கல் நட்டோரே; கவிதைக்கு ஒன்றும் நடுங்களேன்.. (கவிதை) வித்யாசாகர்

Vinkmag ad

ம்மாவை காணாதப் பிள்ளையி னழுகை
அணைத்து முத்தமிட்டவளின் பிரிவு
இழுத்துக் கட்டிக்கொள்ளும் தோழமை
இனி இல்லாது போனவரின் மரணம்
இப்படிச் சொல்லாமல் விடுபட்ட –
கவிதையினுள் நிகழ்கிறது
எனக்கான தற்கொலை..

எட்டிப் பார்த்த முகம்போல எழுத்து
நேரில் நின்றிருந்தும் –
ஏனென்றுக் கேட்டிடாத தவிப்பு
உறவின் பகையிலழும் சிறுபிள்ளையின் ஏக்கம்
பகலென்றும் இரவென்றும் நேரும் அநீதியின்
வடுக்களில்
சுட்டும் சாகாத வரமாய்ச் சொல்;

நித்தம் செதுக்கும் உளியாய்
வார்த்தையுள் வலி,
குற்றம் என்றால் கர்ஜிக்கும் மனதாய்
கவிதையுள் கோபம்

கோபத்தை நீர்க்குமிழியாக்கிட்ட அன்பு
அன்பூரிய காதல்
காதலின் ஆழத்தில் விளையும் பண்பு
பண்பின்’
வீரத்தின்’
வாழ்க்கையின் சுவடாய் –
மனதுள் கனக்கும் கதை
கதையாய்
கதை கதையாய் இலக்கியம்..,

இலக்கியக் கடலில் தெரியும்
மன ஆழம்,
இசையும் திசையெல்லாம் உருவாகும்
மொழியின் வேகம்,
மொழியின் நீள
நீள தெருவெங்கும்
கோடான கோடி நம் வரலாறு..,

வரலாறுதோறும் போர்
வரலாறுதோறும் கண்ணீர்
வரலாறுதோறும் மரணம்
வரலாறாய் வாழும் மனிதர்களும் வெற்றியும்
தோல்வியுமாய்
இனம்
மதமென நீண்டு
பெருத்து
தீநாக்கு சுடும் சாதி

முற்றும்
துறந்த மனதாய்
உள்ளின் நிர்வாணம்

கற்றும்
தீராத காதலாய்
காதலாய்
ஆசை
ஆசை
அத்தனை ஆசையும் சுருங்கும் கவிதை

கவிதை
விதை
விதையாய்
விதை விதையாய் சுருங்கும் மொழி

கடுகாய் சிறுத்து
அணுவாய் உடைந்து
அணுஅணுவாய் பிரிந்து
பிரிந்து
அதில் பாதி
அதில் பாதி
அதில் பாதியானாலும்
அதிலுமினிக்கும் இனிப்பாய் இனிக்கும் மொழியினழகு;

ஆகா..

ஆகா…

அழகு அழகு..
மொழியழகு –
பேசப்பேச
எழுத எழுத
உணர உணர
தீரா அழகு!! தீரா அழகு மொழி!!
———————————————————————————–
வித்யாசாகர்

News

Read Previous

ஒற்றுமையே இஸ்லாமியச் சமுதாயத்தின் பாதுகாப்பு !

Read Next

EIFF ஷார்ஜாவில் நடத்தும் மக்கள் சங்கமம்

Leave a Reply

Your email address will not be published.