எங்களுக்கும் சொந்தமாய் கண்கள் உண்டு..

இலக்கியம் கவிதைகள் (All)

eyes

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எங்களுக்கும்

சொந்தமாய் கண்கள் உண்டு..
இருப்பினும் காமிரா மனிதர்களே
எம் நெற்றிக்கண் திறக்கிறார்கள்.!

கண்முன் நடந்தாலும் எதையும்
கண்டு கொள்ள மாட்டோம்.
ஆனால் ஊர் பற்றி எரியும் போது
கூடவே நாங்களும் அழுவோம்.!

நீதிக்கான
எங்கள் கோபங்களுக்கும் ஆத்திரங்களுக்கும்
காலக்கெடு உண்டு.!
அவை புஸ்வாணமாகிப் போகும்
ஊர் அடங்கிய பின்னே!

சினிமாக்கள் எங்களின் சிறைச்சாலைகள்.
தொலைக்காட்சிகள் எங்கள் சவப்பெட்டிகள்.

சுகம் காண்கிறோம் – நாம்
அடிமைகளாக வாழ்வதிலே..
விலை போகிறோம் என்பதை
பெரும்பாலும் அறியாமலே..!

நம் கோபங்களைக் கூட
யாரோதான் தீர்மானிக்கிறார்கள்.!
நம் தாபங்களை எல்லாம்
அவர் தம் செல்வம் கொழிக்க உபயோக்கிறார்கள்..

பொழுதுபோக்குகளில் தான்
எங்கள் பொழுதெல்லாம் போகிறது.
அழுது முடிக்கையில் தான் எம்
அவலங்கள் தெரிகிறது.

அரட்டை அரங்கத்தில் அழுகின்ற
மனிதர் நிலைகண்டு கண் கலங்குவோம்,
நித்தமும் கண்முன் கலங்கும்
மனிதர் நிலை கண்டு சிறு கவலையும் கொள்ளோம்.!

சொந்த மனசாட்சி எங்களுக்கென்று தனியே இல்லை.
புரட்சிகள் பேசும் எங்கள் இதயங்கள்,
தனியாளாய் மாறுகையில்
தறுதலைகளாக மாறும்.

தள்ளுவண்டி காய்கறி கடையாளிடம்
கிராம் குறையாமல் மிச்சம் பிடிப்போம்.
பளபளவென ஜொலிக்கும் வணிக வளாகத்திலே
மொத்தமாய் இழப்போம்..

ஊரெல்லாம் இலஞ்சமின்றி
இருக்க கனாக் காணுவோம்.!
கையூட்டை கச்சிதமாய்
எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் திணிப்போம்.

எல்லோரும் நல்லவராக இருக்கும்படியாய்
கனா காணுவோம்
எல்லோரும் என்பதில் நம் பெயரும் அடங்கியதே
என்பதை வசதியாய் மறப்போம்

தேனீர்க்கடையின் கூட்டு விவாதங்களில்
காந்தியின் அகிம்சைகளில் இம்சைகளை காண்போம்.
பகத்சிங்கின் போராட்டங்களில் பயத்தை படிப்போம்.
திப்புவின் வீரத்தில் ஓட்டைகள் வெடிப்போம்.
நேதாஜியின் முயற்சிகளில் குறைகளைக் காண்போம்.

இறுதியாய் பேசிப்பேசி கலையுகையில்
மொத்தமாய் தொலைவோம்
ஒரு துரும்பும் அசைக்க துப்பில்லா
வெட்டிப் பொம்மைகளாய்..

கண் முன் நடக்கும்
அவலம் கண்டு கலங்காதவரை…
முடிந்தும் தடுக்க முயலா
கொடுமைகள் தொடரும் வரை..
என்னவன் என்பதற்காய் தீயதையும்
ஆதரிக்கும் மனநிலை மாறாதவரை,
கொடுமைகள் கொடுமைகள் கொடுமைகள் என
எல்லாம் இப்படித்தான் வந்து செல்லும் –
இறுதியில் ஒரு நாள் எம்மையும் கொல்லும்.!

-Abbas Al Azadi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *