கவிதைகள் (All)

பெருமானே பெருந்தலைவர்

(முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ)

 

 

அல்ஹம்து லில்லாஹ் ! அகிலத்துப் புகழெல்லாம்

அன்பாலும் அருளாலும் ஈருலகை அரசாளும்

அல்லாஹு வல்லவனே ! உன்பாதம் காணிக்கை !

அருள்தா என்நல்லவனே அதுதான் என் கோரிக்கை !!

சொல்லாலும் செயலாலும் பேருலகைக் காப்பதற்கு,

சன்மார்க்க நெறிதந்த சாந்திநபி நாதருக்கு,

’ஸல்லல்லாஹு’ என்ற ஸலவாத்து மலர்தூவி

சங்கையினை சமர்ப்பித்து சபையிதிலே சேருகிறேன் !

 

அங்காச புரியினிலே, அழகுமலர் சோலையிலே

அருள்மணக்கும் நிலையினிலே வானொலியாம் ஆறினிலே

மங்காத புகழ்படைத்த மாநபியின் திருவரவை

மனமகிழ்ந்து பாடிடவே – கவிக்குயில்கள் வந்திடவே

சங்கை மிகுபுலவர் திரு அன்வர் தலைமையிலே

சாந்தமிகு தென்றலோடு சங்கை ஹாஜி உ.காவும்

அங்கமர்ந்த வேளையிலே நாச்சியார் நற்படைப்பில்

அழகுமிகு கவியரங்கம் ! அருமையுடன் இனி துவங்கும் !

 

ஒருலட்சம் அதனுடனே, இருபத்து நான்காயிரம்

உயர்வான நபிமார்கள் உலகினிலே அவதரித்தார் !

திருநபிகள் நாதருக்குப் பிறந்ததினம் நாமெடுக்க ,

தகுந்தபல காரணங்கள் தருகின்றேன் கேளுங்கள் !

இருபத்து நூற்றாண்டின் இணையற்ற பெருந்தலைவர்

எம்பெருமான் நபிகளன்றோ? இணையில்லா தியாகியன்றோ ?

அரும்பிறப்பால் நற்குணத்தால் அகிலமெலாம் கவர்ந்து நிற்கும்

அருமைமிகு திருநபியின் மகிமைகளைக் கூறுகிறேன் !

 

 

ஒன்றே கால் லட்சத்து நபிமார்கள் கொண்டுவந்த

உயர் வேதம் தவ்ராத்தும் இன்ஜீலும் ஜபூர் – மூன்றும்

குன்றாத புகழுடனே சரித்திரத்தில் நின்றாலும் –

கோமானே நீர்தந்த குர்ஆனே நிலைத்திருக்கும் !

நின்றாலும் குவலயத்தில் நீர்தந்த ஷரீஅத்தை

நாடாளும் மன்னருக்கும், நடமாடும் எளியவர்க்கும்

ஒன்றாக நீதி தரும் ! வளமான வாழ்வு தரும் !!

 

உலகத்தை ஆண்டுநின்ற உயர்குலத்து மன்னர்களின்

உள்வாழ்வும் வெளிவாழ்வும் ஒவ்வொன்றும் வேறுபடும் !

குலத்தினிலே உயர்குலத்துக் குறைஷியெனப் பிறந்தாலும்

கோமானே உம்வாழ்வில் இரண்டு பக்கம் என்றுமில்லை !

குலப்பெருமை கொண்டவர்கள்  கர்வத்தால் மடிந்திருப்பார் !

குணந்தவறித் திரிந்தவர்கள் கேவலத்தால் அழிந்திருப்பார் !

நிலவுக்கும் கலங்கமுண்டு ! நீருக்கும் ‘கலங்கள்’ உண்டு !

நிறைவான பொற்குணமாய் நீங்களன்றி யார்தானுண்டு?

 

பிறப்பென்னும் இறப்பென்னும் இறைவனிட்ட விதியுண்டு !

பிறப்பினிலே சிரிப்பதுவும், பிரிவினிலே அழுவதுவும்

பிறந்து விட்ட மனுகுலத்தின் பழக்கத்தில் இன்றுமுண்டு !

பெருமானார் பிறந்ததிலே பூமியெங்கும் மகிழ்வுண்டு !

இறந்தபின்பு நபியவரை எண்ணியென்னி வேதனையில்

இருந்திடுவோம் எனப்பெருமான் இதயத்தில் எண்ணினரோ?

இறந்தாலும் இவ்வுலகம் இன்பத்தால் நிலைத்திருக்க

இவ்வுலகில் பிறந்தநாளில் இறந்தபொருள் என்னவென்பேன்?

 

 

 

பெண்பெருமை பேசியவர் விதவையரை மணந்ததில்லை !

பெற்ற அன்னை வாழ்விழந்து விதவையராய் ஆனபோதும்

கண்ணியத்தைக் கொடுப்பதற்கு பிறந்தமகன் துணிந்ததில்லை !

கணவனுக்குப் பின், பெண்ணை வாழவைக்க யாருமில்லை !

கண்மூடித் தன்வாழ்வைக் கணவன் விட்டுப் போனபின்னே

கண்ணியமாய் வாழ்வமைத்து வாழுவதே பெருமையென,

மண்ணகத்தில் நாட்டிவைத்த மன்னவராம் மாநபியை

மதியுலகம் புகழ்கிறது ! மன்னர் வழி தொடர்கிறது !

 

கருப்புக்கும் வெள்ளைக்கும் கடுகளவும் உறவுமில்லை !

கருப்பினத்து மானிடரைக் காப்பதற்கு யாருமில்லை !

வெறுப்புடனே நிலைகுலைந்து வாழ்வுக்கரை ஓரத்திலே,

வேதனையால் மிருகத்தின் கீழாகக் கிடந்தவரைக்

கரும்பாக உறவுகொண்டு, கண்ணியமாய் பதவி தந்து,

ஹபஷிக்கும் குறைஷிக்கும் கல்யாண உறவு தந்து

அரும்பாடு பட்டயெங்கள் அண்ணலாரின் பெருமையினை

அகிலமெலாம் புகழ்கிறது ! அவர்வழியில் மகிழ்கிறது !

 

தமதாட்சி நிலைப்பதற்குத் துப்பாக்கி தூக்குவதும்

தன்னாட்சி மலர்வதற்கு பெருயுத்தம் நடத்துவதும்

திமிரான போக்குக்கு இவ்வுலகின் அடையாளம் !

திருநபியின் வாக்குக்கு இவையெல்லாம் பெருமாற்றம் !

சமதர்ம சமுதாயம் அமைப்பதற்கும் தளைப்பதற்கும்

சர்வாதி காரங்கள் சாய்வதற்கும் சாவதற்கும்

அமுதான நபிவாழ்வு அற்புதமாய் இருக்கையிலே,

அடுத்தடுத்துப் புதுத்திட்டம் போடுவதில் பொருளென்ன ?

 

அணுவாயிரம் தூக்கி அடுத்தவனை மிரட்டுவதும்

ஆகாயம் மேல்பறந்து உளவுகளை நடத்துவதும்

கணங்கணமாய் நிம்மதியை இழந்துவிட்டு இருப்பதுதான்

கண்ணியமா ? கவ்ரவமா ? வல்லரசு இலட்சனமா?

பணவாயு தம்மென்ன ? பதவியென்ன ? பெருமையென்ன ?

பண்புடனே பரிவுடனே உலகெல்லாம் வலம்வந்து

பணிவுடனே பெருமானார் பாதையிலே நாம் நடந்தால்

பாரெல்லாம் நம் சொந்தம் ! பாசமழை தினம்பொங்கும் !

 

ஒருமொழிக்கும் மறுமொழிக்கும் ஓயாமல் ஒரு சண்டை !

இருமண்ணை ஒரு மண்ணாய் இணைப்பதிலே மறு சண்டை !

கருநிறமும் செந்நிறமும் காலமெல்லாம் நிறச்சண்டை !

கடல்சேரும் நீருக்கும் நதிகளுக்கும் நிதம் சண்டை !

இருபதுக்கும் மேலான நூற்றாண்டு கழிந்தாலும் –

இச்சண்டை எங்கெங்கும் நாடெங்கும் நடப்பது ஏன் ?

அருமை நபி நாதர்வழி நடப்பதற்கு நாமிசைந்தால் …

அனைத்துலகச் சண்டையெலாம் அக்கணமே நின்றுவிடும் !

 

பெரும் ஐ.நா சபைகளினால் அடங்காத காரியத்தை

பேரிறைவன் திருத்தூதர் அன்றைக்கே முடித்து வைத்தார் !

பெருமானார் சபையினிலே பேசாத செய்தியில்லை !

பிரச்சனைக்கு வந்ததெல்லாம் முடிவின்றிப் போனதில்லை !

பெருமையுடன் பாருலகம் பவனிவர வேண்டுமென்றால்

பெருமானார் பணிவுடனே வாழ்ந்தவழி வந்தால் போதும் !

பெருமானே பாருலகம் முழுமைக்கும் வழிகாட்டி !

பெருமையுடன் முடிக்கின்றேன் ; அவர்வாழ்வை நிலைநாட்டி !

 

 

( ஜுன் 2000 ல் மலேசிய வானொலி 6 ல் மவ்லிது ரசூல் சிறப்புக் கவியரங்கில் வழங்கிய கவிதை )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button