கவிதைகள் (All)
திருக்குறள் தேசீய நூல்!
நாட்டுளோர் நலமாய் வாழ அறம் பொருள் இன்பம் என்று
கூட்டுமோர் இனிய வாழ்க்கை குவலயம் எங்கும் விரியும்
காட் டுமோர் வழியில் சென்றால் கலகங்கள் ஏதும் இல்லை
ஓட்டைகள் உடைசல் இல்லா தேசியத் தலைநூல் அன்றோ?
கல்வியின் சிறப்பைப் பாடும் கருணையின் நிலையைக் கூறும்
செல்வனின் இயல்பைக் காட்டும் சிறியரை விலக்கச் செய்யும்
நல்லவை எல்லாம் நாட்டும் நலிந்தவை எல்லாம் ஓட்டும்
சொல்பொருள் விளக்கிப் பேசும் சுகப்பொருள் என்னவென்பேன்?
சாற்றிடும் ஞானம் யாவும் சத்தியம் ஆகிக் காணும்
போற்றிடும் வழிகள் யாவும் புண்ணிய நிலையாய் மேவும்
ஆற்றுமோர் ஆறும் அதுதான் அருள்நெறி உறையும் நூலாம்
ஏற்றுமோர் தீபம் அந்த எழில்பெறும் குறள்நூல் அன்றோ?
கண்ணுக்கு அணியாய் ஆகும் கருத்துக்கு அணியாய் ஆகும்
பண்புக்கு அணியாய் ஆகும் பாருக்கு அணியாய் ஆகும்
உண்மைக்கு அணியாய் ஆகும் உயர்வுக்கு அணியாய் ஆகும்
பெண்மைக்கும் அணியாய் ஆகும் பிறகென்ன சாட்சி வேண்டும்?
வேதத்தின் சாறு எல்லாம் விளங்கிடும் வகையில் கூட்டி
பேதங்கள் இல்லா நிலையில் யாவரும் ஏற்கும் வண்ணம்
நீதமாய் சொன்னான் குறளோன் நீள்புவி போற்றும் வண்ணம்
வேதமாய் நிற்கும் குறளின் புகழ்சொல வார்த்தை இல்லை!
இம்மதம் இந்த மாந்தர் இம்மொழி இனத்தார்க் கென்று
தம்மதம் காட்டா உயர்வில் தரணியின் வாழும் மாந்தர்
எம்மதம் எவரென்றாலும் இன்புடன் ஏற்கும் வண்ணம்
சம்மதம் சொல்லும் அந்த சத்தியம் பொதுமை அன்றோ?
அத்தாவுல்லா
குறிப்பு:
(இது அடியேன் எழுதிய ஒரு பழைய பாடல். ஏறத்தாழ 30- ஆண்டுகளுக்கு முன்னர் என் கல்லூரி நாட்களில் எழுதியது. என்னுடைய அடுத்த கவிதை நூல் தொகுப்புக்காக புரட்டிக் கொண்டிருக்கையில் கண்களில் பட்டது. சிற்சில மாற்றங்களுடன் அதனைச் செதுக்கி அனுப்பி இருக்கிறேன். )