வாலிப வயதை வீணாக்காதீர் !
( முபல்லிகா ஏ. நஜாத் முனவ்வரா, முதுகுளத்தூர் )
‘’எவருக்காவது பிள்ளை பிறந்தால் அந்தப் பிள்ளைக்கு அழகிய திருநாமம் சூட்டவும். நல்ல ஒழுக்கங்களை கற்றுக் கொடுக்கவும். அவர் வாலிப வயதை அடைந்துவிட்டால் அவருக்குத் திருமணம் முடித்து வைக்கவும். பருவம் அடைந்த பின்னரும் (அலட்சியமாக இருந்து) மகனுக்கு மணமுடித்து வைக்கவில்லை என்றால் (அதன் காரணமாக) அவன் பாவத்தில் வீழ்ந்து விட்டால் அந்தப் பாவம் அவன் தந்தையையே சாரும்’’
என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவுரை கூறி இருக்கிறார்கள்.
பொடுபோக்கான ஒவ்வொரு தந்தையையும் திடுக்கிட வைக்கும் இந்த உணர்வூட்டும் உபதேசம் ‘’பைஹகீ’’ வரலாற்றுக்கிரந்தத்தில் வைர வரியாக மின்னிக் கொண்டிருக்கிறது.
இன்றைய குழந்தைகளுக்கு எதையோ ஒரு கம்ப்யூட்டர் பெயரை வைத்து விட்டு, அதன் பொருளும் தெரியாமல் அதன் விளக்கமும் புரியாமல் அதைக் கூப்பிடவும் முடியாமல் உலகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
அவனை ஒழுக்கமும் மார்க்கமும் தெரியாமல் வளர்த்து ஏதோ அவன் சம்பாதித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.
பாழான பெற்றோர் :-
முப்பது வயதையும் தாண்டி அந்தப் பிள்ளை கடல் கடந்து போய் சம்பாதித்துக் கொடுத்தாலும் அவனுக்கு ஒரு வாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைப்பதில்லை.
இப்படிப் பாழாய்ப் போன பெற்றோருக்குப் பிறந்த சில குடும்பத்துப் பிள்ளைகள் சம்பாதிக்கச் செல்லும் இடங்களில் உணர்வுகளைக் கட்டுபடுத்த முடியாமல் ஹராமில் மாட்டிக் கொள்கிறார்கள் ! அவதிப்படுகிறார்கள் ! இதற்கெல்லாம் காரணம் யார் ? அவர்களைப் பெற்ற பெற்றோர்கள் தானே ?
உண்மை பாக்கியம்
’’அல்லாஹ்வை ஈமான் கொண்டவர்களுக்கு இறை அச்சத்தை அடுத்துக் கிடைக்கும் பாக்கியங்களில் தனக்கு இசைந்து நடக்கும் படியான – இணக்கமான மனைவியை விடச் சிறந்த பாக்கியம் எதுவுமில்லை. அவன் எதையும் கூறினால் அதற்கு கட்டுப்படுவாள். அவன் அவளை நோக்கினால் மகிழ்ச்சி அடைவாள். அவன் கூறும் கட்டளைக்கு மாறு செய்ய மாட்டாள். அவள் அவனை விட்டு வெளியேறிச் சென்றால் அவனது உடைமைகளையும், தனது கற்பையும் பாதுகாத்துக் கொள்வாள்.’’
என்றார்கள் நபி (ஸல்) அவர்கள் .
ஹள்ரத் அபீ உமாமா (ரளி) அவர்களின் வாயிலாகக் கிடைத்த இந்த நல்ல அறிவுரைக்கோவை “இப்னு மாஜா” நபிமொழி நூலில் இடம் பெற்றிருக்கிறது.
நல்ல பெண்மணியை தன் மகனுக்குத் தேடி வைத்தால் இந்த பாக்கியத்தை அந்த மகன் பெறுவான்.
முன்பெல்லாம் பெண் பார்க்கப் போகும் இடங்களில் பெண் ஒழுக்கமாக இருக்கிறதா ? குர்ஆன் ஓதி இருக்கிறதா ? ஐந்து நேரம் தொழுகிறதா ? மார்க்க விளக்கம் தெரிந்து இருக்கிறதா ? என்று கேட்பார்கள். அப்படிப்பட்ட பெண்ணாக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு கல்யாணத்தை முடிப்பார்கள்.
இன்றைய நிலை எப்படி ? அது இப்படி ! பெண் அழகாக இருக்கிறதா? சிவப்பாக இருக்கிறதா ? படித்து வேலைக்குப் போகிறதா ? எத்தனை ஆயிரம் சம்பளம் ? எத்தனை பவுன் போடுவீர்கள் ? கல்யாணச் செலவு எல்லாம் ஏற்றுக் கொள்கிறீர்களா ? அப்படி இப்படி என்று எப்படி எப்படியெல்லாமோ கேட்கிறார்கள், முடிக்கிறார்கள்.
மானம் இழக்காதீர்கள்
பெண் வீட்டார் கொடுப்பது வரை கொடுக்கிறார்கள் ! கொடுத்து முடித்து விட்டுப் பிறகு கொடையோ கொடை என்று கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். மாப்பிள்ளை வீட்டார் குனிந்து கொண்டு வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள் ? இது தேவையா ?
இப்படிப்பட்ட பெண்ணை எடுத்தால் அவள் எப்படி கணவன் எதுவும் சொன்னால் கட்டுப்படுவாள் ? (முறைக்கத்தான் செய்வாள்) அவன் அவளை நோக்கினால் எப்படி மகிழ்ச்சி அடைவான் ? (கடுகடுக்கத்தான் செய்வான்) அவன் கூறும் கட்டளைக்கு எப்படி கட்டுப்படுவாள் ? (மீறித் தான் நடப்பாள்) அவன் அவளை விட்டும் வெளியே சென்றால் அவனது உடைமைகளை எப்படிப் பாதுகாப்பாள் ? (அவள் இஷ்டப்படிதான் செலவழிப்பாள்) இது தானே இன்றைக்கு நடக்கிறது ?
இப்படி தீன் சொல்லும் தகுதிகளைப் புறக்கணித்து விட்டு தின்பதற்கும், உண்பதற்கும் ஆளாய்ப் பறந்தால் பெற்ற பிள்ளைக்கு உற்ற பெண் அமையுமா ?
பிள்ளைகளைப் பெறுவது பெரிதல்ல ! அதற்கு பத்து மாதம் போதும், ஆனால் அதை ஆளாய், சங்கையாய் ஆக்கி வைக்க பல்லாண்டுகள் உழைக்க வேண்டும் !
நன்றி : குர்ஆனின் குரல் – ஜுலை 2012