மலரும் நினைவுகள் : 1993 ஜுன் 18 :ஷுஐபு ஆலிம் எழுதிய நூல் வெளியீட்டு விழா

Vinkmag ad

suhoibalim

1993 ஜுன் 18 :ஷுஐபு ஆலிம் எழுதிய நூல் வெளியீட்டு விழா  : ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது

 

கீழக்கரை அப்ஸலுல் உலமா டாக்டர் அல்ஹாஜ் தைக்கா ஷுஐபு ஆலிம் ஆங்கிலத்தில் ஓர் ஆராய்ச்சி நூல் எழுதி இருக்கிறார்.

தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லிம்கள். அரபு, அரபுத் தமிழ், உர்தூ, பார்ஸி ஆகிய மொழிகளுக்கும், இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் இந்தியாவிலும், அதன் அண்டை நாடுகளிகும் செய்த அளப்பரிய சேவைகள் பற்றி சுமார் 28 ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி “சரந்தீவில் தமிழகத்தில் அரபு, அரபுத்தமிழ், பார்ஸி, உர்தூ மொழிகளின் வளர்ச்சி” என்ற நூலை உருவாக்கியுள்ளனர். இந்நூல் 880 பக்கங்கள் கொண்டது.

சென்ற 18.6.93 வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இந்நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஜனாதிபதி டாக்டர் சங்கர் தயாள் சர்மாவிடம் கீழக்கரை டாக்டர் சங்கர் தயாள் சர்மாவிடம் கீழக்கரை டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம் நூலின் முதல் பிரதியை வழங்கினார்.

இந்தியாவிற்கான இலங்கை தூதர் டாக்டர் நெவில் கனகரத்தினா இரண்டாவது பிரதியை பெற்றுக் கொண்டார்.

இந்தியக் குடியரசின் மனித வள மேம்பாடு மற்றும் கல்வி அமைச்சகத்தின் சிறப்பு அதிகாரியும், உர்தூ மொழி வளர்ச்சி வாரியத்தின் இயக்குனருமான டாக்டர் ஜனாபா பஹ்மீதா பேகம் இந்நிகழ்ச்சியில் அறிமுகவுரை ஆற்றினார்.

இதுபோன்ற ஓர் அரிய ஆராய்ச்சி நூல் தமிழ் கூறும் முஸ்லிம்களைப்பற்றி இது வரை யாராலும் வெளியிடப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி டாக்டர் சங்கர் தயாள் சர்மா தனது உரையில் இந்நூலில் உயர்ந்த தன்மையைத் தாம் உணர்ந்திருப்பதாகவும் இந்த ஆய்வு நூல் இந்தியாவின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் வாழும் லெப்பை முஸ்லிம்களின் கலாச்சாரப் பாரம்பரியம் பற்றி தாம் ஏற்கனவே அறிந்திருப்பதாகவும் அவர்கள் இந்நாட்டிற்குச் செய்த சேவைகளைப் பற்றி வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பியதாகவும் அக்பர் பாஷா எம்.பி போன்ற சில பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் தமது எண்ணத்தை எடுத்துரைத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஏற்புரை வழங்கிய நூலாசிரியர் டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததுடன், தமிழ்நாடு மற்றும் இலங்கையைச் சார்ந்த மாபெரும் ஞானிகளும், அறிஞர்களும் வள்ளல்களுமான மகான் சதக்கத்துல்லா அப்பா, வள்ளல் சீதக்காதி, லெப்பை நயினா மரைக்காயர், மாப்பிள்ளை லெப்பை ஆலிம், இலங்கை கஷாவத்தை ஆலிம் போன்றோர்களின் சேவைகளையும் குறிப்பிட்டார். தமிழக இலங்கை கடற்கரையோரம் வாழும் முஸ்லிம்களின் முன்னோர்கள் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்தார்கள் என்றும், இவர்கள் கீழை நாடு மற்றும் மேலை நாடுகளுடன் பண்டமாற்று வர்த்தகத்தை நடத்தி வந்தார்கள் என்றும் ஷுஐபு ஆலிம் சொன்னார்.

சமஸ்கிருதம் மற்றும் தமிழ் இலக்கியங்களில் நாகங்கள், மற்ற உயிரினங்களின் வடிவுக்குப் பதிலாக இலைகள், பூக்கள், வட்டங்கள் முதலிய வடிவங்களில் சித்ரகவிகள் அமைக்கும் முறை தமிழ் கூறும் முஸ்லிம்களால் புகுத்தப்பட்டது.

அதுபோலவே நிரோட்டகம், அஷ்ட பந்தனம், அந்தாதி, அறவே புள்ளி இல்லாத எழுத்துக்களால் அமைந்த கவிகள், புள்ளி உள்ள எழுத்துக்கள் மட்டுமே உள்ள பாடல்கள், விடுகதைகள், சிலேடைப்பாக்கள் அரபியில் அமைக்கப்பட்டன. அதே சமயத்தில் அவை அனைத்தும் ஆழ்ந்த ஆன்மீகக் கருத்துக்கள் கொண்டவைகளாக அமைந்துள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த லெப்பை நயினா மரைக்காயர் இலங்கைப் பகுதியில் உள்ள நாகதீவு என்ற ஒரு தீவை விலைக்கு வாங்கி நயினாத்தீவு என்று அதற்குப் பெயரிட்டு அங்கே ஒரு இந்துக்கோயிலும் ஒரு புத்த கோயிலும் ஒரு பள்ளிவாசலும் கட்டிக்கொடுத்தார்கள். அது இன்றளவும் தமிழர்களுக்கும், புத்தர்களுக்கும் யாத்திரைத் தலமாக இருந்து வருகின்றது. இது சர்வமத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

