கட்டுரைகள்

பன்றியை வெறுத்து ஒதுக்குவது ஏன்?

வெறுத்து ஒதுக்குவது ஏன்?

 

அண்மையில் பன்றி ஏன் வெறுத்தொதுக்கப்பட்ட விலங்கானது என்பது குறித்த விளக்கம்/விவாதம் நம் குழும வலைத்தளங்களில் வலம் வந்ததைச் சகோதரர்கள் கவனித்திருப்பீர்கள்.”அல்லாஹ் ஹராமாக்கிவிட்டான்” என்பதே நமக்குப் போதுமான காரணம் என்றாலும் உரிய விளக்கம் பெற முயல்வது வரவேற்கத் தக்கதே.

 

உண்ணும் உணவிற்கும் அதனால் ஏற்படும் உடல்,மன பாதிப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை முற்றிலும் மறுத்துவிடமுடியாதது.

 

மனிதனின் நற்குணங்களைக் கொண்ட பறவை,விலங்கு போன்ற உயிரினங்களும் மிருகங்களின் சிற்சில தீய இயல்புகளைக்கொண்ட மனிதர்களும் நம் பார்வையில் படவே செய்கின்றனர்.பன்றியின் தலையாய இழிதகைமை,அதன் மானமின்மையே!இதைப் பழந்தமிழ் மக்கள் அறிந்துள்ளனர்.”பாசிதூர்த்துக் கிடந்தபார் மகட்குப் பண்டொருநாள் மாசுடம்பில் நீர்வாரா மானமில்லாப் பன்றியாம்…”(ஆண்டாள் பாசுரம்) என்ற பாடற் பொருள் கவனிக்கத்தக்கது.

 

ஒரு திருக்குறளுக்கான பொருள் விளக்கத்தின் மூலம் மானத்தில் சிறந்த விலங்கு மான் -அதாவது கவரி மான் –என்ற கருத்து பரவலாகியுள்ளது.அது உவமை கருதிச் சொல்லப்பட்டதே அன்றி இயல்பைக் கருதி அல்ல.அதுவும் மான் அல்ல;மா-அதாவது கவரிமா எனும் ஒருவகை விலங்கு(மிருகம்).”மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்”என்பதே திருக்குறள் மூலம்.பொருள் கூறிய புலவர்கள்,’கவரிமா’ என்பதைக் கவரி மான் என்று ஆக்கிவிட்டனர்.”நறந்தை நறும்புல் மேய்ந்த கவரி”-என்று புறநானூறு கூறும் விலங்கும் திருக்குறள் கூறும் விலங்கும் ஒன்றாக இருக்கக் கூடும்.

 

கவரிமா, “மயிர் நீப்பின்” வாழ இயலா விலங்கு;தற்கொலை செய்து கொள்ளும் முயற்சி தேவை இன்றி,இயற்கைச் சூழலை எதிர்கொள்ள இயலாது இறந்துபடும் என்பது விலங்கியல் கூறும் விளக்கம்.(ஒருவகைப் புறா,அன்னப் பறவை போன்றவை ஒரு துணை அன்றி மறு துணை தேடாதவை என்பதால் அவை கற்பும் மானமும் மிக்கவையாக இலக்கியங்களில் கருதப் படுகின்றன.)

 

மானமுள்ள மனிதன் உலகை/வாழ்வை எதிர்கொள்வது போல மானமற்றவன் எதிர்கொள்ள இயலாது.மானத்தோடு வாழ விரும்பும் மனிதனின் மான இயல்பை,உணர்வை அணுவளவு பாதிப்பதாயினும் அதற்குக் காரணமான எதனோடும் தொடர்பற்றவனாக இருப்பதே அவனுக்கு ஏற்றம்.

பன்றி,மது முதலான ஹராமாக்கப்பட்ட எதனோடும் பொருத்திப் பார்த்தாலும் அது மானத்தைப் பாதிப்பதாக இருக்கக் காணலாம்.

 

அல்லாஹ் ஹராமாக்கியவற்றை வெறுத்தொதுக்கி வாழ்பவர்கள் மன வலிமையும் மானமும் வீரமும் உள்ளவர்கள் என்றால் அது மிகையல்ல.

 

அல்லாஹ் நம்மைப் பாதுகாத்து நேர்வழி நடத்தப் போதுமானவன்.

 

 -ஏம்பல் தஜம்முல் முகம்மது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button