஸ் இன்றி படிப்பை கைவிடும் அபாயம்
முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பகுதியில் அரசு டவுன் பஸ்களில், “யூனிபார்ம்’ அணிந்த மாணவர்களிடம், கட்டாய கட்டணம் பெறப்படுவதால், கிராமப்புற ஏழை மாணவர்கள் படிப்பை இடைநிறுத்தம் செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதுகுளத்தூர் பகுதி பள்ளிகளில் படிக்கும், கிராமப்புற மாணவர்கள், சீருடை அணிந்திருந்தாலும், அரசு பஸ்களில் கட்டாய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. செலவு அதிகரிப்பால், ஏழை மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கண்டிலான் சேதுபதி கூறியதாவது: சீருடை அணிந்திருந்தாலும், மாணவர்களிடம் கண்டக்டர்கள் கட்டாயமாக கட்டணம் வசூலிக்கின்றனர். பஸ் பாஸ் இல்லாவிட்டாலும், சீருடை அணிந்திருந்தால், கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற அரசின் அறிவிப்பை எடுத்துரைத்தாலும், “காசு இல்லைன்னா… எதுக்கு உனக்கு படிப்பு’ என, கண்டக்டர்கள் ஏளனம் செய்கின்றனர், என்றார்.
அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் (காரைக்குடி மண்டலம்) மணிமுத்து கூறுகையில், “”பஸ் பாஸ் வழங்குவதில் தாமதமாகிறது. பாஸ் பெறும் வரை, சீருடை அணிந்திருந்தால், கட்டணம் வசூலிக்கக்கூடாது என கண்டர்களிடம் அறிவுறுத்தி உள்ளோம். மீறி வசூலித்தால், பஸ்சின் பதிவு எண், கண்டக்டர் பெயர் குறித்து புகார் தெரிவித்தால், நடவடிக்கை எடுக்கபடும்,” என்றார்.
அலைக்கழிப்பு: ஆண்டுதோறும், பள்ளி நிர்வாகத்தின் சார்பில், மாணவர்களின் விபரங்களுடன் போட்டோக்களை சேகரிக்கின்றனர். போக்குவரத்துக்கழக டெப்போவில் கொடுத்து, இலவச பாஸ் பெறுகின்றனர். இந்தாண்டு முதல், கடந்தாண்டு பிளஸ் 2 படித்த மாணவர்களின் அனைத்து இலவச பாஸ்களையும், திரும்ப ஒப்படைத்தால் தான், புதிய பாஸ் வழங்கப்படும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள், பள்ளி நிர்வாகங்களை நிர்பந்தித்து வருகின்றனர். மேலும், பழைய பாஸ்களை ஒப்படைக்க தவறினால், சம்மந்தபட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது பொறுப்பாசிரியர்கள், இதற்கு முழு பொறுப்பேற்று கொள்வதாக, ஒப்புதல் கடிதம் கொடுத்தால்தான், புதிய பாஸ் வழங்கபடுகிறது. மேலும், பாஸ்களை, பல தவணையாக வழங்குகின்றனர். இதற்காக டிப்போவுக்கு செல்வதால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முதுகுளத்தூர் ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், “”பழைய, இலவச பாஸ்களை, பள்ளி மாணவர்கள் தொலைத்தும், சேதபடுத்தியும் உள்ளனர். பழைய பாஸ்களை சேகரிக்கவே தவிக்கிறோம். புதிய பஸ் பாஸ்கள் வழங்க, போக்குவரத்து துறையினர் காட்டும் அலட்சியத்தால், நொந்துபோகிறோம்,” என்றனர்.
முதுகுளத்தூர் டெப்போ மேலாளர் சரவணன் கூறுகையில், “”தணிக்கைக்காக, பழைய இலவச பஸ் பாஸ்களை சேகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் ஆசிரியர்களிடம், பழைய பாஸ்களை ஒப்படைத்தால்தான், புதிய பஸ் பாஸ்கள் வழங்கபடும் என நிர்பந்திக்கவில்லை,” என்றார்.