பசுமை

இலக்கியம் கவிதைகள் (All)

இராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தில் 17411 அன்று ‘பசுமை’ என்ற தலைப்பில் வாசித்த கவிதை

(பச்சை சட்டை போட்டவனாய், பச்சை பேனா வைத்துக் கொண்டு, பச்சை நிறப் பாட்டிலில் தண்ணீரோடு மேடை ஏறுகிறேன்)

பசுமை

சூரியத் தேரின்
ஏழ் நிறக் குதிரைகளில்
பச்சைக் குதிரை நான்.

ஈர நிலத்தில்
ஊன்றும் விதைகள்
முளைக்கும் போதே
பிறக்கும் நிறம் நான்

புதிதாய்ப் பிறக்கும்
ஒவ்வொரு
பச்சைக் குழந்தையும் நான்

மேகப் பஞ்சிலிருந்து
மழை நூல் இறங்க
ஏர்த் தறி கொண்டு
உழவன் நெய்து
வயல் வெளி எங்கும்
விரித்துப் போடும்
பச்சைப் பட்டாடை நான்.

பூமியெங்கும்
நதிகள் பாய
பொதிந்த மண் வளம் நான்

வாலிபத் தோளென
எழுந்த மலைகளில்
வான் தொட வளர்ந்த
மரங்கள் நான்

அடர்ந்த காடுகள் நான்

அழகு பச்சைக் கிளி நான்

வெட்டுப் பட்டாலும்
குருத்தாய்
வெளிப்படுவேன் நான்

ஓஸோன் படலத்தின்
ஓட்டைகள்
அடைப்பவன் நான்

புவி வெப்பம் குறைக்கப்
பசுமைப் புரட்சிக்குப்
பிரகடனம் செய்பவன் நான்

பூ மணக்கலாம்
காம்பு வேரெல்லாம் மணக்கும்
துலாபாரத்தில்
இறைவனுக்கீடாய் எடை நிற்கும்
துளசி பச்சை நான்

குயவன் கைச்
சக்கரம் உருள
பானையாய் எழும்பும்
பச்சை மண் நான்

முதிர் கன்னிகளிடமும்
இளம் விதவையரிடமும்
பட்டுப் போகாத
பசுமை நான்
எதிர்கால ஒளிதேடி
இளைய சமூகத்திடை
ஆக்கமும் ஊக்கமுமாய்த்
தேங்கிக் கிடக்கும்
பச்சையம் நான்

காதல் தொடர
குறிப்புக் காட்டும்
காதலியின் கன்ணசைவு நான்

காதலர் இருவர்
கருத்தொருமித்த
கற்பு வாழ்க்கைக்குப்
பச்சைக் கொடி நான்.
போக்கு வரத்து நெரிசலில்
புறப்படுவதற்கான
உத்தரவு நான்

பால் சுரக்கும்
பசும் புற்பரப்பு நான்
பூப்பதற்கான
உத்தரவாதம் நான்
ஊற்றெடுத்துப் பெருகும்
உயிர்ப்புள்ள
பச்சைத் தண்ணீர் நான்
பச்சைக் காய்கறிகள்
வைட்டமின்களின் பிறப்பிடம்
கீரையோ இரும்புச் சத்தின் இருப்பிடம்
தங்கப் பொடி தவறினாலும்
கீரைப் பொடி தவறக் கூடாது
இது கீரையின் மகத்துவம்

மனிதா,
தாவரத்துக்கு
ஓரறிவு என்றாய்
யார் வீட்டு வாசலிலாவது
‘அம்மா தாயே,என்று
அவை போய் நின்றதுண்டா
ஆறறிவு கொண்ட நீ
உணவுக்காக
ஆளாய்ப் பறக்கிறாயே
கல்லைத்தான் மண்ணைத்தான்
காய்ச்சித்தான் குடிக்கத்தான்
கற்பித்தானாவெனக்
கதறுகிறாயே

இருந்த இடத்திலிருந்தே அவை
உணவு தயாரிக்கும் வித்தையைப் பார்
சூரிய ஒளிச் சேர்க்கையில்
அவை உணவு தயாரிக்க
நீயோ
மின்சாரமாவது தயாரித்தாயா
சோலார் எனர்ஜியை
முழுமையாக அவைகள்தான்
பயன் படுத்துகின்றன
நீயோ
மின்வெட்டிருளில்
மீளாமல் அல்லவா மூழ்கிக்கிடக்கிறாய்

உங்களில் இருவரை மட்டும்
தாவரங்கள் நினைவு கூர்கின்றன
ஒருவர், முல்லைக்குத் தேரீந்த பாரி
மற்றொருவர்… மற்றொருவர்…
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன் என்ற வள்ளலார்
உங்கள் அனைவரையும்
நினைக்கும் படியாய்
நீங்கள் மாறவேண்டாமா

