இரத்தச் சுவடுகள்..
தலையில் அச்சு பதிய
புத்தகப் பை மாட்டி நடந்த நாட்களில்
புத்தகங்கள் கனத்ததுப் போலவே கனக்கிறது மனசு;
கிழிந்து கிழிந்துப் போன
புத்தகங்களை எடுத்தடுக்குவதைப் போலவே
மனதிற்குள் கிழியும் உணர்வுகளின்
அடுக்குகளோடு நடக்கிறேன்; காயமுறுகிறேன்;
ஆங்காங்கே –
எதை எதையோ நினைத்து
வலிக்கிறது மனசு..
உள்ளே வேகமாய் புகுந்தோடி
வகுப்பில் அமர்ந்த அதே பதட்டம்,
பயந்து பயந்து பரிட்சையெழுதிய
அதே படபடப்பு,
தேவையற்றதை வேறு வழியின்றி
மனப்பாடம் செய்ததைப் போன்ற
வேறு வழியற்ற அதே வாழ்க்கை,
இன்னும் –
என்னென்ன இருக்கோ; அப்பா; அம்மா;
மரணமென..
எல்லாம் வழிநெடுக்க முட்கள்.. முட்கள்..
முட்கள் மனம்தைக்கும் பாதைதானா
வாழ்க்கை?
எல்லாவற்றையும் மிதித்துக்கொண்டே
நடக்கிறேன்,
ரத்தக் கரைகளில் எனது கால்தடம்
வழியெங்கும் பதிந்துகொண்டே வருகிறது..
பதியப் பதிய
சிவப்பு உறுத்தும்
கண்களை அகலவிரித்து நடக்கிறேன்..
நடக்க நடக்க இன்னும்
வலிக்குமென்பது தெரியும்
வலிக்கட்டும் –
நன்கு வலிக்கட்டும் –
நாளை எனது ரத்தச் சுவடுகள்
யாருக்கேனும் வாழ்வின் வழியைக் காட்டுமெனில் –
புத்தகப்பை கனக்கும் மனதை
தூக்கிக்கொண்டு
இன்னும் கொஞ்ச நாள் நடக்கலாம்..
ரத்தச் சுவடுகள் இன்னும் சற்று தூரத்திற்கு
நீளலாம்..
——————————
வித்யாசாகர்