கவிதைகள் (All)

மழை

மழை; மழையதை வேண்டு.. (வித்யாசாகர்) கவிதை!

 

ழை; மழையோடு கலந்துக்கொண்டால்
இப்பிரபஞ்சத்தின் ரகசியசப்தம் கேட்கும்;

மழையை இரண்டுகைநீட்டி வாரி
மனதால் அணைத்துக் கொண்டால்
இப்பிரபஞ்சம் நமக்குள் அடைபட்டுக் கிடக்கும்;

மழை இப்பிரபஞ்சத்தின் உயிர்ச்சாறு
இவ்வுயிர்களின் வெப்பத்தில் கலந்து இப்பிரபஞ்ச வெளியை
உயிருக்குள் புகுத்தும் ஒரு தூதுவன்; மழை

மழையில் நனைந்ததுண்டா
நனையாதவர்கள் நனைந்துக் கொள்ளுங்கள்; மழை
வரும்போது அண்ணாந்து முத்தமிடுங்கள்..

நாமுண்ணும் ஒவ்வொரு பருக்கை சோற்றுக்ககத்தும்
மழையே உயிராக கரைந்துள்ளது; மழையில்லையேல்
சோறில்லை
மழையில்லையேல் வனமில்லை
வனமில்லையேல் வறண்டு வெடித்து வெடித்துப் போவோம்
மழைதான்; மழைதான் நமை மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கிறது

நாமெல்லாம் மழையின் குழந்தைகள்
மழை நம் தாய்க்கு ஈடு; பெற்றவளைப் பெற்றவளவள் மழை;

காய்ச்சல் மழையால் வருவதில்லை
மழைக்கு எதிராக நாம் பழகிவிட்டதால் மழை வலிக்கிறது

மழையால் குடிசைகள் ஒழுகுவதில்லை –
குடிசையின் ஈரத்திற்கு நம் மனஓட்டை காரணம்;

குடிசைகளை குடிசைகளாய் ஆக்கியவன் எவன்?
குடிசைகளை குடிசைகளென்றே பிரித்தவன் எவன்?
குடிசைகளை குடிசைகளாகவேயிருக்க சபித்தவன் எவன் ? அவன்
காரணம் மழைப் பெய்தலுக்கு நடுவே –
குடிசைக்குள் ஒழுகும் மழைக்கும்;

மனிதனின் மனக் கிழிசல்தான் ஆங்காங்கே
குடிசைகளிலும் உடுத்தும் ஆடைகளிலும் தெரிகிறதே யொழிய
மழைக்கு குடிசையும் சமம்; கோபுரமும் சமம்;

உண்மையில் மழை வலிக்காது; மழை வரம்
மழை வேண்டத் தக்க வரம்
வெடித்த மண்ணுக்குப் பூசவும்
வறண்ட நிலத்தைப் பூப்பிக்கவும்
பேசாது மரணித்துப் போகும் மரங்களை காற்றோடு குலாவி
கொஞ்சவைக்கவும் மழை வேண்டும்

தன்னலமற்று பாயும் நதிகள் மனிதனுக்குப் பாடமாகி
ஊரெல்லாம் நீரூரி
மக்களைக் காக்கும் சாமியாக நதி பாய
மழை வேண்டும்;

சுத்தம் செய்யாத தெருக்களை
அசுத்தம் அப்பிக் கிடக்கும் மனிதர்களை
மனமாகவும் வெளியாகவும் கலந்து
மனிதத்தை நிரப்பி மனத்தைக் கழுவவும் மழை வேண்டும்;

மழை; ஒரு பாடுபொருள்
கவிதைக்கு’ மழை பாடுபொருள்
கஞ்சிக்கு’ மழை பாடுபொருள்
கழுனியின் உயிர்சக்தி’ இப்பிரபஞ்சத்தின் வேள்வி’ மழை;

மழையை வேண்டுங்கள்
ஒரு விவசாயியைப் போல அண்ணாந்து கைதூக்கி
மழையம்மா வாடி என்று கையேந்துங்கள்;

மழைக்குக் கேட்கும்
மழை வரும்; மழை வரும்; மழை வரணும்!!
———————————————————————————————-
வித்யாசாகர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button