முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை :
தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை. சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 14.42 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வரிசையில், சமூக நீதிக்காக அரும்பாடுபட்ட தலைவரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவரும், தமிழுக்கு செம்மொழி தகுதியினைப் பெற்றுத் தந்தவரும், தனது எழுத்து மற்றும் பேச்சுக்களின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அனைத்து நூல்களும் தமிழ்நாடு அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த வியாழக்கிழமை (22.8.2024) ஆணை வழங்கியுள்ளார்.