அரசியல்

கவிதைகள் (All)

கதர்ச் சட்டையால்
மறைக்க முடியாத
அரசியல் நிர்வாணத்தை
இவர்கள்
கரை வேட்டியால்
மறைக்க முயன்று தோற்று
இறுதியில்…..
முந்தானையாலும்
மூடி மறைக்க
முடியாமல் போன சோகம்
ஆட்சியின் அவலம்.

வந்தாரை வாழவைக்கும்
தமிழகமே!
உடன் பிறவா பாசமும்
உடன் பிறப்பு பாசமும்
உன்னை உலுக்கும் வேகத்தில்
சராசரி மனிதனின் கனவு
சமாதி கட்டப்படுகிறது.

முத்தமிழ் வளர்த்த
மூத்த இனமே!
உனக்கு
மூன்றாம் தமிழின் மேல் மட்டும்
மீளாத மோகம்!
இல்லையெனில்
நடிப்பவருக்கு மட்டுமே
நாடாள அனுமதி கிட்டுமா?

திராவிட காய்ச்சலுடன்
தடுமாறிய நீ
வடக்கு வைத்தியத்தில்
விருந்தும் மருந்துமாய்
ஊசிப் போனதையே
உண்டு மகிழ்ந்து
வீசிப் போனாய்!
இனி உன்னிடம்
வீரத்தைப் பற்றி பேசுவது
வீண் வேலை!

அன்று-
புறமுதுகு காட்ட வைத்த
உன் போர் வாள்களையெல்லாம்
இன்று அவாளிடம்
கத்தரிக்காய் நறுக்கக் கொடுத்து
காத்திருக்கின்றாய்
துருப்பிடித்த பின்னாவது
தூக்கியெறிவார்களா என்று
பத்திரிக்கை அனைத்தும்
பாதங்களுக்கு அடியில்!
தொலைக்காட்சி வானொலி
தோப்பனார் சொத்து!
துயிலும் உனக்கு மட்டும்
தொடர்ச்சியாய் தாலாட்டு!

விழித்து விடாதே!
விழித்து விட்டால்
விபரங்கள் புரிந்துவிடும்
புரியாதவரை
எல்லாம் இலவசம்!

சேலை
வேட்டி
பானை
சத்துணவு
சாராயம்
திருமணம்
தீக்குளிப்பு
அனைத்தும் இலவசம்!

ஆனால்….
உன் ஓட்டுக்கு மட்டும்
கரும்பு தின்ன கூலி!

ஜனநாயகத்தில்
மக்கள் தீர்ப்பே
மகேசன் தீர்ப்பாம்

வாழ்க ஜனநாயகம்!
வெல்க அரசியல்
பாவம் மக்கள்.

நன்றி : அஹ்மது கபீர்

http://islamiyakolgai.blogspot.com/2009/05/blog-post_6502.html


islamiyargal@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *