சரித்திர ஏட்டில் சித்திரம் வரையும்
சாமான்ய மனிதனின் தூரிகை
இயற்கையின் பிழையா: இல்லை
இயற்றியவன் பிழையா?
இடறி நிற்கும் கவிதை
காலம் எனும் எழுத்தாளன்
கணக் கெழுத நினைந்த போழ்து
கனல் வெப்பத்தை தூரிகையின் மையாக்கி
கானல் நீர்தனுன் வாழ்க்கை என்று
வஞ்சித்து வரி எழுதி விட்டான்
வரலாற்றை வறுமை கோடாக இட்டு
வந்துவிடாதே இதை மீறி என்று
வதைப்பதற்காய் விதையிட்ட சோகம்
பால் போன்றது பிள்ளை பருவம்
தேன் போன்றது மழலை இதயம்
மலர் போன்றது இளைய பருவம்
கவின் மிகுந்தது குழந்தை தருணம் – ஆனால்?
பணம் படைத்த பெற்றோர் வேண்டும்
பணமில்ல பெற்றோர் பெறுவது
பிள்ளைச் செல்வமல்ல சிலருக்கு அது
தொல்லைத் துன்பம்
ஒட்டிய வயிறு உலர்ந்த நாவு
ஒட்டுக்கள் உடைகளிலா
உடைகளே ஒட்டுக்களிலா
உலகில் மலரும் தருணமதில்
உலர்ந்து உதிரும் மொட்டுக்கள்
உள்ளங்களை பிழியப் படுகிறதே
உலகை காண பிறந்த குழந்தை
உள்ளன் கைகளில் கொண்டு வந்ததோ வறுமை
சின்னஞ்சிறு பிள்ளைக்கு தம்
செங்குருதிகளை பாலாக உருக்கி
சேலைத் தலைப்பில் மடியேந்தி
நெஞ்சத்தில் சுரக்கும் அமுதமதை
நிறை வாய் செலுத்திடும் தாயமுதே
வறுமை என்பது வேரறுக்கப் படவேண்டிய
விஷயமதை ஒப்புக் கொள்வோம் – அதை
வரையறுக்கவும் வேண்டுமல்லவா
இளமையின் வறுமை எது
இளமையில் வறுமை ஏது
பிள்ளை எனும் முல்லைக்கு
இல்லாமை என்பது ஏது
தாயன்பு தாய்ச் சுகம்
தனவந்தர் வீட்டிலேயே பிறந்திட்டாலும்
செல்வந்தனாய் பிறந்தாலும் அக் குழந்தை
தாயின் அன்பு கிடைக்காவிட்டால்
செல்வம் இல்லா எலிதான்
கொடிதினும் கொடிதாய் அறியப் படுகிறது
குழந்தை பருவத்தில் ஏழ்மை
கொடுமைதான் அது கொடியது தான்
நீரின்றி வாடும் பெருமரம் நிலைநிற்கும்
நீரில்லா சிறு பசுங்கொடி என்செய்யும்
நிலை தடுமாறி விடாதோ
உங்களை வாட்டி வதைத்து விடாதோ
பொருள் படைக்காத பெற்றோரால்
வறுமையில் வாடும் செல்வங்கள்
காலக் கோலங்கள் இட்டுவிட்ட
இடம் மாறிய புள்ளிகளோ
வறுமை என்பதே சமூக கேடுதான்
இளமையில் வறுமை என்பதோ
மனித சமுதாயத்தின்
மகத்தான் தோல்வி
ஏற்றத் தாழ்வின் தடா வழிப் பாதை
குணம் நாடிக் குற்றமும்
நாடிட வேண்டும் அல்லவா?
இளமைக் கால வறுமை நிலை
எண்ணில்லா பேரை வார்த் தெடுககிறது
எதிர் கார வாழ்வதனை
இப்படித் தான் வாழ வேண்டும்
என்றே ஓர் பாடம் தருகிறது
இளமையில் ஏற்கும் காயங்கள்
வாழ்வின் எல்லா நேரங்களுக்கும்
வழிகாட்டி வரைபடமாய் நம்முடன்
வாந்தி தொடர் கின்றது
வாழ்வை செப்பனிடும் வாய்ப்பாக
துன்பங்கள் ஒன்று சேர்ந்து
தொடர் தாக்குதல் தரும் வேளை
கால வெள்ளத்தின் வேகத்தை
காலை மிதித்து கடந்திட பாதை தருகிறது
வேதனைகள் வெப்பமாய் தாக்கி
வாழ்வின் பாதைகள் அனலாய்
கொதிக்கும் பொழுது அங்கே
தெருவின் நிழலாய் குளுயம் தருகிறது
சிறு வயதின் முதிர் அனுபவங்கள்
இயற்கை பள்ளிக்கூடத்தில்
இலவசமாய் பயிலும் மாணவர்கள்
இடையூறுகளும் தடையூருகளும்
இவர்களுக்கு எண்ணிலடங்காதவை
இலட்சம் அணுக்களின் தொடர் ஓட்டத்தில்
மிச்சம் மீதம்தான் தடை கடக்கிறது
அது உயிராகி உலகை அடைகிறது
இன்னும் பயிராகி வளர முனைகிறது
வளரும் பயிர் வளர்ந்தேதான் தீரும்
வறுமை என்பது பறிக்கப் படும் களைதான்
களைகளால் சில பயிர்கள் சேதப் படுவதுண்டு
களைகள் களையப் படவேண்டும்
ஏழைக்கு இரங்கிடுவோம்
ஏழ்மையை விரட்டிட
ஓயாது உழைத்திடுவோம்
இல்லாமையை இல்லாமையாக்கிட
எல்லோரும் இணைந்திடுவோம்
உழைத்து உயர்திடுவோம்.
முதுவை சல்மான்
ரியாத், சவூதி