துபாயில் கவியரசு கண்ணதாசன் விழா
துபாய் : துபாயில் 06.07.2012 வெள்ளிக்கிழமை காலை 10.00மணிக்கு (சிவ்ஸ்டார் பவன், கராமாவில் – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்) சார்பில்கவியரசு கண்ணதாசன் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் – சாந்திநிலையத்தில் இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசனின் இறைவன் வருவான்.. அவன் என்றும் நல்வழி தருவான் என்கிற பாடலே இறைவணக்கப் பாடலாய் செல்வி ஆனிஷாவால் பாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களையும் சிறப்பு விருந்தினர்களையும் தனக்கே உரித்தான பாணியில் கவிஞர் கீழைராஸா வரவேற்றார்.
வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் திரு.லெ. கோவிந்தராசு அவர்கள் தலைமையுரை ஆற்றினார். கவிஞரின் பேரில் காவிரிமைந்தன் கொண்டுள்ள பற்றும் அவர் கண்டுவரும் கனவும் விரைவில் நனவாகும் என்கிற நம்பிக்கையை மன்றத்தில் பதிவுசெய்தார். நகல்களாய் உருப்பெற்றுள்ள கண்ணதாசன் சிறப்பு மலரை விரைவில் அச்சிலே கொண்டுவர வேண்டுமென்றும் அதற்கான உதவிகளைத் தான் செய்வேன் என்றும் உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராய் பங்கேற்ற ETA PPD பிரிவின் மூத்த செயல் இயக்குனர் அன்வர் பாஷா அவர்கள் கண்ணதாசன் பெருமைகளை மன்றத்தில் மொழிந்தார். கலைஞர் கருணாநிதி பாடிய இரங்கற்பாவின் வரிகளை குறிப்பிட்டு மன்றத்தில் தமிழ்மணம் கமழச் செய்தார். மற்றுமொரு சிறப்பு அழைப்பாளர் திரு. அகமது முகைதீன் (பொது மேலாளர் – அஸ்கான்) கண்ணதாசனின் பாடல்வரிகளில் உள்ள இனிமையை, எளிமையை எடுத்துரைத்து .. மயக்கமா கலக்கமா பாடலை பாடிக்காட்டி அரங்கத்தின் கைத்தட்டல்களைப் பெற்றார். மார்வாட் நிதி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளரும் துபாய் – நகரத்தார் சங்கத்தின் தலைவருமான திரு. ஏ.என். சொக்கலிங்கம் தன் உரையில் தாய் மனம் போல மகிழ்கிறேன். எங்கள் செட்டிநாட்டு கவிஞனின் புகழை எடுத்துச்சொல்ல.. இதுபோன்ற விழாக்கள் நடப்பது கண்டு பெரிதும் மகிழ்வதாகவும்.. தாய்வீட்டுச் சீதனம் போல் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்திட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஷார்ஜாவில் இருந்து வந்திருந்த நகரத்தார் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.வள்ளியப்பன்.. கண்ணதாசனுக்கு விழா எடுத்திருக்கும் அனைவரையும் மனமாரா பாராட்டி மகிழ்வதாக தெரிவித்தார். தொழிலாளர் நலனிலேயே தன் வாழ்க்கையின் பெரும்பகுதி செலவிட்டு பணியேற்றுள்ள திரு.ஜஹாங்கீர் அவர்களுக்கும் விழாவில் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. கவிஞர் சசிகுமார் அவர்கள் கண்ணதாசனுக்கு அமீரகத்தில் சிறப்பானதொரு விழா எடுத்த காவிரிமைந்தனுக்கு பொன்னாடை அணிவித்தார். சென்னை வழக்கறிஞர் வி.நந்தகுமார் அவர்கள் சார்பில் கவிஞர் காவிரிமைந்தன் அவர்களுக்கு திரு.அன்வர் பாஷா அவர்களது கரங்களால் ஏலக்காய் மாலை அணிவிக்கப்பட்டது.
கவியரசு கண்ணதாசன் சிறப்பு மலரின் முதல் இதழை திரு.ஏ.என்.சொக்கலிங்கம் அவர்கள் வெளியிட திரு.கே.வி.ராமச்சந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். சிறப்புமலரைப் பற்றிய அறிமுகத்தை மலரின் பதிப்பாசிரியர் திரு.ஜியாவுதீன் அவர்கள் செய்துவைத்தார்.
கவிஞர் குத்தாலம் அஷ்ரப் மற்றும் முத்துப்பேட்டை ஷர்புதீன் ஆகியோர் வாழ்த்துரையுடன் நகைச்சுவையும் வழங்கி மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள்.
விழாவில் கண்ணதாசன் என்னும் தலைப்பில் கவியரங்கம் – பம்மல் – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் நிறுவனர் – கவிஞர் காவிரிமைந்தன் தலைமையில் நடைபெற்றது. கவியரங்கில் பங்கேற்ற பெருமக்கள் – அத்தாவுல்லா, கந்தநாதன், சந்திரசேகர், ஜியாவுதீன், சிம்மபாரதி, கீழைராஸா, ஜெயாபழனி, ஆதிபழனி, குறிஞ்சிதாசன், சசிகுமார், இளையசாகுல், வடிவரசன், மீனாகுமாரி பத்மநாதன், நர்கீஸ், அபுமூமைனா, குத்புதீன் ஐபக்,
அகமது சுலைமான், ரவீந்திரன் (மசாபி), விருதை மு செய்யது ஹுசேன், திண்டுக்கல் ஜமால், அபு ஹுசேன், முதுவை ஹிதாயத் மற்றும் யமுனாலிங்கம் ஆகியோர் வெவ்வேறு கோணங்களில் கண்ணதாசன் சிறப்புகளை தங்கள் கவித்திறமையால் ஆராதிக்க.. அரங்கம் நிரம்பிய மக்கள் கூட்டம் அதையே ஆமோதிக்க.. அலைகடல் தாண்டி வந்தபோதும் அன்னைத்தமிழின் காதலர்கள் ஒன்றுகூடி மாபெரும் தமிழ்க்கவிஞனுக்கு புகழாரம் சூட்டிய பொன்னாள் இது என்று பெருமை கொண்டனர்.
கவிஞர் கந்தநாதன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிட கவிஞர் சிம்மபாரதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
மூன் தொலைக்காட்சி நிகழ்ச்சியை பதிவு செய்தனர். அடுத்தடுத்து கண்ணதாசன் விழாக்கள் அமீரகத்தில் நடக்கும் என்று கவிஞர் காவிரிமைந்தன் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை – கவிஞர் காவிரிமைந்தன், ஜியாவுதீன், சிம்மபாரதி, ஆதிபழனி, அத்தாவுல்லா, யமுனாலிங்கம், கந்தநாதன், குத்புதீன் ஐபக், சுப்பிரமணியன், திண்டுக்கல் ஜமால் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.