வ.களத்தூர்-கவிதை!

கவிதைகள் (All)

பாரில் சிறந்த ஊரோ…
காணும்
ஊரில் சிறந்த ஊரோ
நானறியேன்!

எங்கும் எழில் மிகு
எமதூர்…
அன்பைப் பருக தரும்
அமுதூர்!

அருகில் அழகாய்
பூத்திருக்கும்
சிற்றூர்களுக்கெல்லாம்
விழுதூர்!

இது
கல்லாறு பாயும்
நந்தவனம்..!
கார்மேகம் கலைப்பாறும்
பூங்காவனம்..!

கட்சிகள் தொடுத்தும்
கழகங்கள் புரிந்தும்
நல
சங்கங்கள் அமைத்தும்
சேவையே எமக்கு இலக்கு!

மக்களின்
மண நிறைவைச் சொல்லும்
முகப் பொலிவை…
கண்டால் விளங்கும்
புதிதாய் எதற்கு விளக்கு..!

தென்திசை ஏரியின்
தெவிட்டா தென்றலும்,
வடதிசை ஆற்றின்
வாஞ்சை மிகு காற்றும்
நன்செய் புன்செய்களின்
நாற்திசை வசந்தமுமாய்…

அழகு மிளிர
எழிலுக்கு இங்கு
பஞ்சமில்லை..
எவர் மனதிலும் இங்கு
நஞ்சுமில்லை…!

கோவில்கள்
மசூதிகள்
சர்சுக்கள்- என
காண
திக்கும் திசையும் தெரியும்.
இங்கு…
மதங்களில்லை
’மனிதங்கள்’ விதைக்க
இவைகள்
‘அறநிலை ஆலயம்’
என்பது
அறிதலால் மட்டுமே புரியும்!

பேருந்து காத்து
கையில் பையோடு
தேரின் நிழலில்
அப்துல்லா…

ரேசன் வாங்க
மிதிவண்டி நிறுத்தி
மசூதி மினாரா நிழலில்
பீட்டர்…

மருத்துவமணையில்
மருத்துவர் வரும் வரை
சர்சில் ஓய்வு கொள்ளும்
ராமாயி…

நிழல் தந்தும்
நிழல் பெற்றும்
நல்லிணக்கம் ஒன்றே
எங்களின்
பேரியக்கம்!
மதம் கடந்த
”ஒற்றுமையே
எங்களின் வலிமை!”

ஊரின் பசுமை கண்டு
பறந்து வந்த
பைங்கிளிகள்
இங்கே கூடு கொள்ளும்
போவதில்லை…
தொழில் தேடி வந்தவர்கள்
எவரும்
ஊரின் வளம் கண்டு
நலம் கண்டு
குலம் கொள்வர்…
‘வந்தாரை வாழ வைக்கும்
வ.களத்தூர்’-எனும்
முத்தான முது மொழிக்கு
இன்றளவும்
சத்தான சான்று பல!

கல்வி
கலாசாரம்
நாகரிகம்
நற்பன்பு
நல்லொழுக்கம் யாவிலும்
நாங்கள்
முதன்மை!
எமதூரே- எம்
மாவட்டத்தின் பெருமை!

வாழ்க்கையை கற்றுத் தரும்
வாழ்வியல் கல்லூரி
எமதூர்…
ஊரோ புகழ் உள்ளவரை!
புகழோ உலகம் உள்ளவரை!

இவேலை…
இறைவனுக்கு நன்றி கூறி
இன்புறுவோம்!

வசந்தவாசல்
அ.சலீம் பாஷா-துபாய்.

Vasantha Vaasal Saleem Basha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *