முல்லையில் விழுந்த முள்!

கவிதைகள் (All)

ஆன்மீகத்தின்
அடித்தளத்தில்
விசக் கிருமிகள்
வேரூன்றியதால்…
நுனிக் குருத்திலும்
நெரிக்கப் படுகின்றன
நீசச்
சிலந்திகளின் வலை..!

செழித்து வளர்ந்த
பாரதச் சொலையில்
இன்று…
குருத்துப்புழுக்களின்
கூட்டமைப்பு..!

மீறி…அரும்பும்
மொட்டுக்களை அகற்ற
வெட்டுக் கிளிகளின்
சுற்றுப் பயணம்!

தேசவனத்தில் பாயும்
கலாசார நீரோடையில்…
மதத்தின் பெயரால்
மையம் கொண்ட
வன்முறை கழிவுகள்.

நீதி மலர்ந்த
வேதப் பயிரில்
விசிறப் பட்ட
விச விதைகள்
வேர் பிடித்தபோது…
நச்சுப் பயிரின் ஆக்ரமத்தில்
நசுக்கப் படுகிறது
மனிதமும் நேயமும்..!

மோகங்களின் பிரதியாய்
யாகங்களும்
தியானங்களுமானதால்…
இன்று
ஆலயங்களும்
மடங்களும் கூட
அறிமுகமாக்கப் படுகிறது
ஆயுதக் கிடங்குகளாய்..!

போற்றத் தக்க
மார்கங்களே
மதமாய் மாறியதாலே…
மானுடம்,
மதத்தை வாங்கிட
மதியை விற்றபோது
“மலிவானது உயிரின் விலை!”

முடிவுறாத வார்த்தையின்
நடுவே…
முடமாய் விழுந்த
முற்றுப் புள்ளிகளாய்…
முன்னுறையே
இன்னும் முழுமையாகாத
நிலையில்,
சில
முகமற்றவர்களால்
எழுதப் படுகிறது
என் தேச சரிதத்தின்
முடிவுரைகள்..!

எண்ணத் தோன்றுகிறது.
ஆம்!
எண்ணத்தான்
தோன்றுகிறது!

முகவரியில்லாத- சில
முதுகெலும்பற்றவர்களுக்கு
முட்டுக் கொம்பாய்தானோ
என் பாரதமென்று!

வசந்த வாசல்
அ.சலீம் பாஷா-துபாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *