கட்டுரைகள்

அறிவியல் அதிசயங்கள் : செயற்கை மேகம்

( K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil., )

செயற்கை மேகம்

கொதிக்கும் கோடைகாலம் வந்து விட்டது. சாலையோர தர்பூசணி பழக்கடைகளிலும், பழமுதிர் சோலைகளிலும் கூட்டம் அலைமோதத் துவங்கி விட்டது. கையில் குடையுடனும், தலையில் துண்டைக் கட்டிக் கொண்டும் “உஸ்! அப்பாடா என்ன வெயில்!” என்று புலம்பும் மக்கள் கூட்டம் ஒருபுறம் “மழை பெய்யாதா?” என்ற ஏக்கத்தோடு வானை ஏறிட்டு நோக்கி புலம்பும் கூட்டம் மறுபுறம். இப்படி கோடைவெயில் கடுமையாக அடித்தாலும், இதற்கான மாற்று வழியை நாம் சிந்திப்பதில்லை. கட்டார் விஞ்ஞானிகளின் சிந்தனை புதிய கண்டுபிடிப்புக்கு வலிகோலியுள்ளது.

உலக கால்பந்து சம்மேலனமான ஃபிஃபா எதிர்வரும் 2022 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை வளைகுடா நாடான கட்டாரில் நடத்துவதென முடிவு செய்தது. ஃபிஃபாவின் இந்த முடிவிற்கு கால்பந்து விளையாட்டு விமர்சகர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கட்டார் நாட்டில் நிலவும் கடும் பாலைவன வெப்பம் வீரர்களின் விளையாட்டு திறனைப் பாதிக்கும். எனவே அங்கு போட்டிகளை நடத்தக் கூடாது என வல்லுநர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

இந்த விமர்சனங்கள் ஒருபுறமிருக்க கட்டார் பல்கலைக் கழக விஞ்ஞானிகளின் சிந்தனையோ வேறுமாதிரியாக இருந்தது. ஆம் அவர்கள் செயற்கை மேகம் ஒன்றைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கி விட்டனர். உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் போது, விளையாட்டு மைதானத்தின் மேலே நிழல் தரும் விதத்தில் இந்த செயற்கை மேகங்கள் மிதக்க விடப்பட இருக்கின்றன. இதனால் விளையாட்டு வீரர்கள் அனல் போல் தகிக்கும் பாலைவன வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள இயலும்.

இதுபோன்ற ஒரு செயற்கை மேகத்தின் செயல்படும் மாதிரியைத் தயார் செய்ய இதுவரை ஐந்து லட்சம் டாலர் வரை கட்டார் அரசு செலவிட்டுள்ளதாக கட்டார் பல்கலைக்கழக இயந்திர தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் சாத் அப்துல் கனி தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆராய்ச்சியில் கட்டார் அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா நிறுவனத்தாரும் இணைந்து செயலாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

லைட் கார்பன் மெட்டீரியல் எனும் பொருளால் இந்த செயற்கை மேகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இம்மேகம் ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்டுள்ளது. மேலும் சூரிய மின்சக்தியினால் இம்மேகம் இயக்கப்படுகிறது.

( ஏப்ரல் 8-14, 2011, முகவை முரசு வார இதழிலிருந்து )

கட்டுரையாளர் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button