கவிதைகள் (All)

முகவரி

– வைரமுத்து

தனக்காக அல்ல…
தன் திரிக்கரு
சிதைவதை
எண்ணியே
அந்தத் தாய்
அழுகிறாள்

மேனியில் தீ விழுந்து
நரம்புதான் எரியும்…
இங்கோ
நரம்பிலே தீ விழுந்து
மேனி எரிகிறது

மரணத்தை
வரங்கேட்டா
அந்த
உச்சித்தவம் நடக்கிறது?

அந்த ஒற்றைப் பூக்கொண்டை
செடியையே தின்னுகிறதே

விரலை அழிக்கவா
அந்த நெருப்புநகம் முளைத்தது?

நெருப்புப் பாசனம்
அங்கு
நீர்ப்பயிர் வளர்க்கிறது

மெளனத்தை
திரவ வார்த்தைகளால்
அந்தத் தீ நாக்கு
எத்தனை அழகாய் உச்சரிக்கின்றது?

எந்த துயரத்தை எழுதியெழுதி
இப்படி மசிகசிகிறது இந்தப் பேனா?

கண்டு சொல்லுங்கள்
கண்ணெதிரே நடப்பதென்ன
கொலையா? தற்கொலையா?

எப்பொழுதுமே இதற்குத் தேய்பிறையென்றால்
இது என்ன
சபிக்கப்பட்ட நிலவா?

இந்தத்
தீக்குளிப்பின் முடிவில்
மரணத்தின் கற்பு ருசுவாகிறது

இந்தச் சிதையைக் –
கலங்கரை விளக்காய்க் கருதி
விட்டில் கப்பல்கள்
முட்டி மூழ்கும்

அங்கே வடிவது
கண்ணீரென்றால்
கண்கள் எங்கே?

ஓ கண்களைத் தேடியே
அந்த அழுகையோ?

இந்தப் பிணத்திற்குக்
கொள்ளி வைத்த பிறகு தான்
உயிர் வருகிறது

மனிதனைப் போலவே
இந்த
அஃறிணையும் நான்
அதிகம் நேசிப்பேன்

எனக்குள் இது
சாவைச் சாகடிக்கும்

என் இரத்த நெய்யில்
இது
நம்பிக்கைச் சுடரேற்றும்

வாருங்கள் மனிதர்களே
மரணத்திற்கும் சேர்த்து நாம்
மெளன அஞ்சலி செலுத்துவோம்

அதோ
உயிரின் இறுதி ஊர்வலம்
உடல்மேலேயே நடக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button