இதே போன்று இராமேஸ்வரக் கோவில் போர்ச்சுகீசியரால் சிதைக்கப்பட்டபோது, அதைப் புனருத்தாரணம் செய்ய இராமநாதபுரம் ராஜாவிற்கு வள்ளல் சீதக்காதி அவர்கள் பெரும்பணம் கடனுதவி செய்தார்கள். சீதக்காதியினர் சிலை சமீப காலம் வரை இராமேஸ்வரம் கோவிலில் இருந்து வந்ததை பலர் அறிவார்கள். இதுவும் மத செளஜன்யத்திற்கு தமிழ் கூறும் முஸ்லிம்கள் முன்மாதிரியாக இருந்தார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு என நூலாசிரியர் தமது ஏற்புரையில் மேலும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய உர்தூ மொழி வளர்ச்சி வாரியத்தின் இயக்குநர் டாக்டர் ஜனாபா பஹ்மீதா பேகம், மத்திய அரசு தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் டாக்டர் முஹம்மது ஜியாவுத்தீன், இலங்கை நாட்டுத்தூதர் டாக்டர் நெவில் கனகரத்னா, பிரபல சமூக ஊழியரும் தியாகியுமான பெங்களூர் பேராசிரியர் கலீல் அஹ்மது ஹுஸைனி, ஹஜ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா தர்காவின் பிரதம டிரஸ்டி காஜா இஸ்லாமுத்தீன் நிஜாமி, பாத்திமா ஸாம் டிரஸ்டின் முத்தவல்லியும் ஸஜ்ஜாதா நிஷீனுமாகிய ஹஜ்ரத் மவ்லானா ரஹ்மத் குத்பி, பிரபல உர்தூ கவிஞர்கள் மத்தீ அம் ரோஹி, ஹஜ்ரத் அப்ஸல்நிஜாமி, டெல்லி பல்கலைக்கழகத்தின்  அரபுத்துறைத்தலைவர் பேராசிரியர் என்.ஏ. பாரூக்கி, டெல்லி பல்கலைக்கழகத்தின் உர்தூ துறைத்தலைவர் இஜட். ஏ. சித்தீக், கீழக்கரை உஸ்வத்துன்ஹஸனா ஆங்கிலப்பள்ளி முன்னாள் நிர்வாகி ஏ.ஜி. மஹ்மூது மரைக்காயர், காயிதே மில்லத் அகாடமி தலைவர் பி.எஸ்.எம். செய்யது அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

ஞான மேதையின் ஞாலம் தழுவிய சேவைகள்

 

  புனிதமிகு அஃபழலுல் உலமா அல்ஹாஜ் டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம் பி.ஏ. (ஹானர்ஸ்) எம்.ஏ.பி.ஹெச்டி, எம்.எஃப்.ஏ. அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம் :

நீலத் திரைக்கடல் முத்தமிடும் கீழக்கரை மாநகரம் பல நூற்றாண்டுகளாய் அறிவு ஞானங்களால் முத்தமிடப்பட்ட அழகிய நகராய், இராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்குகிறது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற தமிழ் மூதுரையின் இலக்கியமாக இயங்கி, முத்து வைரங்களை முழு உலகின் நான்கு திசைகளிலும் வாணிபம் செய்து வளம் பெருக்கும் வள்ளல்கள் நிறைந்த இவ்வூரில் தவ ஞானிஷெய்குனா தைக்கா அஹ்மது அப்துல் காதிர் நாயகம் அவர்களின் அருமைப் புதல்வராக 29-7-1930ல் பிறந்த அல்லாமா தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்களிடம் பாரம்பரியச் சிறப்பும் பல்துறை அறிவு ஞானங்களும் அறிந்து விளங்கக் காணுகிறோம்.

இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபா ஹஜரத் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் இருபத்தெட்டாவது தலைமுறையில் வந்துள்ள இந்த மார்க்க மேதையின் முன்னோர்களில், ஒருவரான முஹம்மது கில்ஜி என்பார். ஆட்சியாளர்களிடம் ஏற்பட்ட கருத்து மாறுபாடு காரணமாக புனித மதீனாவிலிருந்து, எகிப்திலுள்ள கெய்ரோவுக்குச் சென்று பின் அங்கிருந்து ஹிஜ்ரி 262 / கி/பி. 875 ல் தமிழகம் வந்தடைந்து, தூத்துக்குடியை அடுத்த ஒரு சிற்றூரில் குடியேறினார். அப்போது பாண்டிய நாட்டை சோழ மன்னர் பெயர் தாங்கியவராக ஆண்டு வந்த ஜெய வீரராஜகாரு புவிச்சக்கரவர்த்தி என்ற பேரரசர் அவர்களுக்கு அடைக்கலம் தந்து ஆதரித்தார். அம்மன்னர் எழுதி அளித்த தாமிரப் பட்டயத்தில் முஹம்மது கில்ஜியோடு உடன் வந்தவர்களின் பெயர் விவரங்களும் முதல் நான்கு கலீஃபாக்களின் பாரம்பரியத்தில் வந்தவர்கள் பற்றியும் ஆண், பெண் குழந்தைகள் உள்பட அனைத்து குறிப்புகளும் அடங்கியுள்ளன.

இதே கில்ஜி பரம்பரையைச் சேர்ந்த வேறொரு கிளையினர் டில்லி சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி ஆண்டதை வரலாறுகள் விவரிக்கும்.

இவ்வாறு தமிழகம் வந்து, அரசரின் ஆதரவும் பெற்ற இந்தச் சிறப்புக்குரிய பெரியோர்களின் மத்தியில் பல ஆலிம் பெருமக்களும், ஹாபிள்களும் இருந்தனர். பெண்களிலும் கூட அத்தகையோர் இருந்தனர்.

அல்லாமா தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்களிடம் இளமைப் பருவத்திலிருந்தே ஒரு தலைவருக்குரிய விவேகமும், வீரமும் இயற்கையாகவே இருந்தது. இதுவே அவரை அவர் படித்த கலாசாலைகளில் தலை மாணாக்கராயும், மாணவர் தலைவராயும் விளங்கச் செய்தன. தாம் படித்த நாட்களில் ஒருநாள் கூட அவர் பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததில்லை என்பதைப் பள்ளியின் வருகைப் பதிவேடுகள் நிரூபிக்கும்.

அவருடைய கல்வியைத் தேடும் தாகம் அவருடைய ஞானம் கனிந்த தந்தையாரிடமிருந்து தொடங்கி ஜமாலீ யா பாக்கியத்துஸ்ஸாலிஹாத், வட புலத்திலிலுள்ள தேவ் பந்த், டில்லி ஜாமியா மில்லியா, மதீனா பல்கலைக்கழகம், கெய்ரோவின் அல் அஜ்ஹர்கலா சாலை என்றாவது விரிந்தன. தமிழ், அரபி, ஆங்கிலம், உருது ஆகிய நான்கு மொழிகளிலும் சிறந்த பேச்சாற்றலும், எழுத்துத் திறனும் கொண்டவராக மாத்திரமின்றி, பார்சி, மலையாளம், சிங்களம், சீன மொழியான கண்டனீஸ், கிழக்காப்பிரிக்க மொழியாம் ஸ்வாஹ்லி ஆகியவற்றிலும் ஓரளவு பயிற்சி பெற்றவராகப் பரிணமிப்பவர். தமது உலகளாவிய வர்த்தகம் கல்வியைத் தேடும் தாகம், நூலாய்வு, ஆராய்ச்சி அரங்குகளில் சொற்பொழிவு என்றவாறு உலக நாடுகள் பலவற்றுக்கும் பல முறை சென்று வந்துள்ள பண்பாளர்.

இவரது ஆய்வுக் கட்டுரைகள் ஜப்பான், ஹாங்காங், இலங்கை, முஹல்லதீவு, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளின் பத்திரிகைகளை அணி செய்துள்ளன. இவரது முதல் நூல் மிக இளமைப் பருவமான பதினாறாம் வயதில் ‘நித்திய கடன்’ என்னும் தலைப்பில் 1947-ல் அச்சிடப்பட்டு வந்தது மாத்திரமல்ல; இலங்கையிலும் தமிழகத்தின் பள்ளிக்கூடங்களிலும் பல ஆண்டுகள் பாடநூல்களில் ஒன்றாக விளங்கியது.

இவர்கள் முப்பதாண்டுகள் முயன்று ஆய்வு செய்து 18-6-93 ல் வெளியிட்ட “அரபி அரபுத்தமிழ், பார்சி, ஆகிய மொழிகளுக்கு தமிழ் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு” என்னும் தலைப்பிலான         880 க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஆங்கில நூல் உலகளாவிய பாராட்டினைப் பெற்றுத் தமிழக இஸ்லாமிய இலக்கியத்திற்கு ஒரு தனி கெளரவத்தை வழங்கியுள்ளது.

இந்நூலினையொட்டி இந்திய ஜனாதிபதி அவர்கள் ‘சிறந்த அரபிமொழி அறிஞர்’ என்ற தேசிய விருதை அல்லாமா தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்களுக்கு வழங்கி கெளரவித்தார். இத்தகைய விருதினைப் பெற்ற ஒரே ஒரு முஸ்லிம் தமிழறிஞர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நூலினைப் பாராட்டிப் போற்றியோர் பலராவர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்களாக தமிழக ஆளுநராக இருந்த மேதகு சென்னாரெட்டி, இலங்கை ஜனாதிபதி, முஹல்லதீவின் அதிபர், அரபுவளைகுடா நாட்டின் மன்னர்கள் ஆகியோரைச் சொல்லலாம்.

அமெரிக்க நாட்டின் கொலம்பிய பல்கலைக்கழகங்கள் தங்களது நூல் நிலையங்களுக்கு இவ்வாராய்ச்சிப் பெருநூலை பரிந்துரை செய்துள்ளன. பல நாடுகளின் தூதரகங்களாலும் இந்நூல் வாங்கப்பட்டுள்ளது. இந்நூலைனை இந்திய அரசினால் உருது மொழியிலும் மற்றும் அரபு நாட்டு அரசினால் அரபு மொழியிலும் மொழி பெயர்க்கப்படுவது பெருமைக்குரியதாகும்.

இம்மாபெரும் அறிஞரின் ஆன்மீக வழிவாறு அறிந்து மகிழத்தக்க ஒன்றாகும். 300க்கு மேற்பட்ட ஞானவான்களைத் தந்துள்ள பாரம்பரியத்தில் மாதிஹுர்ரசூல் ஷெய்கு சதக்கத்துல்லா அப்பா, இமாமுல் அரூஸ் மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் போன்ற உலகம் போற்றும் உத்தம ஞானிகளின் வழிவாற்றல் வந்துள்ள அல்லாமா அவர்கள் அருமைத் தந்தையாரிடமிருந்து கிலாஃபத்தைப் பெற்று அரூஸ்ஸியத்துல் காதிரிய்யா தரீகாவின் கலீஃபாவாக விளங்குகிறார்கள்.

இராக்கில் பாக்தாத் அடுத்த கர்கூக்கு என்னும் ஊரில் வாழும் காமில் வலி அல்லாமத்து அஷ்ஷைகு அப்துல்கரீம் அல் கஸ்னஸானீ அவர்களைத் தரிசித்து ஆன்ம ஞானத்துறையில் கிலாஃபத் பெற்ற அறவோர் ஆவார்.

உலகின் பல நாடுகளில் ஆயிரமாயிரம் சீடர்களில் ஞான குருவாக விளங்கும் இவர்கள் காதிரிய்யா தரீக்காவின் நாற்பதாவது சற்குரு ஆவார். இவரது சீடர்களில் முக்கிய மாணவர்களாக சூடான் நாட்டைச் சேர்ந்தவரும், பிரபல மார்க்க விற்பன்னரும் ஐக்கிய அரபு குடியரசின் மணி மகுடமாம் துபையின் அவ்காஃப் மற்றும் இஸ்லாமியத் துறை அமைப்பின் துணை இயக்குநராகப் பணிபுரிபவருமான ஷேக் இத்ரீஸ் அல் இத்ரீஸ் அவர்கள் துபை காவல் துறையின் பயிற்சிப்பள்ளி இயக்குநர் ஷேக் அஹ்மது சித்தீக் அர்ரம்லி அவர்கள், இந்தியாவிலும் இலங்கையிலும் பல அரபிக் கல்லூரிகளின் முதல்வராகவும், தாய்லாந்தில் இஸ்லாமியப் பணியாளராகவும், தமிழகத்திலும் இலங்கையிலும் கிப்லா அமைத்தல், தொழுகை நேரம் கணித்தல் போன்றவற்றில் மேதையாகவும் விளங்கிய ஷேக் முஹம்மது அவர்கள் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

 

அல்லாமா அவர்களின் முன்னோர்கள் மத நல்லிணக்கத்தையும், மனிதாபிமானத்தையும், நாட்டுப்பற்றையும், தேசிய உணர்வுகளையும் முன்னிறுத்திய செயல் திறனை நாடறியும். இவர்களது முன்னோர்களில் ஒருவரான சுல்தான் தகீயுத்தீன் குலசேகரப்பாண்டியனின் மருகராக ஆறாவது பாண்டியனாக மதுரையை ஆட்சி புரிந்தவர் என்பதை வரலாறு சொல்லுகிறது.

இவஎ நமது ஷைகுனா அவர்களின் முன்னோராவார். இவர் சேதுபதியின் மந்திரியாக இருந்து ஆற்றிய சேவைகள் பலப்பல. இவருக்குப் பின் பிரதம மந்திரியாக வந்த லெப்பை நைனா மரைக்காயர் அரபிக் கடலில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு நைனா தீவு என்று பெயரிட்டு அங்கு ஒரு மஸ்ஜிதும், ஒரு ஹிந்துக் கோவிலும், ஒரு புத்த விஹாரமும் கட்டினார்.

அவருக்கும் அவரது வாரிசுகளுக்கும் சேதுபதி மன்னர் தமது திருவாயால் “ஸ்ரீமத் ஹிரண்ய கர்பயாஜி ரவி குல முத்து விஜயரகுனாத மார மார்த்தாண்ட பெரிய தம்பி மரைக்காயர்” என்ற பட்டத்தை சூட்டி மகிழ்ந்தார்.

இப்பெரியாரின் வாரிசுகளே சேதுபதியின் சந்ததியினருக்கு காலாகாலம் முடி சூட்டும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நியமித்து அவர்களுக்கு “பட்டத்து மரைக்காயர்” என்ற சிறப்புப் பெயரையும் வழங்கினார்.

இந்த வாரிசுப்பரம்பரையினர் தான் புதிய அரசரைத் தேர்ந்தெடுத்து அவரை பிரகடனப்படுத்த வேண்டும் அப்போது தான் குடிமக்கள் அவரை அரசராக ஏற்றுக் கொள்வார்கள்.

‘செத்தும் கொடை கொடுத்தான் சீதக்காதி வள்ளல்’ எனப் போற்றப்படும் ஷைகு அப்துல் காதிர் வள்ளல் பல புலவர்களையும் ஏழை எளிய மக்களையும் ஆதரித்ததை தமிழகம் அறிந்ததே.

வறுமை வாய்ப்பட்ட எளியோர் மட்டுமே ஷைகு அப்துல் காதிர் அவர்களிடம் வந்தார்கள் என்று சொல்ல முடியாது.

அறிவென்னும் பெருஞ்செல்வம் பெற்ற ஆன்றோர்களும் வந்தனர். சிறிது நாடி வந்தவர் பெரிது பெற்றுச் சென்றனர். அவர்களின் நெஞ்சம் ஷைகு அப்துல் காதிரையே நினைத்துக் கொண்டிருந்தது.

அவர்களின் வாய் அந்தப் பெயரை உச்சரிக்கத் திணறியது. ஆகவே அவர்களின் நன்றி உள்ளம் புரட்சி செய்து தமது செந்தமிழ் நாவுகளால் சீதக்காதி என்று செல்லமாகச் சொல்லித் துதித்தது.

தமிழ் உள்ளம், தமிழனுடைய நன்றியுள்ளம் உள்ளளவும் மறையாய் பெருநாமம் கொண்ட வள்ளல் சீதக்காதியை அது நினைத்து வாழும்.

இம்மரபில் வந்தவரே நமது ஹளரத் ஷுஐபு ஆலிம் ஆவார்.

அல்லாமா தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்களும் தங்களது அருமைத் தந்தையாரைப் போன்றே தேசீய இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.

இத்தகு சிறப்புக்குரிய மேதையை, ஞானியை வடநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் ‘சையிதுல் முஸன்னபீன்’ (நூலாசிரியவர்களின் சிறந்தவர்) என்றும் ‘ரயீஸுல் முஹக்கிகீன்’ (ஆய்வாளர்களின் தலைவர்) எனவும் கெளரவப்பட்டங்களை அளித்துச் சிறப்புச் செய்திருப்பதில் வியப்பேதுமில்லை; இந்த மாபெரும் மேதை கல்வித்துறையில் பெரும் பங்காற்றி வருவதோடு, பல அறக்கட்டளைகளின் நிர்வாகக்குழுவில் அங்கம் வகித்தும், அனாதை நலக்கூடங்கள், கல்விக்கூடங்கள் அமைத்தும் அரிய சமுதாயப்பணி ஆற்றி வருகிறார். இவர்களது பணி மேலும் பல்லாண்டு சிறக்க நெஞ்சாரப் பிரார்த்திக்கிறோம்.

 

வரவேற்புக்குழுவினர்

சென்னை

 

 

 

கொள்கைக்காக தியாகம் செய்தோர் டாக்டர் ஷுஐபின் முன்னோர்

 

இஸ்லாமிய உலகில் அப்பாஸியாக் கலீபாக்களின் ஆட்சியில் ஹாருனர் ரஷீதின் காலத்திலே, அறிவு ஆய்வு மிகப் பிரசித்தம் பெற்றது. ஹாருனர் ரஷீது காலமானபிறகு அவன் மகன் மாமூன் கலீபாவாகப் பதவி ஏற்றார். பகுத்தறிவு ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு எதையும் ஆராய வேண்டும் என்ற கருத்தில் மாமூன் அளவு கடந்து ஆர்வம் காட்டினார். இதன் காரணமாக இறைவன் திருமறை பற்றிய ஒரு கருத்து வேற்றுமையை அவர் கிளப்பினார். அக்காலத்தில் வாழ்ந்த மார்க்க மேதைகளும் ஆதம் ஞானிகளும் மாமூனுடைய கருத்திற்கு மாறுபட்டு நின்றனர்.

இறை நம்பிக்கையின் அடிப்படையில் தான் இறைவனுடைய கலாமாகிய ( – உரையாகிய திருமறையை நோக்கவேண்டுமென்பது ஈமான் நிறைந்த மூமின்களின் உறுதி வாய்ந்த பதிலாக இருந்தது.

பகுத்தறிவே பிரதான அடிப்படையாக இருக்கவேண்டும் என்ற உள்ளத்தில் கலீபா மாமூனும் அவரைப் பின்பற்றுபவர்களும் நின்றனர். அகந்தை மிக்க ஆட்சியோ – தனது அடக்குமுறைகளால் மூமின்களுடைய உறுதியை மாற்றிவிட முடியும் என்று மனப்பால் குடித்தது. மாமூன் காலத்தோடு ஓயாத இந்த அறிவகந்தை இயக்கம், முஅதஸிலா இயக்கமாக வளர்ந்து, அவரையடுத்து ஆட்சிபுரிந்த முஅதஸிமுடைய வாரிசான, ஹாருனல் வாதிக் பில்லாவின் கலீபத்தில், கொடூரத்தாண்டவமாடியது. கலீபாவின் அறிவகந்தை இயக்கத்திற்கு உடன்படாத மூமின்களின் தலைவர்கள் பலர், சகிக்க முடியாத இன்னல்களுக்கு இலக்காயினர். நம்பிக்கையாளர்கள், “நாடு துறந்தாலும் துறப்போமே தவிர கேடு மிகுந்த முஅதஸிலாக்களின் கொள்கைக்குப் பணியமாட்டோம் !” என்று திடங்கொண்டு நாடு கடக்கலாயினர். திருமறை பற்றிய பிரச்சினையில் திடமான கருத்துக்கொண்டு – தேசம் விட்டு தேசம் செல்ல நேர்ந்த சீலர்களில் சிலர், ஹஸரத் அபூபக்கர் ஸித்தீக் அவர்களின் வழித்தோன்றல்களில் ஒரு குழுவினர் மதீனாவிலிருந்து எகிப்துக்குக் குடிபெயர்ந்தனர். பின்னர் அவர்கள் ஷெய்கு முஹம்மது கில்ஜி என்பாரின் தலைமையில், ஹிஜ்ரி 262 இல் எகிப்து நாட்டின் முகத்தம் என்ற மலைப்பகுதிக் கிராமத்திலிருந்து புறப்பட்டுச் செந்தமிழ் நாட்டின் பைந்தமிழ் துறை ஒன்றை வந்தடைந்தனர். அந்த இடமே இன்று காயற்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது.

கொள்கைப் பிடிப்பிற்காக, கொடுங் கோலாட்சியை வெறுத்துப் பொன்னாடாம் தன் நாடு விட்டு இத்தென்னாடு வந்த அந்தச் செம்மல்களை வாழ்த்தி வரவேற்று, வாழ்விடமளித்து, அவர்கள் வாழும் அரும்பதிகளின் உரிமைக்காக – இன்றைக்குச் சுமார் 1150 ஆண்டுகட்கு முன், மதுரைப் பதியிலிருந்து பாண்டிய நாட்டை அரசாட்சி செய்த சோழ வேந்தராகிய, ஜெயவீர ராஜுகாருபுவிச் சக்ரவர்த்தியவர்கள், தாமிரப்பட்டயம் வழங்கியுள்ளார்கள். அந்தப் பட்டயம், சகாப்தம் 798 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதிக்கு முந்திய ஒரு வெள்ளிக்கிழமையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இப்பட்டயத்தில் வந்திறங்கிய நபர்களின் கோத்திரம், எண்ணிக்கை, அடிமைகளின் விபரங்கள் போன்ற பல தகவல்கள் அடங்கியிருக்கின்றன.

முஹம்மது கில்ஜி அவர்களின் வம்சாவளியில் வந்தவர்களே தைக்க ஷுஐபு ஆலிம் என்ற நமது ஷெய்கு நாயகம் அவர்களின் பல முன்னோர்கள் ஈமான் எனும் வலுவும் வளமும் மிக்க நம்பிக்கை அடிப்படையில் தான், திருமறையை ஆய்ந்தறிய வேண்டுமேயன்றி புதுமைப் போக்குகளால் அடிக்கடி மாற்றமடையக் கூடிய உறுதியற்ற – வியர்த்தனமான விவாத பிரதிவாதங்கள் அடிப்படையில் ஆராய்ந்தறிய முயலக்கூடாது என்று உறுதியாக நின்றார்கள். இந்த அடிப்படையில் பலமிக்க அப்பாஸியாக்கலீபாக்களுக்கும் பணிய மறுத்திறுக்கிறார்கள் என்பதை உணரும்போது நம்பிக்கை அடிப்படையில் நாயனது நல்லருள் பெற வேண்டும் என்ற நாட்டமுள்ள மெய்யன்பர்களுக்கு இவர்களே மேலான குரு நாயகமாகத் திகழ்வதில் ஆச்சர்யமில்லை.

சரித்திரப் பின்னணி கொண்ட நமது சற்குரு நாயகம் அவர்கள், தமது முரீதீன்கள் எனும் சிஷ்யகோடிகளின் உள்ளத்திலே சலனமற்ற ஈமானை வளர்த்து இடைவிடாத இபாதத்தில் செலுத்தி ஈடேற்றத்திற்கு வழிகாட்டுகிறார்கள். இந்தப் பேருதவிக்காக, அவர்களின் அருள் நிழலில் தங்கியுள்ள அன்பர்கள், இச்சிறப்பு மலரை அவர்களுக்கு நன்றிக் கடனாகச் செலுத்துகிறோம்.

 

 

தந்தையாரின் விடுதலை வேட்கை

 

அறிஞர் ஷுஐபு அவர்களுடைய மதிப்பிற்குரிய தந்தையாராகிய ஷெய்கு நாயகம் ஆத்மீகத்தின் உச்சியிலே நின்ற போதிலும் கால ஓட்டத்திலே ஏற்படும் அரசியல் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களாக வாழவில்லை. அரசியலிலும் ஒரு ஆத்ம் ஞானி அறப்பணியாற்ற வேண்டியது கடமையாகும் என்ற கருத்துள்ளவர்கள் நமது சற்குரு நாயகம் அவர்கள் நாட்டுவிடுதலைக்கான சுதந்திர இயக்கத்தில் தீவிர பங்கெடுத்த பெருமை இவர்களுக்குண்டு.

அன்னியப் பொருள் பகிஷ்காரம் என்ற தேசிய இயக்கத்தில் முழு மூச்சாக ஈடுபட்டு செல்வத்தில் பெரும் பகுதியைச் செலவிட்டு தென்னகத்தில் பல பகுதிகளிலும் கதர்க்கடைகளைத் திறந்தார்கள். முஸ்லிம் ஆடவர்களும் பெண்டிரும் கதராடையே கட்டும் உறுதி கொள்ளச் செய்தார்கள். பல பகுதிகளில் கதராடை வாங்க சக்தியற்ற ஏழைகளுக்கு இலவசமாகவே கதராடை வழங்கும்படி தமது ஸ்தாபனங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதனால் ஏற்பட்ட பொருள் நஷ்டத்தையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள்.

அவர்கள் வீட்டில் கைராட்டினங்கள் பழையன பல இன்னும் இருக்கின்றன.

மதுவிலக்குப் போராட்டத்தில் கலந்து, மதுக்கடைகள் முன் மறியல் ஏற்பாடுகளைச் செய்தும் மறியல் செய்யும் தொண்டர்களின் குடும்பப் பராமரிப்புக்கு வேண்டிய பொருள் உதவிகள் செய்தும் சிறந்த சேவை செய்தார்கள்.

வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து சிறை சென்ற பல தியாகிகளுக்கு நெடுங்காலமாக பேருதவிகள் பல செய்துள்ளார்கள்.

வெள்ளை அதிகார வர்க்கத்தின் குள்ளநரிச் செயல்

இராமநாதபுரம் பகுதியில் சுதந்தரக் கிளர்ச்சி என்ற கனல், இந்த ஆத்ம ஜோதியிடமிருந்தே உண்டாகிறது என்பதையறிந்த வெள்ளை ஏகாதிபத்யம், குள்ளநரி உள்ளத்தோடு சிந்தனை செய்து அன்று இருந்த அதிகார வர்க்கமும் அதற்கு ஆக்கம் தந்தது. இராமநாதபுரம் பகுதியில் இந்து – முஸ்லிம் வகுப்புமாச்சர்யத்தை இந்த ஆதம்ஜோதி கிளப்பி விடுவதாக பொய்வழக்கு புனைய முனைந்தது அதிகார வர்க்கம். தேசிய இயக்கத்தின் உச்சக்கட்டமான அச்சமயத்தில், தென்னகத்தின் தலைசிறந்த அரசியல் தலைவர்களான டாக்டர் வரதராஜலுநாயுடு, டாக்டர் பி. சுப்பராயன், திரு. வி. கல்யாணசுந்தரனார், மதுரை ஏ. வைத்தியனாத அய்யர், நவாப் ஸி அப்துல் ஹக்கீம் போன்ற மேதைகள் அம் முயற்சியை முறியடித்து நமது ஷெய்கு நாயகம் அவர்கள், இந்து, முஸ்லிம் கிருஸ்துவர் என்ற சகலவகுப்பாரும் மதிக்கும் தலைவரும் சற்குருவுமாய் இருக்கிறார்கள் என்பதை நிலை நிறுத்தினார்கள்.

இவர்களின் பொதுநல சேவையால் சில சமயங்களில் கடுமையான பொருளாதாரப் பிரச்சனை இவர்கள் எதிர்நோக்குவதுண்டு. அந்த சமயங்களில் தமது முழுநேர உழைப்பும், அரசியல் சமூக ஆத்ம சேவைகளிக்குத் தேவைப்படுகிறது என்று ஷெய்கு நாயகம் அவர்கள் கருதுவார்கள். இதனால் தமது குடும்ப நிலைபற்றிச் சிறிதும் கவலைப்படாமல் பொதுப்பணியிலேயே கருத்தாய் இருந்து விடுவார்கள்.

பெருந்தலைவர்கள் தொடர்பு

கிலாபத்து இயக்க காலத்தில் தென்னகத்திலே சிறப்புற முன்னின்ற தலைவர்களில் நமது ஷெய்கு நாயகம் அவர்களும் ஒருவர் என்பதை நாடே நன்கறியும். அகில இந்திய முஸ்லிம்களின் தலைவர்களாக விளங்கிய மெளலானா முஹம்மது அலீ, மெளலானா ஷெளகத்தலீ, டாக்டர் அன்ஸாரி, ஹக்கீம் அஜ்மல்கான், செளக்கார் ஜமால் முஹம்மது சாஹிப், நவாப் ஸி, அப்துல் ஹக்கீம், ஸையது முர்த்துஸா ஹஸரத் போன்ற தலைவர்களிடமெல்லாம் நமது ஷெய்கு நாயகம் அவர்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்கள்.

ஒரு ஆத்மீக நெறித்தலைவர், அரசியல் தலைவராகவும், கல்வித்தலைவராகவும் சமூகத் தலைவராகவும் சீர்திருத்தச் செம்மலாகவும் விளங்கிச் சேவையில் சிறந்து நின்றார்கள் என்றால் அவர்களை, சேவையின் சிகரம் என்றுதானே கூற வேண்டும் !

 

இமயத்தின் உச்சியில் புகழ் பதித்த விரல்கள்

 

குடத்துள் விளக்காய்க் கிடந்திருந்த

கீழக்கரையின் பெயரைக்

குன்றினில் ஏற்றி வைத்த விரல்கள் !

உயிருள்ள பேனாவுக்குள் புனித மையூற்றிப்

புகழ்க் குழந்தையைப் பிரசவித்த விரல்கள் !

தென்கோடிக் கரையில் இறைமுத்துக்களைத்

தெளித்துவைத்து, ஆன்மீகச் சிப்பிகளை

அள்ளி எடுத்துப்

பொன்னலங்காரம் செய்திருக்கும் விரல்கள் !

ஆலிம்களின் இல்முகள்

ஒரு வலையத்துள் சுழலுகையில்

ஆய்வுழுது அறிவுப் பயிர்களை

அறுவடை செய்திருக்கும் விரல்கள் !

முனைந்து நின்ற ஆண்டுகளில்

முகிழ்த்து வந்த ஆய்வு மலர்கள்

‘முனைவர்’ எனும் மணம் தரவே முயன்று வந்த விரல்கள் !

இந்த விரல்களால்

எமதூரின் புகழ் இன்று இமயத்தின் உச்சியில் !

இனி,

இவ்விரல்கள்

காகித நிலத்தில் உழும்

‘முனைவர் எனும் கனி விளையும் !

அல்ஹாஜ் சம்சுதீன்

இயக்குநர், ‘மணிச்சுடர்’ நாளிதழ்

 

 

சில மணிநேரச் சந்திப்பு

பலவருடங்களின் அனுபவம்

-S.M. ஹிதாயத்துல்லா

துணைத்தலைவர் : தேசிய ஒருமைப்பாட்டு இயக்கம்

 

டாக்டர் ஷைகு தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்களின் ஆராய்ச்சிப் பெருநூலை சமீபத்தில் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடத்தது.

அந்நூலை அவர்கள் உருவாக்குவதற்காக பல்லாண்டு காலம் முயற்சி எடுத்திருக்க வேண்டும். இந்த நூலுக்குத் தேவையான கருத்துக்களையும், ஆதாரங்களையும் பெறுவதற்காக உலகின் பல நாடுகளுக்குப் பயணமாகி இருக்கலாம்.

இன்றைய தமிழக முஸ்லிம் அறிஞர்களில் முதன்மை மாணவர்களாகவும், ஆய்வு நடத்திய வல்லுனராகவும் திகழ்கிறார்கள்.

அவர்களின் ஒவ்வொரு ஆய்வும், திறனும் திருக்குர்ஆன், திரு நபி ஹதீதுகள், கலீஃபாக்கள், இமாம்கள், இறைநேச செல்வர்கள், முபஸ்ஸிரீன்கள் ஆகியோர் கூறிய அடிப்படை ஆதாரங்களை தேடுவதிலேயே சிறந்து விளங்குகிறது.

அல்லாமா அவர்களின் முன்னோர்கள் ஞானிகளாகவும், மார்க்க விற்பன்னர்களாகவும், ஆழ்ந்த இறை நம்பிக்கை உள்ளவர்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள்.

இவர்களைப் பெற்றெடுத்த தந்தையார், “ஷைகு நாயகம்” எனப்புகழ் பெற்ற அம்மேதை சுதந்திரப் போராட்ட வீரராக வாழ்ந்திருக்கிறார்கள்.

மகான் அவர்களின் பேச்சும், செயலும் ஒரு அப்பழுக்கற்ற தேசியவாதியாக வாழ்ந்தது மட்டுமல்ல ! ஆடை அணிவதிலும் தேசப்பிதா காந்திஜி அவர்கள் நாட்டுக்கு அறிமுகப்படுத்திய கதராடையையே விரும்பி அணிந்துள்ளார்கள் என்பதை அறிந்து அவர்களின் தியாக வாழ்வை உணர முடிகிறது.

அவர்கள் தம் அருந்தவப்புதல்வரான அல்லாமா தைக்கா ஷுஐபு ஆலிம் தந்தையைப் போன்றே தேசிய உணர்வுமிக்க, மதச்சார்பற்ற ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பரந்தவுள்ளம் படைத்தவராக இருக்கிறார்கள்.

அல்லாமா அவர்களைக் கண்டு பல மணி நேரம் அமர்ந்து அளவளாவும் பாக்கியம் பெற்றேன். அவர்களிடம் கருத்துப் பரிமாற்றம் செய்யும் போது சர்வகலா களஞ்சியமாக அறிவுப் பெட்டகமாக இருப்பதை அறிந்தேன்.

 

சில மணி நேரம் உரையாடல் பலவருடங்கள் பன்னூறு நூட்கள் படித்து முடித்த அனுபவத்தை அவர்களிடம் எனக்கு கிடைத்தது (அல்ஹம்துலில்லாஹ்)

உலகின் பிரதான மொழிகளிலும் மதங்களிலும் அவர்களுக்குள்ள ஆழ்ந்த ஞானத்தை இறைவனின் அருள் கொண்டு கிடைத்திருக்கிறது. போற்றுதலுக்குரிய பண்பானராகவும், எதனையும் மறக்காமல் தாம் கற்ற நூற்களின் பக்கங்களைக் கூட மறக்காமல் பேச்சினூடே மேற்கொள் காட்டும் போது அவர்களின் அறிவின் ஆற்றலின் முதிர்ச்சியைக் கண்டு வியந்தேன்.

இலைமறை காயாக வாழும் தன்னடக்கம் மிகுந்த பெரியார் அவர்களை இவ்வளவு காலம் நெருங்கிப் பழகாமல்; அவர்கள்தம் ஞான போதனைகளையும் பெறாமல் காலம் கடந்து விட்டதே என கைசேதப்பட்டேன். சென்ற மாதம்கூட மத்திய அமைச்சகத்தின் சார்பில் வெளியாகும் திட்டம் (யோஜனா) என்ற இதழின் இவர்கள் விருது பெற்ற செய்தியை மிக முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்துள்ளதைப் படித்தேன்.

நமது நாட்டின் மூத்த மகனாம் மக்கள் அதிபதியுமான மேன்மைக்குரிய சங்கர் தயாள் சர்மா அவர்கள் முதல் பன்னாட்டு அதிபர்களும், அறிஞர்களும், சமுதாயத் தலைவர்களும் ஒருங்கே நின்று போற்றிப் பாராட்டும் பேரறிஞர் அவர்களுக்கு எமது அமைப்பின் சார்பில் ஒரு பாராட்டுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டேன்.

அவ்விழாவில் அறிஞர் பெருந்தகைகள், அமைச்சர் பெருமக்கள், தேசியத்தலைவர்கள் ஆகியோரை அழைத்துச் சிறப்பிக்க வேண்டும் என ஆவல் கொண்டுள்ளேன்.

அந்நந்நாளை இறைவன் எனக்கு தந்தருளட்டும்.

 

 

News

Read Previous

நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ் !

Read Next

காயிதெ மில்லத் (ரஹ்) – தியாகத்தின் திருவுருவம்.!

Leave a Reply

Your email address will not be published.