மனிதா,
உன்னைப் பச்சை நிறத்தில் பார்க்க
எனக்கோர் ஆசை
இருந்த இடத்தில் உணவு கிடைக்கும்
ஆனால்
நீ இயங்க வேண்டும்
அதற்காகவே
உன்னைவிட்டு நான் பிரிந்தேன்
இருப்பினும்
ஈர நெஞ்சு உடையவனாய் இருப்பாயேல்
திண்ணமாய் வந்து ஒட்டிக் கொள்வேன்
இறைவனின் நிறம்
எதுவாக இருக்கும் என
நான் யோசித்ததுண்டு
என் நிறத்தில் இருப்பானோ
ஆம், இருக்கிறான்
பச்சைமாமலைபோல் மேனியாய்

சிவபெருமானும்
உத்தரகோச மங்கையில்
மரகதக் கல்லில்
என் நிறத்தில் வீற்றிருக்கிறான்
இப்போதெல்லாம்
என் வண்ணம் மறைந்துவிடுமோ
என்று கவலைப் படுகிறேன்
மலைபோல் குவியும்
பிளாஸ்டிக் பைகளால்
மண்மகள் சிறை வைக்கப் படுகிறாள்
உலகப் பொருளாதார யானை
பெருந்துதிக்கையால்
கடைசிச் சொட்டுவரை
இயற்கையை உறிஞ்சுகிறது
மண்ணைக் கெட்டியாய்ப்
பிடித்திருக்கும் மரங்கள்
தினமும் வெட்டப் படுகின்றன.
குவாரிகளில்
நதிமங்கையின் கர்ப்பப்பையே
வெட்டியெடுக்கப் படுகிறது
உங்கள் வாகன நச்சுக் காற்று
உங்களுக்கே எமனாகிறது
சாலைகள் என்ன, உங்களுக்கு
மருத்துவமனைகளா?
பின் ஏன் முகமூடி போட்டுச் செல்கிறீர்கள்?
ஆக்ஸிஜன் கடைகளில் போய்
உயிரையல்லவா புதுப்பித்துக் கொள்கிறீர்கள்
நீங்கள் இப்படி என்றால்
உங்களுக்கு அடுத்த தலைமுறை… ?
ஒரே வழி
மரங்களை நண்பர்களாக்குவதே
அவர்களே ஆக்ஸிஜனை
வாரி வாரி வழங்கும் வள்ளல்கள்
இரண்டுக்கு மேல் வேண்டாம் என்றார்கள்
குழந்தைகளைத் தானே
மரக்கன்றுகளை வளர்க்கலாமல்லவா?
விளை நிலத்தைக் கூறுபோட்டு
வீடுகளாக்காதீர்கள்
துணிப் பைகளையும் பாத்திரங்களையும்
மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்
பிளாஸ்டிக் பைகளுக்கு
விடை கொடுங்கள்

வாழ்க்கைச் சாலையில்
வாய்மையாளர்களும்
நேர்மையாளர்களும்
முன்னேறிச் செல்ல
நான் பச்சை விளக்கு
அன்னா கஸாரேக்கள்
ஆனந்தமாகச் செல்வார்கள்
கயவர்களுக்கும்
நயவஞ்சகர்களுக்கும்
ஜனநாயகப்
படுகொலையாளர்களுக்கும்
ஊழல்வாதிகளுக்கும்
லஞ்சப் பேர்வழிகளுக்கும்
நான் பச்சை விளக்கல்ல
எச்சரிக்கும் சிவப்பு விளக்கு
இன்று
மலைவிட்டு இறங்கி
மக்கள் எதிர்சேவை ஏற்று
தல்லாகுளம் வரும் அழகர்
அதிகாலை பச்சைப் பட்டுடுத்திக்
கதிரவன் ஒளிபட்டுத்
தகத்தகவென மின்னும்
தங்கக் குதிரை மீது
தாவி அமர்ந்து
மளமளவென்று
ஆற்றில் இறங்குவாரேல்
மாதம் மாரி பல பெய்யும்
மடையெல்லாம் நீர் புரளும்
காணுமிடமெல்லாம்
கண்ணுக்குக் குளிர்ச்சி தான்
இந்தியத் திருநாட்டின்
தேசியக் கொடியில்
அடிநாதமாய்அடித்தளமாய்
என் நிறத்தைக் காண்கிறேன்
இந்நாட்டின் பொன்கொழிக்கும்
மண் வளமாய்
வயல் நங்கையின்
ஒப்பனையாய்
மாட்டோடு மாடாய் உழைக்கும்
உழவனின் கம்பீரமாய்
நாற்று மீது நடனமிடும்
காற்று நங்கையின் கையசைவாய்
வறுமை ஒழிக்கும் பேராற்றலாய்
மாசுக் கட்டுப்பாட்டுக் காவலனாய்
என் பச்சை நிறம் என்றும் இலங்கும்
உயர்ந்த கம்பத்தில்
விண்ணைத் தொட்டுப் பறக்கும்போது
இறும்பூது எய்துகிறேன்
என்னை நோக்கி
தலை நிமிர்ந்து
நெஞ்சுயர்த்தி
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை
வீரவணக்கம் செய்யும்
ஆயிரமாயிரம் கோடி கோடி
கைகளைப் பார்க்கிறேன்
பெருமிதத்தோடு ஏற்றுக் கொள்கிறேன்
ஜெய்ஹிந்த்

உரப்புளி நா.ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *