பாஸ்போர்ட் வாங்கலாம் வாங்க!

Vinkmag ad
அவள் விகடன்Dec,1st 2015
நிகழ்வுகள் – அறிவிப்புகள்
ஒரு டஜன் யோசனைகள்!
பாஸ்போர்ட் வாங்கலாம் வாங்க!

வாழ்க்கையின் பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்களை அதிக சிரமமின்றி கடக்க உதவும் `ஒரு டஜன் யோசனைகள்’ பகுதியில், இந்தமுறை பாஸ்போர்ட் வாங்குவதற்கான வழிமுறைகள்! விண்ணப்பம், கட்டணம், புதுப்பித்தல், காத்திருப்பு நேரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இதோ…

விண்ணப்பம்

புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பிப் பவர்கள் http://www.passportindia.gov.in என்ற ஆன்லைன் முகவரி மூலமாகவே விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அதை உறுதிசெய்யும் விதமாக உங்கள் முகவரிக்கு அருகில் உள்ள பாஸ்போர்ட் இ-சேவை மையத்தின் முகவரியும், உங்களுக்கென ஒதுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தேதி, நேரமும் உங்களுக்கு பதிலாக கிடைக்கும். பிறகு, நீங்கள் வாங்கும் பாஸ்போர்ட்டுக்கு உரிய கட்டணத்தை இணையதளம் மூலமாகவோ அல்லது எஸ்பிஐ (SBI) வங்கி சலான் மூலமாகவோ செலுத்தி, உரிய நேரம் மற்றும் தேதியில் இ-சேவை மையத்துக்குச் செல்லவும்.

இணைக்க வேண்டியவை!

பிறப்புச் சான்றிதழ் (ஜனவரி 26, 1989-க்குப் பிறகு பிறந்தவர்கள், வருவாய்த்துறை அல்லது பதிவுத்துறை வழங்கிய பிறப்புச் சான்றிதழ்களை மட்டுமே ஆதாரமாகக் காட்ட முடியும்), இருப்பிடச் சான்றிதழ், கல்வித்தகுதிக்கான சான்றிதழ், பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் செலுத்திய ரசீது. மேற்கண்ட ஆவணங்களின் நகல்களை விண்ணப்பத்தாரர் சுயகையொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும். இந்த நகல்களின் அசல் ஆவணங்களை, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்தன்று கண்டிப்பாகக் கொண்டுவர வேண்டும்.

வெளியூரிலும் விண்ணப்பிக்கலாம்

வெளியூரில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அப்பகுதியிலேயேகூட பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க லாம். அவர்கள் தங்கிப் படிக்கும் இடத்தின் முகவரியை ‘தற்போதைய முகவரி’யாக அளித்து, அதற்கான ஆதாரத்தை அந்தக் கல்வி நிறுவன முதல்வரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

காத்திருப்பு நேரம்

பொதுவாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து விண்ணப்பம் காவல்துறைக்கு அனுப்பப்படும். நீங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பகுதியில்தான் வசிக்கிறீர்களா, ஏதேனும் குற்ற வழக்குகள் உங்கள் பெயரில் பதிவாகியுள்ளனவா என உங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து (5 முதல் 10 நாட்களில்) விசாரித்து, நீங்கள் குற்றமற்றவர் என காவல்துறை அறிக்கை பெற்ற பிறகே, பாஸ்போர்ட் வழங்கப்படும். எனவே, நார்மல் பாஸ்போர்ட் வாங்க குறைந்தது 25 நாட்கள் ஆகும்.

‘நான் உடனே வெளிநாடு செல்ல வேண்டும்’ என்பவர்கள் தட்கல் முறையில் 3 முதல் 5 நாட்களில் பாஸ்போர்ட் பெறமுடியும். ஆனால், காவல் துறையினரின் சரிபார்ப்புக்கு முன்னரே பாஸ்போர்ட்டை உங்கள் கையில் கொடுப்பதால் மூன்று வகையான இருப்பிடச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணமும் கொஞ்சம் அதிகம். போலீஸ் விசாரணைக்கு முன்னரே பாஸ்போர்ட்டை வழங்கினாலும், விசாரணையில் உங்கள் மீது வழக்குகள் இருப்பது தெரிய வந்தால், உடனே பாஸ்போர்ட் முடக்கப்படும்.

கட்டணம்

நார்மல் பாஸ்போர்ட்

(36 பக்கங்கள் கொண்டது) – 1,500 ரூபாய்.

60 பக்கங்கள் கொண்ட ஜம்போ பாஸ்போர்ட் (அடிக்கடி வெளிநாடு செல்கிறவர்கள் பயன்படுத்துவது) – 500 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும். தட்கல் – 3,500 ரூபாய்

மைனர் – 1,000 ரூபாய்

டேமேஜ் / லாஸ்ட் – 3,000 ரூபாய்

புதுப்பித்தல்

ஒருமுறை எடுக்கும் பாஸ்போர்ட் 10 ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகும். தற்போது பாஸ்போர்ட்டில் வருடங்களை நீட்டித்து ‘ரெனியூவல்’ செய்யப்படுவதில்லை. எனவே, பாஸ்போர்ட் காலாவதியானால் மீண்டும் புது பாஸ்போர்ட்தான் பெற வேண்டும். காலாவதி தேதிக்கு இன்னும் ஓராண்டு இருக்கும்போது தொடங்கி, காலாவதி தேதிக்கு பின் மூன்று ஆண்டுகள் வரை விண்ணப்பிக்கலாம். பழைய பாஸ்போர்ட்டை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். விலாசம் மாறியிருந்தால் அதற்கான சான்றிதழ்களுடன் புதுப்பிக்கலாம். பாஸ்போர்ட் புதுப்பிக்கhttp://www.passportindia.gov.in என்ற இணைய முகவரியில், ரீ-இஷ்யூக்கான காரணத்தை க்ளிக் செய்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இரண்டாவது முறை விண்ணப்பித்தாலும் புதிதாக விண்ணப்பிப்பவர் போலவே பாஸ்போர்ட் சேவை மையங்களை அணுகி நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வெளிநாட்டில் தங்கி இருக்கும்போது பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அணுக வேண்டும்.

குழந்தைகளுக்கு

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் எடுக்கும்போது, அவர்களின் பெற்றோருக்கு பாஸ்போர்ட் இருந்தால் காவல்துறை அறிக்கை தேவைப்படாது.

பெயர் மாற்றம்

பாஸ்போர்ட்டில் பெயரில் ஏதேனும் தவறுகள் இருந்தால், பெயர் சரியாக இருக்கும் ஆவணங்களை மீண்டும் சமர்ப்பித்து, பாஸ்போர்ட்டை ரீ-இஷ்யூ செய்துகொள்ளலாம். ‘மேஜர் நேம் சேஞ்ச்’ எனில், மாற்றப்பட்ட பெயரை, தங்களுடைய நிரந்தர முகவரி மற்றும் தற்போதைய முகவரி உள்ள இடங்களில் பிரசுரமாகும் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து, அந்த செய்தித்தாளோடு மற்ற தேவையான ஆவணங்களை இணைத்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

திருமணத்துக்குப் பிறகு…

கணவரின் பெயரை தங்கள் பெயருடன் இணைக்க விரும்பும் பெண்கள் நவம்பர் 24, 2009-க்குப் பிறகு திருமணமாகி இருந்தால் திருமணச் சான்றிதழை இணைத்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்கள் திருமணச் சான்று அல்லது ஜாயின்ட் நோட்டரி அஃபிடவிட் (Joint Notary Affidavit) இணைக்க வேண்டும்.

பாஸ்போர்ட் தொலைந்தால்…

உடனே காவல் நிலையத்தில் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் உங்களுடைய பாஸ்போர்ட்டை பயன்படுத் தாதவாறு அது முடக்கப்படும். உங்களுடைய பாஸ்போர்ட் கிடைக்காத பட்சத்தில், அவர்கள் ‘Non Traceable’ சான்றிதழ் தருவார்கள். பிறகு பாஸ்போர்ட் ரீ-இஷ்யூவுக்காக விண்ணப்பித்து, தொலைந்த பாஸ்போர்ட்டின் நகல் (இருந்தால்), ‘அனக்சர் எல்’

என்ற உறுதிமொழிப் பத்திரம்,

நோட்டரி பப்ளிக் ஒப்புதல் இவற்றை எல்லாம் இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஏமாற வேண்டாம்!

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தெரியாதவர்கள், ஏஜென்டுகளை நாடும்போது கவனம் தேவை. அவர்கள் இஷ்டம்போல பணம் வசூலிக்கக்கூடும். உங்கள் பகுதியில் (வட்டாட்சியர் அலுவலகத்தில்) உள்ள இ-சேவை மையத்தை அணுகினால், உரிய செலவில் பாஸ்போர்ட் பெறமுடியும்.

மேலதிக தகவல்கள்

பாஸ்போர்ட் தொடர்பான சந்தேகங்களை மேலும் தெளிவுபடுத்திக்கொள்ள www.passportindia.gov.in என்ற இணையதள முகவரியையோ அல்லது 1800-258-1800 என்ற டோல்ஃப்ரீ எண்ணையோ தொடர்புகொள்ளுங்கள்.

சு.சூர்யா கோமதி

__._,_.___

News

Read Previous

ஹஜ் வழிமுறைகள்

Read Next

முட்டாள்கள் தினக் கவிதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *