கவிதைகள் (All)

சிந்தனை என்னும் சிவப்புக் கம்பளத்தில்…..

காதலின் பிரிவில்
காதல் மனையாளை விட்டுக்
கடல் தாண்டும் பிரிவில்
தெரியும் பாருங்கள்
ஒரு வலி….
அதுதான் பிரிவின் வலி.

பிரிந்தவர் மீண்டும்
சேரும்போது
பெருமூச்சுக்கிடையில்
அழுகையோடொரு
பிரசவம்
நடக்கும் பாருங்கள்…
அதுதான்,
நிம்மதி!மகிழ்ச்சி!!

பத்ருக் களத்தில் தொடங்கிய
எமது வெற்றி ஊர்வலமே,
கடந்த ஷவ்வாலில்
எமைப் பிரிந்து சென்ற
ரமளானே!

இதோ, நீ
வறண்ட ஆற்றில் கரை
புரண்டுவரும்
அருள் வேள்ளமாய் எம்மை
அண்முவதைக்
கட்டியம் கூறிக்
கொட்டி முழக்க
வந்தேவிட்டது-
பராஅத்!

எங்கோ பெய்யும்
மழையின் மண்வாசனை போல்
இப்போதே
சொக்கவைக்கும்
சொர்க்க நறுமணம்…

ரமளானே,
உவப்பத் தலைகூடி
உள்ளப் பிரிந்தோம்…
இதோ-இப்போது
உன்னால் மீண்டும்
உவக்கத் தொடங்கி
எங்கள்
உள்ளங்களை
அலங்கரிக்கலானோம்…

எங்கள்
சிந்தனை என்னும்
சிவப்புக் கம்பளத்தில்
உன்
அருள்வளங்கள் என்னும்
திருவடிகளைப் பதித்து
ஆன்மீக நடைபயின்று வா!

நாங்கள்
வெற்றி பெறும்
வித்தகப் பயிற்சிகளைக்
கற்றுத் தா!

லா ஹவ்ல
வ லாகுவ்வத்த
இல்லா பில்லாஹில்
அளிய்யுல் அளீம்….

—ஏம்பல்தஜம்முல்முகம்மது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button