திருமலர் மீரான் கவிதைகள்
மொழிமழலை
பத்துமாதம் காத்திருக்கவில்லை
உயிர் மெய் புணர்ச்சியில்
உடனே பிறந்தது குழந்தை
சொல் !
பலவண்ணப்பணம்
கறுப்புப் பணம்
பல வண்ணங்களில் வெள்ளித்திரையில்
வெள்ளையானது
அடி (த்) தட்டு
அடித்தட்டு
ஆடு, மாடு, மான்கள்
சிங்கம், புலிகளை அடித்துக்
கொன்று ஏப்பம் விட்டன !
தலைக்கனம்
உதையின் வேகத்தில்
உயரே பறந்ததும்
கீழே கிடந்த பந்தினை
இளக்காரமாகப் பார்க்க
தலைக் கனத்தால்
தரையில் விழுந்தது !
தலைகீழ் திரை
அறுபத்தொன்று
பதினாறுடன் ஓடியாடி
விளையாடும் திரை வெளி !
உப்புக்காதல்
முத்தெடுக்க
காதல் கடலில் மூழ்கினேன்
கிடைத்ததோ உப்பு மட்டும்
கண்ணீர் விடுகிறேன் !
ஜவுளிக்கடை
கோட்டு சூட் சட்டையுடன்
நடமாடும் ஜவுளிக்கடையாக
போன ஆளை கேலியாகப் பார்த்தான்
கடைத்தெருவில்
கோவணத்துடன் இருந்த ஏழை !
பெரும்புள்ளி
கல்லூரியில் படித்து
பெரும்புள்ளியாக நினைத்தவன்
கல்வியின் புள்ளியைப் பெயர்த்தான் !
வீடு
பலமாடி அடுக்கு கட்டிடம் அருகில்
மாபெரும் கட்அவுட்
ஏழைகளுக்கு இல்லம் தந்த
எங்கள் தலைவா வாழ்க !
அதன் அடி நிழலில் உறங்கும்
ஏழைகள் !
நன்றி “
ஏழைதாசன்
சித்திரை ( ஏப்ரல் ) 2012