கவிதைகள் (All)

ஸஹாபாக்கள் …! ‘பத்ரு ஸஹாபாக்கள் !

 

(’தமிழ்மாமணிகவிஞர்மு. ஹிதாயத்துல்லாஇளையான்குடி)

 

 

மரணம்,

பலரைப் புதைக்கிறது’

சிலரைத்தான்

விதைக்கிறது ! அந்தவகையில்

சங்கைக்குரிய

ஸஹாபாக்கள்

தீன் தழைக்க விழுந்த

விதைகள் !

 

ஏகத்துவ விடியலுக்குத்

தங்களையே…

ஷஹீதாக்கிக் கொண்ட

ராத்’திரி’கள் ! – அந்த

பூத்திரிகளை

காபிர்கள்

பொசுக்கிப் பார்த்த போதெல்லாம்

அதில்,

ஏகத்துவ மணமே

எழுந்தது !

 

 

உத்தம ஸஹாபாக்கள்

எதிர்கால இனிப்புக்காக,

தம் காலத்தையே

தணலால் எழுதிக்கொண்ட…

தங்கங்கள்

நூரே முகம்மதியாவின்

பேர் காக்க எழுந்த

பிரமிடுகள் !

 

 

அனல் அணைத்தும்

அழியாத

வரலாற்றின் ஒளிமிக்க

ஓலைச் சுவடிகள் !

 

அருமைநாயகப் பள்ளியில் படித்த

மாணவ மாணிக்கங்கள் !

சத்திய தீனை

கல்பில் அடை காத்த…

கண்மணிகள் !

 

தமக்கு மட்டுமல்லாது

தீனுக்கும்

சேர்த்தே சுவாசித்த

சினேகங்கள் !

 

மொத்தத்தில்,

வல்ல அல்லாஹ் விற்கும்

அவனருமை ரசூலுக்கும்

உவப்பான அமல்களைச்செய்த

இனியவர்கள் !

பத்ரு ஸஹாபாக்கள் !

தியாகச் சுடர்கள் !

 

 

தீன் காக்க எழுந்த

இமயங்கள் !

 

 

வீரபத்ரீன்களே..!

நீங்கள்

காலத்தின் கெளரவம் !

கண் வியக்கும்

யெளவனம் ! – இந்த

ஞாலம் கண் விழிக்க

ஞாயிறாய் எழுந்த

நூரே முகம்மதின்

பேரன் பிற்குரிய பேழைகளே..!

பெட்டகங்களே…!

உங்கள் பெருமைகளே, பெருமைகள் !

அல்ஹம்துலில்லாஹ் !

 

 

ஈமானின் ஈட்டிகளே …!

அன்று நீங்கள்

பத்ரில் கால்வைக்காவிட்டால்….

உலகம் இன்று

பாழும் குப்ரில்

குப்புறக் கிடந்திருக்கும் !

 

 

எங்கள் பாசத்திற்குரிய

பாசப் பாசனங்களே…!

அன்று …

உங்களுக்கோர்

தர்ம சங்கடமான நிலை !

பத்ருப் போரில்

விரல்களே

வேற்றுமையாகி

வெவ்வேறு அணியில் நின்ற

வேதனை !

 

 

விழிகளுக்கெதிராக,

இமைகளே

வாள் தூக்கிய

கொடுமை !

ஆம்.

 

தந்தை ஓரணியெனில்

மகன் எதிரணி !

மாமன் ஓரணியெனில்

மருமகன் எதிரணி !

 

 

இப்படி,

உறவுகள்

குறுக்கே நின்ற போதும் கூட…

மயங்காது

தயங்காது,

தீனுக்கே

முன்னுரிமை தந்து

சமர் செய்திர்கள் !

 

 

உங்கள் நேர்மையின்

தடங்களுக்கு

வல்ல அல்லாஹ் (ஜல்)

உங்களுக்கே…

வெற்றியைப் பரிசளித்தான் !

ஆம் !

 

ஆயிரத்தை

முன்னூற்றிப் பதின்மர்

முறியடித்தீர்களே …!

எந்தக் கை கொண்டு…?

இறை நம்பிக் கை

கொண்டு தானே…

 

 

அபுஜகில் என்ற

இஸ்லாத்தின் எதிரியை

அவனுடைய

ஆணவக் கோட்டையை

பத்ரில் சாய்த்தீர்களே …!

தகர்த்தீர்களே…!

 

 

இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காய்

பூத்த…

மழை வானங்களே…!

உங்களின்

தன்னலமில்லாத சேவைகளை

தியாகங்களைச்

சரித்திரம்

வைரங்களால் … எழுதும் !

 

 

உங்களின்

சாமர்த்தியத்தைப்

பல்கலைக் கழகங்களே …பயிலும் !

அல்ஹம்துலில்லாஹ் !

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button